வாங்கிய அடிகள் எண்ணிக்கையில் அடங்கவில்லை.
வாழ்க்கை போராட்டங்களுக்கு முடிவில்லை.
முடிவு என்ன என்று ஆரம்பத்தில் தெரிவதில்லை.
சுகித்து இருக்கும் தருணங்கள் சில கணங்களே.
சுகத்திற்காக ஏங்கும் தருணங்களே அதிகம்.
ஏக்கத்தில் விடும் பெரும்மூச்சுகள் மனதின் வெளிப்பாடு.
வெளிப்படுத்தாத ஏக்கங்கள் கண்ணீரில் கரைகிறது.
வலிகள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
மீண்டும் எழுந்திருப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் எழுந்தால்,
விழப்போகும் அடுத்த அடியினால் ஏற்படும் வலியை தாங்க சக்தி இல்லை.
இப்படியே சாகவும் விதியில்லை.
எல்லாம் முடிந்தது என்று துவண்டு விழும் வேளையில்,
வலிகள் என்னை மேற்கொள்ளும் பொழுதுகளில்,
மன உறுதி கைவிடும் தருணத்தில், ஒரு சத்தம்,
நெஞ்சின் ஆழத்தில், ஓர் ஓரத்தில் எழும்பும் இதயத்துடிப்பின் சத்தத்தில்,
நீ விழுந்தாலும், வீழ்ந்தாலும் நான் தொடர்ந்து துடிப்பேன்,
எனக்கு விதித்த நாள் வரை.
என் கடமை; துடிப்பது, நான் துடிக்கிறேன்.
நான் யாரையும் ஜெயிக்க துடிக்கவில்லை.
என்னை யாரும் துடிப்பதற்காக பாராட்ட போவதில்லை.
என் கடமை துடிப்பது, நான் துடிக்கிறேன்.
நீ கைவிடுவது முயற்சியை அல்ல.
நீ அணைக்க துடிப்பது உன் வீழ்ச்சியை.
நீ யார் என்பது வெற்றியின் வரலாறு.
அந்த வரலாற்றின் பக்கங்கள் முயற்சிகள் மட்டுமே.
முயற்சி இல்லை என்றால் வரலாறு இல்லை.
வரலாறு இல்லை என்றால் நீ இல்லை.
நீ இல்லை என்றால் நான் துடிப்பது வீண்.
பிணங்களின் இதயங்கள் துடிப்பதில்லை.
நான் பிணத்துக்கு துடிக்க விரும்புவதில்லை.
நான் துடிக்க விரும்புகிறேன்.
நீ வாழ விரும்புகிறாயா? எனக் கேட்டது
கருணை காட்டுங்களேன்.
நான் சிறிது வாழ்ந்து கொள்கிறேன்.
அதிகம் வாழ ஆசை இல்லை.
ஒரு நடை பிணத்திற்காக துடிக்கிறோம்,
என என் இதயம் எண்ணாமல் இருந்தால் போதும்.
இன்னும் ஒரு முறை முயற்சி செய்யட்டுமா?