வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி - The dusky skin and black-brown complexion.

 

                        credit: third party image reference

Watch this story in you tube இந்த கதையை யூட்யூபில் பாருங்கள்

“சௌந்தரி அக்கா, வடக்குத்தெரு கல்யாணத்திற்கு போயிட்டு வந்தியே பொண்ணு எப்படி இருந்தா?

“பொண்ணு கொஞ்சம் மா நிறம் தான்” என்றாள் சௌந்தரி.

 “மாநிறமாம்ல,


 மாநிறம் பாக்க கரிக்கட்டை மாதிரி இருந்தா” என்றாள் சௌந்தரி பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சரோஜா.

ஆமா! உன் நெரம் அப்படியே வெள்ளை வாத்து நெரம் பாரு. ஒன்னையே எல்லாரும் பன மரத்தில நாய் மோன்ட கலர் ன்னு சொல்லிட்டு இருக்காங்க நீ போய் அந்த பிள்ளையை கரி கட்டை கலர் என்று சொல்லி சிரிக்கிறாயே என சிரித்தாள் சௌந்தரி.

அந்த மூன்று பெண்களின் உரையாடல் அத்தோடு முடிந்தது. அதன்பின் பேச வேண்டுமானால் என்ன பேசியிருப்பார்கள்? எவ்வளவு நகை போட்டிருந்தாள்? அவள் உடுத்தியிருந்த ஆடையின் கலர் என்ன? உயரமாய் இருந்தாளா? குள்ளமாக இருந்தாளா? ஜோடி பொருத்தம் எப்படி இருந்தது? என்பதாகத் தான் இருந்திருக்கும்.

சிறுவயதிலிருந்தே எனது தந்தை என்னை திருமணத்திற்கு அல்லது எதிர்கால வாழ்விற்கு தயாராக்கியது எப்படி என்றால்? நன்கு படித்து இருக்க வேண்டும், சொந்தக்காலில் நிற்க வேண்டும், எதற்காகவும் யாரிடமும் கையேந்த கூடாது, மதியாதார் தலைவாசல் மிதியாதே, யார் என்ன கூறினாலும் உனக்கென ஒரு தனித்தன்மை உண்டு அதை எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதே. ஒருவனுக்கு ஒருத்தி, என்பதே நமது சமுதாய கோட்பாடு. அதையும் மீறி யார் நடந்தாலும் அதற்கான பின் விளைவுகளை அனுபவிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். என சிறுவயதிலேயே மிகவும் வெளிப்படையாக பேசுபவர் தந்தை. 27 வருடங்களாக நான் வாழ்ந்ததும் அப்படித்தான் எல்லா தகுதியுடனும் நான் இருக்கிறேன் என்ற திமிரில், நான் என் திருமணத்திற்கு தயாரானேன். ஆனால் திருமண சந்தையில் எல்லாமே தலைகீழ் ஆகிப்போனது அதுவரை நான் எதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாதோ அவையெல்லாம் என் கண்முன்னே பூதாகரமாக நின்றது. பொண்ணு கொஞ்சம் கலர் கம்மி. மூக்கு சப்பையாக இருக்கிறது. முடி சிறிது நீளமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  என்ன இது? எனக்கு புரியவில்லை அப்படி என்றால், இதுநாள் வரை நாம் எதையெல்லாம் கட்டிக் காப்பாற்றி வந்தோமோ அது எல்லாம் வீணா? புற அழகு தான் முக்கியமா என்ற கேள்வி தோன்றியது.

இன்று எனக்கு இரு மகன்கள் உள்ளனர். பெரியவன் என்னை மாதிரியும் சிறியவன் அவனது தந்தை மாதிரியும் இருப்பார்கள். எல்லோரும் பெரியவனை பார்க்கும் பொழுதெல்லாம் அம்மா மாதிரி எனக்கூறி விட்டு சின்னவனை பார்த்துவிட்டு கொஞ்சம் அப்பா மாதிரி கலர் ஜாஸ்தி என்பர். இது போதாது என்று பெரியவன் பள்ளிக்கு செல்லும் பொழுது நாங்கள் வடநாட்டில் இருப்பதால் அவன் “காலா” என அழைக்கப்படுவான். அவன் தினமும் வீட்டில் வந்து அம்மா மாணவர்கள் என்னை “காலா” என்று அழைக்கின்றனர் எனக் கூறும் பொழுது, எப்படி சமாதானம் தெரிவிப்பது என தெரியாமல் நண்பர்களிடம் கேட்ட பொழுது அதுக்குதான் அப்பவே குங்குமப்பூ சாப்பிட சொன்னோம் என்றனர். இது என்ன பதில்?........ வயிற்றில் குழந்தையோடு இருக்கும் பொழுது எனக்கு கிடைத்த அறிவுரைகளில் ஒன்று ஆம்பளை புள்ளயா இருந்தா பரவால்ல, பொட்டபுள்ளநா கொஞ்சம் கலரா இருந்தா நல்லா இருக்கும். குங்குமப்பூ நிறைய சாப்பிடு என்பது. என் தந்தையிடம் அதைப்பற்றி கூற என் தந்தையின் பதில் “சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்” என்பதுதான். அதை மிஞ்சின பதில் இந்த உலகத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

சிறிது நாட்கள் கழித்து எனது தந்தையிடம் சென்று அப்பா நான் கொஞ்சம் கருப்பா இருக்கிறேனோ? என கேட்டேன். எனது தந்தை சரி, நீ கருப்பா இருப்பதாக வைத்துக்கொள்வோம் அதனால் நீ என்ன செய்யப் போகிறாய்? உனது நிறத்தை உன்னால் மாற்ற முடியுமா? எனக் கேட்டார். பின்பு, 25 வருடங்கள் உன்னுடைய சிந்தனைகள் எப்படி இருந்தன? இப்பொழுது உன்னுடைய சிந்தனை எப்படி உள்ளது? அகன்ற திரையில் கட்டுக்கடங்காமல் பரந்து உலகத்தை ரசிக்க வேண்டிய எண்ணங்கள் இன்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் ஏன் மாறிவிட்டது என கேட்டார். நான் இப்படி இருக்கிறேன்......... என் மகன் இப்படி பிறக்க வேண்டும்....... இப்படி பிறந்து விட்டால், நான் என்ன செய்வது?....... ஏன் அப்படி யோசிக்கிறாய்?...... ஏன் உனது மனது இவ்வளவு குறுகிய மனப்பான்மையோடு இருக்கிறது? .........உலகம் மிகவும் பெரிது அதில் எல்லோருக்கும் இடம் உண்டு. நிறம் ஒரு அடையாளம் அல்ல என்றார். சில நேரங்களில் தோன்றும் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களோடு பழகுவதால் நாமும் நம்முடைய மனமும் குறுகி விடுமோ என்று. அது ஒருவகையில் உண்மைதான்.

                    credit: third party image reference

 என்னுடைய பிரச்சினையை எனது அமெரிக்கவாழ் தோழியிடம் கூறி கொண்டிருந்தேன், கூறியது மட்டுமல்லாமல் யு எஸ் வந்து விடலாம் என நினைக்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் இந்தியாவை பொறுத்தவரை இளம் காப்பி, நிறம் மிதமான காப்பி நிறம், அடர் காப்பி நிறம்  ஆகிய மூன்று பிரிவுகள் தான். இதில் போராடி உன்னால் ஜெயிக்க முடியவில்லை என்றால் அமெரிக்கா போன்ற இடத்தில் வெள்ளை, கருப்பு நிற போராட்டத்தில் எப்படி பங்கு பெறுவாய் என கேட்டார். எனக்கு 30 வயது ஆகிறது என்னிடம் வந்து நீ கருப்பா இருக்கிறாய் அல்லது தடிமனாக இருக்கிறாய் என்றால் என்னால் ஏதாவது செய்ய முடியும். ஒன்று, என் எடையை குறைக்க முடியும் அல்லது என்னிடம் பல பில்லியன் டாலர்கள் இருந்தால்? எனது கருமையான நிறுத்தி வெண்மையாக மாற்ற முயற்சிக்க முடியும். 4 வயது சிறுவனிடம் அல்லது ஐந்து வயது சிறுவனிடம் நீ கருப்பாய் இருக்கிறாய் அல்லது நீ பருமனாக இருக்கிறாய் என்றால் அவனால் என்ன செய்ய முடியும்? இது சிறுவனின் தப்பு இல்ல, கேள்வி கேட்பவர்கள் மேலுள்ள தப்பு இதற்காக நாம் எதுவும் செய்ய முடியாது ரம்யா என்றார். மேலும் வெள்ளையான முடியை கருப்பாக மாற்றுவதற்கும், கருப்பான தோலை வெள்ளையாக மாற்றுவதற்கும், நாம் பிறவி எடுக்கவில்லை. நாம் எதிர்த்துப் போராட நிறைய போராட்டங்கள் நம் முன்னே உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு வாழ்க்கைக்கு உதவாத ஒரு விஷயத்தில் ஏன் உன் கவனத்தை செலுத்துகிறாய் என்று கேட்டார்.

                        credit: third party image reference

பொருளாதாரத்தில் மட்டுமல்ல, எண்ணங்களிலும் நாங்கள் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள் எனக்கூறப்படும் அமெரிக்காவில் உள்ள ஒரு இந்திய வம்சவழி வந்த தாத்தாவிடம் பேரனை காட்டியபோது அவர் கூறியது இந்த குழந்தை நமது மூத்த மகனின் குழந்தையை விட சிறிது நிறம் கம்மி தானே? என்று நம்ம ஊருல சொல்றத அப்படியே அவர் ஸ்டைலா இங்கிலீஷ்ல சொன்னார். இது பொய்யல்ல உண்மை. பின்னும் ஒரு தம்பதியினர் தனது பேரனின் கருமை நிறத்தை பார்த்துவிட்டு நல்ல வேலை ஒபாமா பிரசிடென்ட் ஆயிட்டாரு கருமை நிறமாக இருப்பதினால் வரும் பிரச்சனைகளுக்காக ரொம்ப போராடத் தேவையில்லை என்றனர். அப்படியென்றால் அமெரிக்காவில் இருக்கும் துப்பாக்கி கலாச்சாரம் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை, விடலை வயது கர்ப்பங்கள் (டீனேஜ் பிரக்னன்சி) பற்றி கவலை இல்லை வாலிபர்கள் இடையே அதிகமாக உபயோகிக்கப்படும் போதை வஸ்துக்கள் (டிரக்ஸ்) பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அவங்க கவலை எல்லாம் அமெரிக்காவில் இருக்கிறதுனால என் வாரிசு கருப்பன் என அழைக்கப்பட மாட்டான் என்பதே. இது எந்த வகையில் தொலைநோக்கு சிந்தனை என எனக்கு தெரியவில்லை. எங்கு வாழ்ந்தாலும் நிற வேற்றுமை எங்கும் காணப்படுகிறது. அழகையும் நிறத்தையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். நிறம் ஒரு குறை என்றும், அதை சரி செய்ய பல வழிகள் உள்ளது என்ற கருத்துக்களை  உருவாக்கி இருக்கின்றது அழகு சார்ந்த நிறுவனங்கள். அவர்கள் முயற்சியில் வெற்றியும் அடைந்து விட்டார்கள். அதை நம்பும் நாம் தான் தோற்று கொண்டு இருக்கிறோம். “வேற்றுமையில் ஒற்றுமை” இந்தியர்களின் பெருமை மறந்து விடாதீர்கள் நண்பர்களே. எல்லா அனுபவங்களுக்கும் பிறகு நான் எனது மகனிடம் சொல்வது

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின்  -  மேதினியில்

இட்டார் பெரியோர்  இடாதோர் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி

என கற்றுக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் சும்மாவா பாடினான் பாரதி

                    credit: third party image reference

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை
பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்
சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ

இந்தப் பாடல் சிறு வயதிலிருந்தே என் மனதில் இருந்ததால் நிறத்தை பற்றி நான் கவலைப்படவில்லை ஏனோ இந்தப் பாடல் பலரது மனதில் இல்லாததால் எனது மகனுக்கு நான் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். மாற்றத்தின் தொடக்கம் நானாக இருக்க விரும்பியதால் சமீபகாலங்களில் திருமணத்திற்கு சென்று வருபவர்களிடம் திருமணம் நன்றாக முடிந்ததா என்றும் பிள்ளை பெற்றவர்களிடம் “தாயும் சேயும் நலமா” என்று மட்டுமே கேட்கிறேன். குறைகளை சுட்டிக் காட்டலாம் கறைகளை நீக்க உதவலாம் மாற்றமுடியாதவைகளை சுட்டிக்காட்டி பிறர் மனங்கள் ஊமையாய் அழுவதற்கு காரணமாய் இருந்து விடாதீர்கள்.