வெள்ளி, 4 டிசம்பர், 2020

இன்னொரு முறை - Can I.

வலிகளுக்கு பஞ்சமில்லை வாழ்வில்.
வாங்கிய அடிகள் எண்ணிக்கையில் அடங்கவில்லை.
வாழ்க்கை போராட்டங்களுக்கு முடிவில்லை.
முடிவு என்ன  என்று ஆரம்பத்தில் தெரிவதில்லை.

சுகித்து இருக்கும் தருணங்கள் சில கணங்களே.
சுகத்திற்காக ஏங்கும் தருணங்களே அதிகம்.
ஏக்கத்தில் விடும் பெரும்மூச்சுகள் மனதின் வெளிப்பாடு.
வெளிப்படுத்தாத ஏக்கங்கள் கண்ணீரில் கரைகிறது.

வலிகள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
மீண்டும் எழுந்திருப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் எழுந்தால்,
விழப்போகும் அடுத்த அடியினால் ஏற்படும் வலியை தாங்க சக்தி இல்லை.
இப்படியே சாகவும் விதியில்லை.

எல்லாம் முடிந்தது என்று துவண்டு விழும் வேளையில்,
வலிகள் என்னை மேற்கொள்ளும் பொழுதுகளில்,
மன உறுதி கைவிடும் தருணத்தில், ஒரு சத்தம்,
நெஞ்சின் ஆழத்தில், ஓர் ஓரத்தில் எழும்பும் இதயத்துடிப்பின் சத்தத்தில்,
நீ விழுந்தாலும், வீழ்ந்தாலும் நான் தொடர்ந்து துடிப்பேன்,
எனக்கு விதித்த நாள் வரை.

என் கடமை; துடிப்பது, நான் துடிக்கிறேன்.
நான் யாரையும் ஜெயிக்க துடிக்கவில்லை.
என்னை யாரும் துடிப்பதற்காக பாராட்ட போவதில்லை.
என் கடமை துடிப்பது, நான் துடிக்கிறேன்.

நீ கைவிடுவது முயற்சியை அல்ல.
நீ அணைக்க துடிப்பது உன் வீழ்ச்சியை.
நீ யார் என்பது வெற்றியின் வரலாறு.
அந்த வரலாற்றின் பக்கங்கள் முயற்சிகள் மட்டுமே.
முயற்சி இல்லை என்றால் வரலாறு இல்லை.
வரலாறு இல்லை என்றால் நீ இல்லை.
நீ இல்லை என்றால் நான் துடிப்பது வீண்.
பிணங்களின் இதயங்கள் துடிப்பதில்லை.
நான் பிணத்துக்கு துடிக்க விரும்புவதில்லை.
நான் துடிக்க விரும்புகிறேன்.
நீ வாழ விரும்புகிறாயா? எனக் கேட்டது

கருணை காட்டுங்களேன்.
நான் சிறிது வாழ்ந்து கொள்கிறேன்.
அதிகம் வாழ ஆசை இல்லை.
ஒரு நடை பிணத்திற்காக துடிக்கிறோம், 
என என் இதயம் எண்ணாமல் இருந்தால் போதும்.

இன்னும் ஒரு முறை முயற்சி செய்யட்டுமா?


                                                                             

திங்கள், 7 செப்டம்பர், 2020

யூதாஸின் தாய் - unconditional love

 

                                                    credit: third party image reference

பெத்த பயல் என்ற போதே,  தாய் மனது ஒரு வயது வரை பால் சுரக்கும், வாழ்நாள் பூரா பாசம் சுரக்கும். மகளை ஒதுக்கிவிட்டு, பயலை அணைக்கும். பெண் பிள்ளைக்கு பல கட்டளைகள் இடும். ஆண்மகனிடம் யாசகம் கேட்பது போல் அறிவுரை கூறும். சிறுவயதில் அவனை விட இவள் பலசாலியாக இருந்தாலும், அவன் அழுகைக்கு முன் இவள் பலம் இழந்து நிற்பாள். அடிக்க ஓங்கும் கை, அவன் அழுகையில் தானே கீழே இறங்கும். அப்பானின் கண்ணீர் அவள் பலத்தை முழுங்கும்.

அவள் பலவீனமாகும் போது அவன் ஊற்றப் போகும் கால் வயிற்றுக் கஞ்சிக்காக, இன்று அவள் கஞ்சி குடித்துவிட்டு, அவனுக்கு சுடு சோறு போடுவாள். குடிகார கணவன் குடித்துவிட்டு, அடிக்க வரும் போது பிள்ளைகளை காக்க பதறி ஓடுவாள். அவன் அடிக்கும் அத்தனை அடிகளையும் அவளே தாங்குவாள். அடித்து முடித்து அவன் ஓய்ந்து ஒரு ஓரத்தில் உருளும் போது, “குடும்பத்தின் அஸ்திவாரம் அடுத்து அவள் மகன் தான்” என எண்ணி அவனை மார்போடு அணைத்து தூங்குவாள்.

பொட்டை பிள்ளைகள் வம்பிழுத்தால் கொதித்து விடுவாள். அவளுடைய ஒரே நம்பிக்கை, எதிர்காலம், அவனை நகைப்பதா? என கோபத்தில் முகம் சுருங்கி விடுவாள். “நாளைக்கு தாய்மாமன் சீர் அவன் தாண்டி செய்யணும்” என எச்சரிப்பாள். “இவன் ஒரு குத்து நெல்லு கூட தர மாட்டான்” என பெண்கள் நகையாடினால், கண்களில் கண்ணீர் வரும். பெண் பிள்ளைகள் கூறுவதிலும் தவறு ஏதும் இல்லை. வீட்டில் அவன் நடக்கிற விதம் அப்படித்தான் இருக்கும். வீட்டில் அவனை அடக்க யாரும் இல்லாததால், அவன் வெளியேயும் வம்பு இழுத்து ஏழரையை கூட்டி வீட்டிற்கு வருவான். பாதிக்கப்பட்டவர்கள் வாசலின் வெளியே நின்று கத்தும் பொழுது, உலகத்தையே எதிர்த்து மகன் துணை நிற்பாள். ஒவ்வொரு முறையும் அவன் துணை நின்றாள். ஒருவேளை அதுதான் அவள் செய்த பெரும் தவறோ?   அதாவது மகன் செய்த தவறுக்காக துணை நின்றது.

பள்ளிக்கூட வாத்தியார் திட்டியது பொறுக்காமல், வாத்தியாரை எதிர்த்துப் பேச,    வாத்தியார் அடிக்க, எதிர்பாராத விதமாக அந்த இடம் ரத்தம் கட்டி விடவே. நான்கு தெருக்கள், முடியை விரித்துப் போட்டுக்கொண்டு மார்பில் அடித்துக் கொண்டே நியாயம் விசாரிக்கச் சென்றாள். அவள் அழுத அழுகையில், ஊரே அவள் பின் சென்றது. கூட்டத்தை பார்த்து மிரண்ட பள்ளிக்கூட வாத்தியார் பொது மன்னிப்பு கேட்டார். அதன்பின் அவனை அவர் கண்டிக்கவில்லை. ஒருவேளை இதுவும் அவள் செய்த தவறில் ஒன்று தானோ? தப்பான காரணத்துக்கு அவள்மகன் துணை நின்றது தானோ.

செல்லதா,  உன் பிள்ளை மில்லுக்கு போற வழியில் பொட்ட பிள்ளைகளை வம்பு இழுத்துகிட்டு இருக்கிறான். என்னன்னு கேளு நீ” என வெள்ளை தாய் கூற. அதைப்பற்றி தன் மகனிடம் விசாரிக்க. “அதெல்லாம் ஒன்னும் இல்ல உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா” என கேட்டான். உடனே அவள் பதறி “என் சாமி நீ. உன்ன போய் சந்தேகப்படுவேணா? என அவ்விடம் நகர்ந்தாள்.

அடுத்த நாள் வெள்ளை தாயிடம் “வயசு பிள்ளைங்க கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும், உடனே வந்துருவாளுக, உங்க பிள்ளைங்க எல்லாரும் ரொம்ப யோக்கியமா? வேலைய பாத்துட்டு போ என வெடுக்கென பேசிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். சில மாதங்கள் கழித்து, செவந்த கிளி வீட்டிற்கு வந்து “ஏ செல்லதா உன் புள்ள குடிக்கிறான்டி. கொஞ்சம் என்னன்னு கேளு. அவங்கப்பன் மாறியே ஆக போறான் பாரு. உன் புள்ள கூட சுத்திட்டு இருக்கானே முருகவேல், அவன் தான் சொன்னான்” என்று அவள் அப்படி சொன்னதும், அவளது நெஞ்சம் பதறியது. அவளது அடி வயிற்றின் அமிலம் அவளையே உருக்கி விடும் போல் திகைத்தாள். இருப்புக் கொள்ளவில்லை. வேர்த்து விறுவிறுத்து, இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருந்தாள். மகன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவன் காலில் விழுந்தாள் “ராசா உன்ன நம்பி தான் இந்த வீடு இருக்குதுடா. பொட்ட பிள்ளைகளை எப்படியாவது கரை ஏத்தணும். நீ குடிக்கிறியா சாமி?” என கேட்டாள் அட!  யார் தான் உன் கிட்ட எல்லாத்தையும் சொல்கிறது? என கூறிக் கொண்டே, அவள் கையில் ரூபாய் நோட்டுகளை திணித்தான். வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன், உடம்பு வலிக்குது. அதான் கல்லு கடை ஒதுங்கினேன்” என்றான்.  “அப்ப படிப்பு என்ன ஆச்சு” எனக்கேட்ட அவளிடம் “அதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு. படிச்சா பத்து வருஷம் கழிச்சுதான் சம்பாதிக்க முடியும். நான் தான் இப்பவே சம்பாதிக்கிறேனே” என்றான். மனதிற்குள் பெருமையாக இருந்தது. தனது மகனுக்கு இந்த வயதிலேயே எவ்வளவு பொறுப்பு என பெருமிதம் கொண்டாள். செவந்த கிளி வரட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று நினைத்தவள், ஒரு நிமிடம் யோசித்தாள், “என்ன வேலைக்கு போறான்” என்று கேட்கலாமா? என்று அவள் கேட்க எத்தனித்த வேளையில், “வேலைக்கு போய்ட்டு வந்து இருக்கான். ஒழச்சி, களைச்சி போயிருப்பான். இப்ப தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று ஒதுங்கினாள். ஒருவேளை அன்றாவது அவள் கேட்க வந்த கேள்வியை கேட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? கேட்க வேண்டிய கேள்விகளை, கேட்க வேண்டிய இடத்தில் கேட்காததும் ஒரு தவறு தானோ?

காலங்கள் உருண்டோடியது. கண்ணுக்கு முன்னே பெரிய ஆல மரமாய் வளர்ந்து, விழுதுகள் தொங்க தன்னை தாங்குவான் என்று எண்ணிய தன் மகன், படர்ந்து விரிந்த கள்ளிச்செடி போல் அவள் முன் நின்றான். குடித்துவிட்டு, தாயை அடிக்க முடியாததால் பாத்திரத்தை உடைத்தான். தந்தையை பழிவாங்குவதற்கு அவரை மிதித்து மகிழ்ந்தான். சகோதரிகளை வசைபாடினான். மாதம் இரு முறை சிறை சென்றான். ஒவ்வொரு முறை சிறை செல்லும் போதும், அவள் நான்கு தெருக்கள் முடியை விரித்துப் போட்டுக்கொண்டு. மார்பில் அடித்து கொண்டு காவல் நிலையத்தை நோக்கி ஒப்பாரி வைத்துக்கொண்டே ஓடினாள். இந்த முறை ஊரில் யாரும் அவள் பின் செல்லவில்லை. காவல் நிலையத்திலும் யாரும் அவனிடம் பொது மன்னிப்பு கேட்கவில்லை. உள்ளே காவலர் அடிக்கும்போது ஏற்படும் சத்தமும், அந்த சத்தத்தை தொடர்ந்து வரும் அலறல் சத்தமும், அவள் காதில் விழும்போது, ஏனோ பள்ளிக்கூட வாத்தியார் அடிக்கும்போது பஞ்சாயத்து பண்ணி இருக்க கூடாதோ? என்று எண்ணி வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுவாள்.

எல்லா அடிகளையும் வாங்கிவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் வலியை மறப்பதற்காக சாராயத்தை வாயில் ஊத்திவிட்டு, எல்லா கோபங்களையும் தாயிடம் காட்டி விட்டு, அவன் தந்தை உருண்ட இடத்தில், அவன் உருளும் போது அவள் வாழ்வின் அவளை தாங்கிப் பிடிக்கும் தூண் விழுந்து, நொறுங்கி அதில் ஒரு துண்டு மட்டும் எதற்குமே உதவாமல் தரையில் உருளுவது போல் அவளுக்கு தோன்றும்.

குடிகாரன், களவாணி, வெறும் பயல் எனக் கூறி யாரும் பெண் கொடுக்க வில்லை. விலைமாதரிடம் போவதற்கும் அவனிடம் பணம் இல்லை. குடித்துவிட்டு பஞ்சாயத்து திண்டில் தூங்கும்போது, அத்திப்பழம் பறிக்க வந்த சிறுமிகள் சிரிக்கும் சத்தம் கேட்கவே, போதையில் தன் அறிவை விட, விரகதாபம் தலைக்கேறியது. ஒரு சிறுமியை பிடித்து இழுத்தான். மற்ற சிறுமிகள் சிதறி ஓடி ஊருக்குள் சென்று பெரியவர்களை அழைத்து வந்தனர். கையும் களவுமாக பிடிக்கப்பட்டதால் எல்லோரும் அடிக்கத் தொடங்கினர். போதையில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே அடி வாங்க ஆரம்பித்தான். சிறுவயதிலிருந்தே பீடி, சிகரெட் குடித்ததில் நுரையீரல் பலவீனமாய் இருந்தது. மொடா குடி குடித்ததில் கல்லீரலும் பாதிக்கப்பட்டு வந்தது. ஊரார் அடித்த அடியில் உள் உடம்பில் ரத்தக்கசிவு ஏற்பட்டது, மிக முக்கியமான பாகங்களில் இருந்து அதிக ரத்தம் வெளியேறத் தொடங்கியது, மரணத்தைத் தழுவ தயாரானான்.

மரணத்தருவாயில் அவன் கண்கள் சொருக ஆரம்பித்த நேரத்தில், தூரத்தில் அவன் தாய் மார்பில் அடித்துக் கொண்டு ஓடி வருவது தெரிந்தது. சிறுவயதில் அவனை அந்த மார்பில் சாய்த்துக் கொண்டு “என் குலசாமி டா நீ ராஜா மாதிரி வருவ” என அந்தத் தாய் கூறியது அந்த நேரத்தில் ஞாபகம் வந்தது. அந்த நிமிடத்திலிருந்து அவனுக்கு ஊரார் அடித்த அடி வலிக்கவில்லை. கண்கள் மூடி அவன் தரையில் சாயும் போது, அவன் தாயின் மடி அவனை ஏந்தியது. அவன் உயிர் உடலை விட்டுப் பிரியும் போது, அவன் உதட்டில் புன்னகை இருந்தது அந்தப் புன்னகையின் அர்த்தம் அந்த தாய்க்கு மட்டுமே புரியும்.


                                         credit: third party image reference

இறைவன் ஏசுபிரான் சிலுவையில் அறையுண்டு தொங்கிக் கொண்டிருந்த பொழுது தாய் மரியாள் அவரருகில் நின்று அழுதது வேதத்திலும் உள்ளது நம் எல்லோருக்கும் அது தெரிந்த விஷயம். இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து நாண்டு கொண்டு செத்தான். அவன் செத்த பொழுது அவன் தாயும் அழுது கொண்டுதான் இருந்திருப்பார். “உலக ரட்சகனை  காட்டிக்கொடுத்து விட்டாயே!  உனக்கு இது தேவை தான்” என கண்டிப்பாக நகைத்திருக்க மாட்டார்

தான் பெற்றவை எப்படி இருந்தாலும் சரி, தாய்... தாய் தான். "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு".

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி - The dusky skin and black-brown complexion.

 

                        credit: third party image reference

Watch this story in you tube இந்த கதையை யூட்யூபில் பாருங்கள்

“சௌந்தரி அக்கா, வடக்குத்தெரு கல்யாணத்திற்கு போயிட்டு வந்தியே பொண்ணு எப்படி இருந்தா?

“பொண்ணு கொஞ்சம் மா நிறம் தான்” என்றாள் சௌந்தரி.

 “மாநிறமாம்ல,


 மாநிறம் பாக்க கரிக்கட்டை மாதிரி இருந்தா” என்றாள் சௌந்தரி பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சரோஜா.

ஆமா! உன் நெரம் அப்படியே வெள்ளை வாத்து நெரம் பாரு. ஒன்னையே எல்லாரும் பன மரத்தில நாய் மோன்ட கலர் ன்னு சொல்லிட்டு இருக்காங்க நீ போய் அந்த பிள்ளையை கரி கட்டை கலர் என்று சொல்லி சிரிக்கிறாயே என சிரித்தாள் சௌந்தரி.

அந்த மூன்று பெண்களின் உரையாடல் அத்தோடு முடிந்தது. அதன்பின் பேச வேண்டுமானால் என்ன பேசியிருப்பார்கள்? எவ்வளவு நகை போட்டிருந்தாள்? அவள் உடுத்தியிருந்த ஆடையின் கலர் என்ன? உயரமாய் இருந்தாளா? குள்ளமாக இருந்தாளா? ஜோடி பொருத்தம் எப்படி இருந்தது? என்பதாகத் தான் இருந்திருக்கும்.

சிறுவயதிலிருந்தே எனது தந்தை என்னை திருமணத்திற்கு அல்லது எதிர்கால வாழ்விற்கு தயாராக்கியது எப்படி என்றால்? நன்கு படித்து இருக்க வேண்டும், சொந்தக்காலில் நிற்க வேண்டும், எதற்காகவும் யாரிடமும் கையேந்த கூடாது, மதியாதார் தலைவாசல் மிதியாதே, யார் என்ன கூறினாலும் உனக்கென ஒரு தனித்தன்மை உண்டு அதை எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதே. ஒருவனுக்கு ஒருத்தி, என்பதே நமது சமுதாய கோட்பாடு. அதையும் மீறி யார் நடந்தாலும் அதற்கான பின் விளைவுகளை அனுபவிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். என சிறுவயதிலேயே மிகவும் வெளிப்படையாக பேசுபவர் தந்தை. 27 வருடங்களாக நான் வாழ்ந்ததும் அப்படித்தான் எல்லா தகுதியுடனும் நான் இருக்கிறேன் என்ற திமிரில், நான் என் திருமணத்திற்கு தயாரானேன். ஆனால் திருமண சந்தையில் எல்லாமே தலைகீழ் ஆகிப்போனது அதுவரை நான் எதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாதோ அவையெல்லாம் என் கண்முன்னே பூதாகரமாக நின்றது. பொண்ணு கொஞ்சம் கலர் கம்மி. மூக்கு சப்பையாக இருக்கிறது. முடி சிறிது நீளமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  என்ன இது? எனக்கு புரியவில்லை அப்படி என்றால், இதுநாள் வரை நாம் எதையெல்லாம் கட்டிக் காப்பாற்றி வந்தோமோ அது எல்லாம் வீணா? புற அழகு தான் முக்கியமா என்ற கேள்வி தோன்றியது.

இன்று எனக்கு இரு மகன்கள் உள்ளனர். பெரியவன் என்னை மாதிரியும் சிறியவன் அவனது தந்தை மாதிரியும் இருப்பார்கள். எல்லோரும் பெரியவனை பார்க்கும் பொழுதெல்லாம் அம்மா மாதிரி எனக்கூறி விட்டு சின்னவனை பார்த்துவிட்டு கொஞ்சம் அப்பா மாதிரி கலர் ஜாஸ்தி என்பர். இது போதாது என்று பெரியவன் பள்ளிக்கு செல்லும் பொழுது நாங்கள் வடநாட்டில் இருப்பதால் அவன் “காலா” என அழைக்கப்படுவான். அவன் தினமும் வீட்டில் வந்து அம்மா மாணவர்கள் என்னை “காலா” என்று அழைக்கின்றனர் எனக் கூறும் பொழுது, எப்படி சமாதானம் தெரிவிப்பது என தெரியாமல் நண்பர்களிடம் கேட்ட பொழுது அதுக்குதான் அப்பவே குங்குமப்பூ சாப்பிட சொன்னோம் என்றனர். இது என்ன பதில்?........ வயிற்றில் குழந்தையோடு இருக்கும் பொழுது எனக்கு கிடைத்த அறிவுரைகளில் ஒன்று ஆம்பளை புள்ளயா இருந்தா பரவால்ல, பொட்டபுள்ளநா கொஞ்சம் கலரா இருந்தா நல்லா இருக்கும். குங்குமப்பூ நிறைய சாப்பிடு என்பது. என் தந்தையிடம் அதைப்பற்றி கூற என் தந்தையின் பதில் “சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்” என்பதுதான். அதை மிஞ்சின பதில் இந்த உலகத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

சிறிது நாட்கள் கழித்து எனது தந்தையிடம் சென்று அப்பா நான் கொஞ்சம் கருப்பா இருக்கிறேனோ? என கேட்டேன். எனது தந்தை சரி, நீ கருப்பா இருப்பதாக வைத்துக்கொள்வோம் அதனால் நீ என்ன செய்யப் போகிறாய்? உனது நிறத்தை உன்னால் மாற்ற முடியுமா? எனக் கேட்டார். பின்பு, 25 வருடங்கள் உன்னுடைய சிந்தனைகள் எப்படி இருந்தன? இப்பொழுது உன்னுடைய சிந்தனை எப்படி உள்ளது? அகன்ற திரையில் கட்டுக்கடங்காமல் பரந்து உலகத்தை ரசிக்க வேண்டிய எண்ணங்கள் இன்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் ஏன் மாறிவிட்டது என கேட்டார். நான் இப்படி இருக்கிறேன்......... என் மகன் இப்படி பிறக்க வேண்டும்....... இப்படி பிறந்து விட்டால், நான் என்ன செய்வது?....... ஏன் அப்படி யோசிக்கிறாய்?...... ஏன் உனது மனது இவ்வளவு குறுகிய மனப்பான்மையோடு இருக்கிறது? .........உலகம் மிகவும் பெரிது அதில் எல்லோருக்கும் இடம் உண்டு. நிறம் ஒரு அடையாளம் அல்ல என்றார். சில நேரங்களில் தோன்றும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களோடு பழகுவதால் நாமும் நம்முடைய மனமும் குறுகி விடுமோ என்று. அது ஒருவகையில் உண்மைதான்.

                    credit: third party image reference

 என்னுடைய பிரச்சினையை எனது அமெரிக்கவாழ் தோழியிடம் கூறி கொண்டிருந்தேன், கூறியது மட்டுமல்லாமல் யு எஸ் வந்து விடலாம் என நினைக்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் இந்தியாவை பொறுத்தவரை இளம் காப்பி, நிறம் மிதமான காப்பி நிறம், அடர் காப்பி நிறம்  ஆகிய மூன்று பிரிவுகள் தான். இதில் போராடி உன்னால் ஜெயிக்க முடியவில்லை என்றால் அமெரிக்கா போன்ற இடத்தில் வெள்ளை, கருப்பு நிற போராட்டத்தில் எப்படி பங்கு பெறுவாய் என கேட்டார். எனக்கு 30 வயது ஆகிறது என்னிடம் வந்து நீ கருப்பா இருக்கிறாய் அல்லது தடிமனாக இருக்கிறாய் என்றால் என்னால் ஏதாவது செய்ய முடியும். ஒன்று, என் எடையை குறைக்க முடியும் அல்லது என்னிடம் பல பில்லியன் டாலர்கள் இருந்தால்? எனது கருமையான நிறுத்தி வெண்மையாக மாற்ற முயற்சிக்க முடியும். 4 வயது சிறுவனிடம் அல்லது ஐந்து வயது சிறுவனிடம் நீ கருப்பாய் இருக்கிறாய் அல்லது நீ பருமனாக இருக்கிறாய் என்றால் அவனால் என்ன செய்ய முடியும்? இது சிறுவனின் தப்பு இல்ல, கேள்வி கேட்பவர்கள் மேலுள்ள தப்பு இதற்காக நாம் எதுவும் செய்ய முடியாது ரம்யா என்றார். மேலும் வெள்ளையான முடியை கருப்பாக மாற்றுவதற்கும், கருப்பான தோலை வெள்ளையாக மாற்றுவதற்கும், நாம் பிறவி எடுக்கவில்லை. நாம் எதிர்த்துப் போராட நிறைய போராட்டங்கள் நம் முன்னே உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு வாழ்க்கைக்கு உதவாத ஒரு விஷயத்தில் ஏன் உன் கவனத்தை செலுத்துகிறாய் என்று கேட்டார்.

                        credit: third party image reference

பொருளாதாரத்தில் மட்டுமல்ல, எண்ணங்களிலும் நாங்கள் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள் எனக்கூறப்படும் அமெரிக்காவில் உள்ள ஒரு இந்திய வம்சவழி வந்த தாத்தாவிடம் பேரனை காட்டியபோது அவர் கூறியது இந்த குழந்தை நமது மூத்த மகனின் குழந்தையை விட சிறிது நிறம் கம்மி தானே? என்று நம்ம ஊருல சொல்றத அப்படியே அவர் ஸ்டைலா இங்கிலீஷ்ல சொன்னார். இது பொய்யல்ல உண்மை. பின்னும் ஒரு தம்பதியினர் தனது பேரனின் கருமை நிறத்தை பார்த்துவிட்டு நல்ல வேலை ஒபாமா பிரசிடென்ட் ஆயிட்டாரு கருமை நிறமாக இருப்பதினால் வரும் பிரச்சனைகளுக்காக ரொம்ப போராடத் தேவையில்லை என்றனர். அப்படியென்றால் அமெரிக்காவில் இருக்கும் துப்பாக்கி கலாச்சாரம் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை, விடலை வயது கர்ப்பங்கள் (டீனேஜ் பிரக்னன்சி) பற்றி கவலை இல்லை வாலிபர்கள் இடையே அதிகமாக உபயோகிக்கப்படும் போதை வஸ்துக்கள் (டிரக்ஸ்) பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அவங்க கவலை எல்லாம் அமெரிக்காவில் இருக்கிறதுனால என் வாரிசு கருப்பன் என அழைக்கப்பட மாட்டான் என்பதே. இது எந்த வகையில் தொலைநோக்கு சிந்தனை என எனக்கு தெரியவில்லை. எங்கு வாழ்ந்தாலும் நிற வேற்றுமை எங்கும் காணப்படுகிறது. அழகையும் நிறத்தையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். நிறம் ஒரு குறை என்றும், அதை சரி செய்ய பல வழிகள் உள்ளது என்ற கருத்துக்களை  உருவாக்கி இருக்கின்றது அழகு சார்ந்த நிறுவனங்கள். அவர்கள் முயற்சியில் வெற்றியும் அடைந்து விட்டார்கள். அதை நம்பும் நாம் தான் தோற்று கொண்டு இருக்கிறோம். “வேற்றுமையில் ஒற்றுமை” இந்தியர்களின் பெருமை மறந்து விடாதீர்கள் நண்பர்களே. எல்லா அனுபவங்களுக்கும் பிறகு நான் எனது மகனிடம் சொல்வது

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின்  -  மேதினியில்

இட்டார் பெரியோர்  இடாதோர் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி

என கற்றுக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் சும்மாவா பாடினான் பாரதி

                    credit: third party image reference

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை
பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்
சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ

இந்தப் பாடல் சிறு வயதிலிருந்தே என் மனதில் இருந்ததால் நிறத்தை பற்றி நான் கவலைப்படவில்லை ஏனோ இந்தப் பாடல் பலரது மனதில் இல்லாததால் எனது மகனுக்கு நான் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். மாற்றத்தின் தொடக்கம் நானாக இருக்க விரும்பியதால் சமீபகாலங்களில் திருமணத்திற்கு சென்று வருபவர்களிடம் திருமணம் நன்றாக முடிந்ததா என்றும் பிள்ளை பெற்றவர்களிடம் “தாயும் சேயும் நலமா” என்று மட்டுமே கேட்கிறேன். குறைகளை சுட்டிக் காட்டலாம் கறைகளை நீக்க உதவலாம் மாற்றமுடியாதவைகளை சுட்டிக்காட்டி பிறர் மனங்கள் ஊமையாய் அழுவதற்கு காரணமாய் இருந்து விடாதீர்கள்.

வியாழன், 23 ஜூலை, 2020

காலனின் கனிவு - Even Death was kind lately

                              credit: third party image reference
அந்த சிறுமிக்கு அப்போது ஒரு ஏழு வயது இருக்கும்அவளது கைகளில் தனது தகப்பனார் கொடுத்திருந்த மீன் பிடிக்கும் தூண்டில் இருந்ததுசிறுமியின்  கையை தூண்டில் முள் குத்தி  கிழித்து விட கூடாது என்று  அவளது தந்தை பிரத்தியேகமாக  இரும்பை வளைத்து தூண்டில் முள் தயாரித்துக் கொடுத்து இருந்தார்கிணற்றிற்கு அருகே சென்று கிணற்றை எட்டிப் பார்த்த பொழுது, தண்ணீர் மிகவும் ஆழமான இடத்தில் இருந்ததுதூண்டிலை உள்ளே வீசி பார்த்த போது  தண்ணீரை அது தொடவில்லைமீண்டும் தூண்டிலை உள்ளே வீசிய  பொழுது கைகளில் இருந்து நழுவி தூண்டில் கிணற்றுக்குள்ளே விழுந்ததுபதறிய சிறுமி உள்ளே எட்டி எட்டிப்பார்த்தாள். சிறிது ஊன்றி முயற்சித்தால் எடுத்துவிடலாம் என அந்த சிறுமிக்கு தோன்றியதுமறுபடியும் இன்னும் அதிகமாக ஊன்றி கிணற்றை நோக்கி குனிந்தாள். அந்த நிமிடம், அந்த வினாடி அவள் தன் தவறை உணர்ந்தாள்முதலாவது  தவறு -  யாரும்  கூட இல்லாமல் கிணற்றடிக்கு வந்ததுஇரண்டாவது தவறு -  இன்னமும் நீச்சல் கற்றுக் கொள்ளாதது.

                        

                  credit: third party image reference

ஒரு நொடிப்பொழுதில் கிணற்றுக்குள் விழுந்து கூக் குரலை கேட்க யாரும் இல்லாமல் மரித்து இருக்க வேண்டியவள்,  அவள் கால்களை ஊன்றிய கல் பெயர்ந்து விழுந்ததால்கிணற்றிற்கு உள்ளே  விழ வேண்டியவள். பின்னந்தலை நிலத்தில் அடிக்க முதுகுப்புற  சிராய்ப்புகள் உடன் கிணற்றுக்கு வெளியே விழுந்தாள். இந்நாள் வரை அவள் அந்த சம்பவத்தை யாருக்கும் தெரிவிக்கவில்லைஇதேபோல் மற்றொரு முறை சைக்கிள் ஓட்டு வருவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது,    பயிற்சி அளித்து  கொண்டிருந்தவர் பாதியிலே சென்றுவிட, பொறுமையில்லாத அந்த சிறுமி தானாகவே சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தாள். சிறிது தூரம் சென்றபின் எதிரே லாரி ஒன்று வருவதைக் கண்டாள். வலதுபுறம் சென்று  கொண்டிருந்த சிறுமியை பார்த்த லாரி  ஓட்டுனர் அதற்கேற்றார்போல் வண்டியை நகர்த்தினார்.  திடீரென சிறுமிக்கு  அப்பா  கூறிய  சாலை விதிகள்  ஞாபகத்திற்கு வந்ததுஇடதுபுறமாக தான் செல்ல வேண்டும் என தோன்றியது. அதுவரை வலது புறம் சென்று கொண்டு இருந்த சிறுமி திடீரென இடது புறத்திற்கு செல்ல வண்டியை திருப்பினாள் அதற்குள் அந்த லாரி அருகில் வந்து விடவே என்ன செய்வது என்று தெரியாமல் நடு ரோட்டில் வண்டியை நிறுத்தினாள். கண்ணை மூடி திறந்து பார்த்த பொழுது (அவள் கண்களைத் திறப்பாள் என்று அவள் எதிர் பார்க்கவில்லை ஆனாலும் அவள் கண்களை திறந்தாள்)அவள் கண்கள் திறந்து  பார்த்த பொழுது சைக்கிளின் முன் சக்கரத்திற்கு அடியிலேயே இவள் கிடந்தாள் சைக்கிளின் பின் சக்கரத்தின்மேலே லாரி நின்றது. அந்த நிலையிலும் அவள் அருகே யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு சம்பவத்திலும் அந்த சிறுமியிடம், காலனும்  சிறிது கனிவுடன் நடந்துக் கொண்டான்.

                    

                credit: third party image reference

நீங்கள் கேட்கலாம் இவ்வளவும் நடக்கும் வரை அந்த சிறுமியின் வீட்டில் உள்ள பெரியவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்று. அவள் சிறுமியாக வாழ்ந்த காலத்தில் வீட்டின் பெரியவர்கள் எதற்குமே கவலைப்பட்டது கிடையாது. விடுமுறை நாட்களில் காலையில் விளையாட செல்லும் சிறுவர்கள் மாலையிலேயே   வீடு  திரும்புவார்கள். பெண் பிள்ளைகளை மாலை 5 மணிக்கு மேல் தேட ஆரம்பிப்பார்கள். ஆண்பிள்ளைகள் என்றால் இரவு 7 மணி வரை தேட மாட்டார்கள். மக்களின் மனதில் ஈரம் நிறைந்த காலம் அது . யாராவது தலைவலி என்றால் கூட, ஏதோ பெரிய நோய் வந்த மாதிரி ஒரு தெருவில் தைலம் இல்லை என்றால் அடுத்த தெருவிற்கு தன் குழந்தைகளை அனுப்பி அந்த தலைவலி வந்த ஆளுக்கு தைலம் வாங்கி கொடுப்பார்கள்மரண செய்திகள் துர் செய்திகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சாதாரணமாக மரணித்தால் கூட கொடிய துயர் கொண்டனர். யாராவது அகாலமரணம் அடைந்தால் பல வருடங்கள் அவர்கள்  மரணம் பேசப்பட்டதுஇன்னமும் அவளது கிராமத்தில் முப்பது வருடத்திற்கு முன் நடந்த அகால மரணங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. மக்களின் மனது மென்மையாக இருந்ததனால்தான் என்னமோ காலனும் சிறிது கனிவுடன் நடந்து கொண்டான்.  அவனுக்கு தானே நடந்தது, எனக்கு என்ன வந்தது” என்ற சிந்தனைகள், சிறிது காலத்திற்கு முன் நம்மிடையே இல்லை. ஆதலால் தான் மனிதர்கள் சாதாரணமாக மரணித்தார்கள். குழந்தைகள் இடையேயான மரணங்கள் நிறைய இல்லை.

ஒரு நோய் சாதாரண காய்ச்சல் மாத்திரையில் குணமாகும் பொழுதுஅதற்கென விசேஷித்த சிகிச்சைகள் தேவையில்லை. அது போலத்தான் மரணமும் சாதாரண மரணங்களை நாம் மதிக்கும் பொழுது அசாதாரண நிகழ்வுகளுக்கு அவசியமில்லை. நமது மனம் மரத்துப் போகும் பொழுது! மரத்துப்போன மனங்களுக்கும் மரணம் வலிக்க வேண்டும் அல்லவா அதனால்தான் என்னவோ இன்றைய காலத்தில் மரணங்களும் மிக கொடூரமாக இருக்கின்றன.


credit: third party image reference


இன்றைக்கு எத்தனை பேர் துக்க வீடுகளுக்கு செல்கிறோம். எத்தனை பேர் குழந்தைகளை துக்க வீடுகளுக்கு அழைத்துச் செல்கிறோம். குடும்பத்தில் நிகழும் சாதாரண மரணங்கள், நமது குழந்தைகளின் மனதை பாதிக்கும் என கருதி அவர்களை வீட்டிலேயே விட்டுச் செல்கிறோம். ஆனால் வீட்டிற்குள் தொலைக்காட்சி மூலமாக அல்லது அலைபேசி மூலமாக எந்த மாதிரியான மரணங்களை அவர்கள் பார்க்கிறார்கள். மரணம் என்றால் என்ன என்பதை குழந்தைகள் இன்றைக்கு எப்படி தெரிந்து கொள்கிறார்கள். சிறுவன் சுஜித் மரணம்,  நிர்பயா மரணம், ஆசிபா மரணம் என சிறுவர்கள் அன்றாட வாழ்வில் மிகக் கொடுமையான மரணங்களை மிக சாதாரண நிகழ்வுகளாக பார்க்கின்றனர். மிகக் கொடுமையான விஷயங்கள் சாதாரண நிகழ்வுகள் ஆகும் பொழுது அவர்கள் வாழ்வில் கொடுமையான நிகழ்வுகள் எப்படிப்பட்டதாக இருக்கும். நம்மால் யோசித்துப் பார்க்க முடிகிறதா? ஆனால் அதுதான் இப்பொழுது நம் கண்முன்னால் நடந்து கொண்டிருக்கிறது.

எங்கள் ஊரில் வெகு நாட்களுக்கு முன் ஒரு ரைஸ்மில் இருந்துள்ளது கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது 5 ஊர்க்காரர்களும் அந்த ரைஸ் மில்லுக்கு வந்து அரிசி வாங்கி சென்றுள்ளனர். இன்றளவும் ஒரு வாத்தியார் இந்த நிகழ்வை மாணவர்களுக்கு பகிர்ந்து வருகிறார். ஆனால் இன்று நாம் என்ன செய்கிறோம் “லாக் டவுன்” என்று அறிவித்தவுடன் 5 கிலோ அரிசி வாங்கிய நாம் ஓடி சென்று 25 கிலோ மூட்டை இரண்டை பதுக்கி வைக்கிறோம். எங்கே போனது நம் மாண்பு? மனிதர்களாகிய நாம் இவ்வளவு கொடூரர்களாய் மாறிப் போன பின்பு கொடூரனாகிய காலன் எவ்வளவு கொடூரனாய் மாறுவான். ஏன் இப்படி நடக்கிறது? இதுவரை இப்படி நடந்தது இல்லையே? என புலம்பும் நமக்கு "இப்படியெல்லாம் நடக்க காரணமே நாம் தான்" என்பது ஏனோ புரிவதில்லை.


                                

                     credit: third party image reference

மனிதன் மனிதனாக வாழும் பொழுது, அவனது மரணமும் மனிதனுக்கு ஏற்படும் மென்மையான, மற்றும் மனிதத் தன்மையாக இருக்கும். மனிதன் மிருகமாக மாறி வாழும் போது அவனுக்கு ஏற்படும் மரணமும் ஒரு விலங்கு மற்றொரு விலங்கை எப்படி கீறி, பீரி கொடுமையான மரணத்தை ஏற்படுத்தி சாப்பிடுமோ அப்படியே மனிதனின் மரணமும் கொடுமையாக இருக்கும். “ஏன் இவ்வளவு கொடூரமான மரணங்கள்?” என காலனை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு “ஏன் இவ்வளவு கொடூரமாக நாம் வாழ்கிறோம்?” என நம்மை நாமே கேள்வி கேட்டால்? ஒருவேளை இனி வரும் தலைமுறையாவது மனிதனாய் வாழும். மீண்டும் ஒரு முறை காலனும் கனிவுடன் நடந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. மனிதம் வளர்ப்போம் வாருங்களேன்!