திங்கள், 7 செப்டம்பர், 2020

யூதாஸின் தாய் - unconditional love

 

                                                    credit: third party image reference

பெத்த பயல் என்ற போதே,  தாய் மனது ஒரு வயது வரை பால் சுரக்கும், வாழ்நாள் பூரா பாசம் சுரக்கும். மகளை ஒதுக்கிவிட்டு, பயலை அணைக்கும். பெண் பிள்ளைக்கு பல கட்டளைகள் இடும். ஆண்மகனிடம் யாசகம் கேட்பது போல் அறிவுரை கூறும். சிறுவயதில் அவனை விட இவள் பலசாலியாக இருந்தாலும், அவன் அழுகைக்கு முன் இவள் பலம் இழந்து நிற்பாள். அடிக்க ஓங்கும் கை, அவன் அழுகையில் தானே கீழே இறங்கும். அப்பானின் கண்ணீர் அவள் பலத்தை முழுங்கும்.

அவள் பலவீனமாகும் போது அவன் ஊற்றப் போகும் கால் வயிற்றுக் கஞ்சிக்காக, இன்று அவள் கஞ்சி குடித்துவிட்டு, அவனுக்கு சுடு சோறு போடுவாள். குடிகார கணவன் குடித்துவிட்டு, அடிக்க வரும் போது பிள்ளைகளை காக்க பதறி ஓடுவாள். அவன் அடிக்கும் அத்தனை அடிகளையும் அவளே தாங்குவாள். அடித்து முடித்து அவன் ஓய்ந்து ஒரு ஓரத்தில் உருளும் போது, “குடும்பத்தின் அஸ்திவாரம் அடுத்து அவள் மகன் தான்” என எண்ணி அவனை மார்போடு அணைத்து தூங்குவாள்.

பொட்டை பிள்ளைகள் வம்பிழுத்தால் கொதித்து விடுவாள். அவளுடைய ஒரே நம்பிக்கை, எதிர்காலம், அவனை நகைப்பதா? என கோபத்தில் முகம் சுருங்கி விடுவாள். “நாளைக்கு தாய்மாமன் சீர் அவன் தாண்டி செய்யணும்” என எச்சரிப்பாள். “இவன் ஒரு குத்து நெல்லு கூட தர மாட்டான்” என பெண்கள் நகையாடினால், கண்களில் கண்ணீர் வரும். பெண் பிள்ளைகள் கூறுவதிலும் தவறு ஏதும் இல்லை. வீட்டில் அவன் நடக்கிற விதம் அப்படித்தான் இருக்கும். வீட்டில் அவனை அடக்க யாரும் இல்லாததால், அவன் வெளியேயும் வம்பு இழுத்து ஏழரையை கூட்டி வீட்டிற்கு வருவான். பாதிக்கப்பட்டவர்கள் வாசலின் வெளியே நின்று கத்தும் பொழுது, உலகத்தையே எதிர்த்து மகன் துணை நிற்பாள். ஒவ்வொரு முறையும் அவன் துணை நின்றாள். ஒருவேளை அதுதான் அவள் செய்த பெரும் தவறோ?   அதாவது மகன் செய்த தவறுக்காக துணை நின்றது.

பள்ளிக்கூட வாத்தியார் திட்டியது பொறுக்காமல், வாத்தியாரை எதிர்த்துப் பேச,    வாத்தியார் அடிக்க, எதிர்பாராத விதமாக அந்த இடம் ரத்தம் கட்டி விடவே. நான்கு தெருக்கள், முடியை விரித்துப் போட்டுக்கொண்டு மார்பில் அடித்துக் கொண்டே நியாயம் விசாரிக்கச் சென்றாள். அவள் அழுத அழுகையில், ஊரே அவள் பின் சென்றது. கூட்டத்தை பார்த்து மிரண்ட பள்ளிக்கூட வாத்தியார் பொது மன்னிப்பு கேட்டார். அதன்பின் அவனை அவர் கண்டிக்கவில்லை. ஒருவேளை இதுவும் அவள் செய்த தவறில் ஒன்று தானோ? தப்பான காரணத்துக்கு அவள்மகன் துணை நின்றது தானோ.

செல்லதா,  உன் பிள்ளை மில்லுக்கு போற வழியில் பொட்ட பிள்ளைகளை வம்பு இழுத்துகிட்டு இருக்கிறான். என்னன்னு கேளு நீ” என வெள்ளை தாய் கூற. அதைப்பற்றி தன் மகனிடம் விசாரிக்க. “அதெல்லாம் ஒன்னும் இல்ல உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா” என கேட்டான். உடனே அவள் பதறி “என் சாமி நீ. உன்ன போய் சந்தேகப்படுவேணா? என அவ்விடம் நகர்ந்தாள்.

அடுத்த நாள் வெள்ளை தாயிடம் “வயசு பிள்ளைங்க கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும், உடனே வந்துருவாளுக, உங்க பிள்ளைங்க எல்லாரும் ரொம்ப யோக்கியமா? வேலைய பாத்துட்டு போ என வெடுக்கென பேசிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். சில மாதங்கள் கழித்து, செவந்த கிளி வீட்டிற்கு வந்து “ஏ செல்லதா உன் புள்ள குடிக்கிறான்டி. கொஞ்சம் என்னன்னு கேளு. அவங்கப்பன் மாறியே ஆக போறான் பாரு. உன் புள்ள கூட சுத்திட்டு இருக்கானே முருகவேல், அவன் தான் சொன்னான்” என்று அவள் அப்படி சொன்னதும், அவளது நெஞ்சம் பதறியது. அவளது அடி வயிற்றின் அமிலம் அவளையே உருக்கி விடும் போல் திகைத்தாள். இருப்புக் கொள்ளவில்லை. வேர்த்து விறுவிறுத்து, இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருந்தாள். மகன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவன் காலில் விழுந்தாள் “ராசா உன்ன நம்பி தான் இந்த வீடு இருக்குதுடா. பொட்ட பிள்ளைகளை எப்படியாவது கரை ஏத்தணும். நீ குடிக்கிறியா சாமி?” என கேட்டாள் அட!  யார் தான் உன் கிட்ட எல்லாத்தையும் சொல்கிறது? என கூறிக் கொண்டே, அவள் கையில் ரூபாய் நோட்டுகளை திணித்தான். வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன், உடம்பு வலிக்குது. அதான் கல்லு கடை ஒதுங்கினேன்” என்றான்.  “அப்ப படிப்பு என்ன ஆச்சு” எனக்கேட்ட அவளிடம் “அதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு. படிச்சா பத்து வருஷம் கழிச்சுதான் சம்பாதிக்க முடியும். நான் தான் இப்பவே சம்பாதிக்கிறேனே” என்றான். மனதிற்குள் பெருமையாக இருந்தது. தனது மகனுக்கு இந்த வயதிலேயே எவ்வளவு பொறுப்பு என பெருமிதம் கொண்டாள். செவந்த கிளி வரட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று நினைத்தவள், ஒரு நிமிடம் யோசித்தாள், “என்ன வேலைக்கு போறான்” என்று கேட்கலாமா? என்று அவள் கேட்க எத்தனித்த வேளையில், “வேலைக்கு போய்ட்டு வந்து இருக்கான். ஒழச்சி, களைச்சி போயிருப்பான். இப்ப தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று ஒதுங்கினாள். ஒருவேளை அன்றாவது அவள் கேட்க வந்த கேள்வியை கேட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? கேட்க வேண்டிய கேள்விகளை, கேட்க வேண்டிய இடத்தில் கேட்காததும் ஒரு தவறு தானோ?

காலங்கள் உருண்டோடியது. கண்ணுக்கு முன்னே பெரிய ஆல மரமாய் வளர்ந்து, விழுதுகள் தொங்க தன்னை தாங்குவான் என்று எண்ணிய தன் மகன், படர்ந்து விரிந்த கள்ளிச்செடி போல் அவள் முன் நின்றான். குடித்துவிட்டு, தாயை அடிக்க முடியாததால் பாத்திரத்தை உடைத்தான். தந்தையை பழிவாங்குவதற்கு அவரை மிதித்து மகிழ்ந்தான். சகோதரிகளை வசைபாடினான். மாதம் இரு முறை சிறை சென்றான். ஒவ்வொரு முறை சிறை செல்லும் போதும், அவள் நான்கு தெருக்கள் முடியை விரித்துப் போட்டுக்கொண்டு. மார்பில் அடித்து கொண்டு காவல் நிலையத்தை நோக்கி ஒப்பாரி வைத்துக்கொண்டே ஓடினாள். இந்த முறை ஊரில் யாரும் அவள் பின் செல்லவில்லை. காவல் நிலையத்திலும் யாரும் அவனிடம் பொது மன்னிப்பு கேட்கவில்லை. உள்ளே காவலர் அடிக்கும்போது ஏற்படும் சத்தமும், அந்த சத்தத்தை தொடர்ந்து வரும் அலறல் சத்தமும், அவள் காதில் விழும்போது, ஏனோ பள்ளிக்கூட வாத்தியார் அடிக்கும்போது பஞ்சாயத்து பண்ணி இருக்க கூடாதோ? என்று எண்ணி வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுவாள்.

எல்லா அடிகளையும் வாங்கிவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் வலியை மறப்பதற்காக சாராயத்தை வாயில் ஊத்திவிட்டு, எல்லா கோபங்களையும் தாயிடம் காட்டி விட்டு, அவன் தந்தை உருண்ட இடத்தில், அவன் உருளும் போது அவள் வாழ்வின் அவளை தாங்கிப் பிடிக்கும் தூண் விழுந்து, நொறுங்கி அதில் ஒரு துண்டு மட்டும் எதற்குமே உதவாமல் தரையில் உருளுவது போல் அவளுக்கு தோன்றும்.

குடிகாரன், களவாணி, வெறும் பயல் எனக் கூறி யாரும் பெண் கொடுக்க வில்லை. விலைமாதரிடம் போவதற்கும் அவனிடம் பணம் இல்லை. குடித்துவிட்டு பஞ்சாயத்து திண்டில் தூங்கும்போது, அத்திப்பழம் பறிக்க வந்த சிறுமிகள் சிரிக்கும் சத்தம் கேட்கவே, போதையில் தன் அறிவை விட, விரகதாபம் தலைக்கேறியது. ஒரு சிறுமியை பிடித்து இழுத்தான். மற்ற சிறுமிகள் சிதறி ஓடி ஊருக்குள் சென்று பெரியவர்களை அழைத்து வந்தனர். கையும் களவுமாக பிடிக்கப்பட்டதால் எல்லோரும் அடிக்கத் தொடங்கினர். போதையில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே அடி வாங்க ஆரம்பித்தான். சிறுவயதிலிருந்தே பீடி, சிகரெட் குடித்ததில் நுரையீரல் பலவீனமாய் இருந்தது. மொடா குடி குடித்ததில் கல்லீரலும் பாதிக்கப்பட்டு வந்தது. ஊரார் அடித்த அடியில் உள் உடம்பில் ரத்தக்கசிவு ஏற்பட்டது, மிக முக்கியமான பாகங்களில் இருந்து அதிக ரத்தம் வெளியேறத் தொடங்கியது, மரணத்தைத் தழுவ தயாரானான்.

மரணத்தருவாயில் அவன் கண்கள் சொருக ஆரம்பித்த நேரத்தில், தூரத்தில் அவன் தாய் மார்பில் அடித்துக் கொண்டு ஓடி வருவது தெரிந்தது. சிறுவயதில் அவனை அந்த மார்பில் சாய்த்துக் கொண்டு “என் குலசாமி டா நீ ராஜா மாதிரி வருவ” என அந்தத் தாய் கூறியது அந்த நேரத்தில் ஞாபகம் வந்தது. அந்த நிமிடத்திலிருந்து அவனுக்கு ஊரார் அடித்த அடி வலிக்கவில்லை. கண்கள் மூடி அவன் தரையில் சாயும் போது, அவன் தாயின் மடி அவனை ஏந்தியது. அவன் உயிர் உடலை விட்டுப் பிரியும் போது, அவன் உதட்டில் புன்னகை இருந்தது அந்தப் புன்னகையின் அர்த்தம் அந்த தாய்க்கு மட்டுமே புரியும்.


                                         credit: third party image reference

இறைவன் ஏசுபிரான் சிலுவையில் அறையுண்டு தொங்கிக் கொண்டிருந்த பொழுது தாய் மரியாள் அவரருகில் நின்று அழுதது வேதத்திலும் உள்ளது நம் எல்லோருக்கும் அது தெரிந்த விஷயம். இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து நாண்டு கொண்டு செத்தான். அவன் செத்த பொழுது அவன் தாயும் அழுது கொண்டுதான் இருந்திருப்பார். “உலக ரட்சகனை  காட்டிக்கொடுத்து விட்டாயே!  உனக்கு இது தேவை தான்” என கண்டிப்பாக நகைத்திருக்க மாட்டார்

தான் பெற்றவை எப்படி இருந்தாலும் சரி, தாய்... தாய் தான். "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு".