தாமரை இலையின் மேல் உள்ள நீர் துளி
போல் எந்த சூழ்நிலையிலும் சேரு தன்னை மூழ்கடிக்காதவாறு சுற்றுப்புறத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஒரு தன்மை
தன்மானத்திற்கு உண்டு. தன்மானம்
அதிகம் உள்ளவர்களை நாம் பார்த்தோமானால் 99% அவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள், அதிகம் கோபம் கொள்கிறவர்கள் ஆகவும்
இருப்பார்கள். ஏன் சிலரால்
தன்மானத்தை பாதுகாக்க முடியவில்லை? அல்லது ஏன் சிலரால் தனக்குத்தானே பரிந்து பேச
முடியவில்லை? என்பதை முந்தைய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.Self respect - unaffordable .
தன்மானம்
சுதந்திரத்திற்கு வழிவகுக்கும்
ஒரு கஃபே காபி ஷாப்பில் மிருதுளாவும் பிரியதர்ஷனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஒரு காலகட்டத்திற்கு மேல் காதலர்கள் என்ற நிலையிலிருந்து தம்பதியினர் என்ற நிலையை அடைய மிருதுளா விரும்பினாள். இரண்டு, மூன்று மாதங்களாகவே திருமணம் செய்து கொள்வதைப் பற்றி பிரியதர்ஷனிடம் விவாதித்து வருகிறாள். பிரியதர்ஷன், அந்த விவாதத்திற்கு மட்டும் சரியான பதில் கொடுப்பதே இல்லை. அதற்காக இவளை கைவிடவும் இல்லை. இவளை ஏமாற்றும் எண்ணமும் அவனுக்கு இருந்த மாதிரி இல்லை. ஏதோ ஒரு விஷயத்தினால் அவன் தடுமாறுகிறான் என்பது மிருதுளாவுக்கு புரிந்தது. வழக்கம்போல இன்றும் மீண்டும் அந்த கேள்வியை எழுப்பினாள். இன்று எப்படியாவது பதில் வாங்கி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தாள். என்ன தாண்டா சொல்றே நீ? நானும் ரெண்டு மாசமா திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கேன். நம்ம கல்யாணத்த பத்தி என்னதான் யோசிச்சு வச்சிருக்கே? என கேட்டாள். அவன் மீண்டும் மௌனத்தையே பதில் அளித்தான். “என்ன.... கழட்டி விட ஏதாவது பிளான் பண்றியா?” என கேட்டாள்.
credit: third party image reference “சீ போடி லூசு
சும்மா ஏதாவது பேசாத" என்றான்.
“அப்ப சொல்லு
என்னதான் உன் பிரச்சனை? சொன்னாதானே எனக்கு தெரியும்” என்றாள் மிருதுளா. “இல்லடி.. அரசல்புரசலாக நம்ம விஷயம்
வீட்டுக்கு தெரியும். அம்மா எப்ப பார்த்தாலும் ஏண்டா உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? இவதான் கிடைச்சாளான்னு கேட்டுகிட்டே இருக்காங்க. என்ன பதில்
சொல்றதுன்னே தெரியலை” என்றான்.
இது என்னடா அநியாயமா
இருக்கு. என்கிட்ட என்னடா தப்பு கண்டுபிடிச்சாங்க? என கேட்டாள். “தெரியாத மாதிரியே கேட்பே. உங்க அக்கா
விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்து அவங்க அப்படித்தான் ரியாக்ட் பண்றாங்க” என்றான். டேய் எங்கக்கா ஓடிப்போய் கல்யாணம்
பண்ணதுக்கு நான் என்னடா பண்றது? என்று கொஞ்சம் அதிகப்படியான கோபத்திலே
கேட்டாள் மிருதுளா. “பிரச்சனை
அவங்க ஓடிப் போனது இல்ல நீ போய் பஸ்ஸில் ஏத்தி வச்சது தான். நாளைக்கு நம்ம வீட்டிலேயும் பொம்பள புள்ளைங்க இருக்காங்க. இந்த மாதிரி செய்யமாட்டான்னு என்ன நிச்சயம். அப்படின்னு கேக்குறாங்க” என தயக்கத்துடன் பதில் அளித்தான். "டேய் அவ எட்டு
வருஷமா ஒருத்தர காதலிச்சா, வீட்ல ஒத்துக்கவே இல்ல. நல்ல பையன் வேற. எட்டு வருஷமா
ஒருத்தனை காதலிச்சுட்டு
அவனை விட்டுட்டு
இன்னொரு வேறு ஒருத்தனை கல்யாணம் பண்ணாதான் தப்பு. காதலித்தவனை கல்யாணம் பண்ணினால் என்ன தப்பு?
இப்ப நீயும் நானும் ரெண்டு வருஷமா லவ் பண்றோம். நான் உன்னை
விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணா நீ ஒத்துப்பியா? இல்ல நீ தான் என்ன விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணா நான் ஒத்துப் பேனா?. எங்க அக்காவ எல்லாரும்
ஏத்துக்கிட்டு நாலு வருஷம் ஆகுது. இன்னைக்கு எங்க அப்பா “நாங்களா
தேடி இருந்தால் கூட இப்படி ஒரு மருமகன் கிடைத்திருக்க மாட்டார்” அப்படின்னு பெருமையா
சொல்றாங்க. ஆனா நீங்க இன்னமும் வேண்டாத பழைய பாட்டு பாடிக்கிட்டு இருக்கீங்க என சிறிது காரசாரமாக கேள்விகள்
கேட்டாள். அதுக்கில்லடி வீட்ல பேசுறப்ப ஏதாவது தப்பா பேசினாங்கன்னா, நீ கொஞ்சம் அமைதியா இருந்தா எல்லா பிராப்ளம் சால்வ் ஆயிடும். நீ வேற அதை
பண்ண மாட்டே, அதனாலதான் இந்த டாபிக்கை எடுக்குறதுக்கு எனக்கு பயமா இருக்கு என்றான். "நான் ஏண்டா அமைதியா இருக்கணும். நீ இந்த இடத்தில எனக்கு ஆதரவா இருக்கணும்.
நீ என்னை அமைதியா இருக்க சொன்னா என்ன
அர்த்தம். நீ என்னை விட்டுக்கொடுக்க சொல்றது என்னோட செல்ஃப்
டிக்னிடிய (தன்மானத்தை).
இன்னிக்கி அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சப்பை விஷயத்துக்கு நான் அமைதியா இருந்தேன்னா?
வாழ்க்கை முழுவதும்
ஏதாவது அவங்க என்னை குறை சொல்லிட்டே இருப்பாங்க நான்
எல்லாத்துக்கும் அமைதியா தான் இருக்கணும். நீ என்னோட மரியாதைக்கு பாதுகாவலனா இருக்கணுமே தவிர காலம் முழுவதும் அதை கொஞ்சம் கொஞ்சமா கூறு போட்டு
விக்கிறதுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. நீ தைரியமா
உங்க வீட்ல பேசி, என்னை கல்யாணம் பண்றதுக்கு நாள்
குறிச்சிட்டு சொல்லு, நம்ம ரெண்டு பேரும் சந்திக்கலாம் அப்படி
இல்லனான்னா இதோட முடிச்சுக்கலாம். காலம் முழுவதும் சூழ்நிலைக் கைதியா
இருக்குறதுக்கு எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமே கிடையாது" என்றாள்.
இந்த
இடத்தில் அவள் காத்துக் கொண்டது தன்மானத்தை மட்டும் அல்ல, பிரியதர்ஷன் திரும்ப
வந்தால்? காலம் முழுவதும் அவள் கௌரவத்தை காப்பாற்றும் ஒரு நல்ல வாழ்க்கை துணையையும்
அவள் காத்துக் கொண்டாள்.
தன்மானம் வாழ்விற்கு நிறைவு தரும்
வீட்டின்
அழைப்பு மணி அடித்தது.
குலோத்துங்கன் போய்
கதவை திறந்தார். கதவை திறந்த குலோத்துங்கன் தான்
கண்ட காட்சியை நம்ப முடியவில்லை. 28 வருடங்களுக்கு முன் யாரால் எல்லாவற்றையும்
இழந்து கிட்டத்தட்ட நடுத்தெருவிற்கு வந்தாரோ? அவர் நின்று கொண்டிருந்தார். குலோத்துங்கன் வாழ்க்கையில் சந்திக்கவே
கூடாது என்று நினைக்கும் நபர் ரங்கநாதன். இருந்தாலும் மனதில் ரங்கநாதன் என் வீட்டு
வாசலில் என்ன செய்கிறார் யோசித்துக்கொண்டே வாங்க
என்றார். உள்ளே சென்று இருவரும் அமர்ந்தனர்
வீட்டு உதவியாளரை அழைத்து தேனீர் தயாரிக்க கூறினார். தேநீருக்கு இருவரும்
காத்திருந்த வேளையில், குலோத்துங்கன் பழைய நினைவுகளை அசை போட தொடங்கினார். குலோத்துங்கன் ஒரு அரசு பணியாளராக
இருந்தார். கையூட்டு வாங்காத ஒரு நல்ல அரசு
பணியாளர். ஒரு முறை தன் கடமையை செய்ய எத்தனித்தபோது வணிகர் ஒருவரால் கடுமையாக
நடத்தப்பட்டார். இதை குறித்து மேலிடத்தில் கவலை தெரிவித்த போது அப்பொழுது
மேலதிகாரியாக இருந்த ரங்கநாதன் “உங்களைத் தவிர எல்லோரும் கையூட்டு வாங்கிவிட்டார்கள். ஆதலால் அவன் அப்படித்தான்
பேசுவான். உங்களுக்கு இஷ்டம் இருந்தால் இந்த இடத்தில் வேலை செய்யுங்கள்
இல்லாவிட்டால் பணியிடமாற்றம் வாங்கிக்கொண்டு சென்று விடுங்கள். நானும் வாழ
மாட்டேன் மற்றவரையும் வாழ விடமாட்டேன் அப்படின்னு நீங்க நினைக்கிற வரைக்கு உங்களால
முன்னேற முடியாது” என்றார். கடிந்து
கொள்ள வேண்டியவனை கடிந்து கொள்ளாமல் காப்பாற்ற வேண்டியவனை காப்பாற்றாமல், ரங்கநாதன்
தனது பொறுப்பை சரியாக செய்யாததால் நொந்துபோன குலோத்துங்கன் பணியிட மாற்றத்திற்கு எழுதிக்கொடுத்த போது,
“உங்களுக்கு தன்மானம் ரொம்ப ஜாஸ்தி குலோத்துங்கன் நீங்க எந்த இடத்துக்கு போனாலும்
இப்படி ஒருத்தன் இருப்பான் எத்தனை ஊர் மாறுவீங்க? கொஞ்சம் உங்களை விட்டுக்
கொடுத்தா நிறைய சம்பாதிக்கலாம் ஒரே இடத்திலேயே ரொம்ப நாள் இருக்கலாம்” என அறிவுரை
கூறினார். ஏற்கனவே வேலைக்கு சேர்ந்த பின்
இது ஏழாவது பணியிட மாற்றமாக இருந்ததால் வெறுத்துப்போன குலோத்துங்கன்
தனது சொந்த கிராமத்திற்கு சென்று 5 ஏக்கர் வயக்காட்டில் விவசாயம் செய்ய
ஆரம்பித்துவிட்டார்.
அதன்பின் ரங்கநாதனை
இன்றுதான் அவர் பார்க்கிறார்.
மௌனத்தைக் கலைத்து
ரங்கநாதன் பேச ஆரம்பித்தார் பிள்ளைகளை நல்லா வளத்திருக்கீங்க குலோத்துங்கன் என ஆரம்பித்தார்.
உங்க மகளுக்கு அனைத்து வணிகர் சங்கம் சார்பாக விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கும் விழாவிற்கு தலைமை தாங்கியது நான்தான். விருதை வாங்கிட்டு உங்க மகள் பேசின பிறகு தான், அது உங்களோட மகள் என தெரிந்தது. எங்க அப்பா ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இதே சங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு, நேர்மைதான் முக்கியம்னு, தன்னோட தன்மானத்தை யாருக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று வேலையை விட்டார். முப்பது வருஷம் கழிச்சு, இன்னைக்கு அதே சங்கதால எனக்கு விருது வாங்குற மாதிரி என்னை வளர்த்திருக்கிறார். வாழ்க்கையில ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி மனுஷங்களுக்கு உண்மையா இருக்கணும், சுயமரியாதையும், தன்மானத்தையும் எவ்ளோ கஷ்டப்பட்டு காப்பாத்தனும், அப்படின்னு எங்கப்பா ஒரு நாளும் எங்களுக்கு சொல்லித் தந்ததில்லை. ஆனால் அவர் அதை வாழ்ந்து காமிச்சார். இன்னிக்கு நான் இப்படி நிக்குறேன்னா அதுக்கு முதல் காரணம் எனது அப்பாதான்” என அவள் பேசத் தொடங்கினாள். விருது வழங்கும் விழா முடித்தபிறகு, ரங்கநாதன் குலோத்துங்கனின் மகளிடம் அவளது அப்பாவை பற்றி விசாரித்திருக்கிறார். அவள் மூலமாக, குலோத்துங்கன்தான் அவரது தந்தை என தெரிந்துகொண்டு இன்று வீடு வரைக்கும் வந்து அமர்ந்திருக்கிறார். ஒரு காலத்துல பொண்டாட்டி, பிள்ளைங்க அப்படின்னு எல்லாரோட வாழ்க்கையின் தேவையை திருப்தி ஆக்குவதற்கு நம்ம நிறைய காரியங்களை செய்கிறோம். அதுல ஒன்னுதான் எல்லாரையும் அனுசரித்துப் போவது. சாதாரணமா உயரதிகாரியை அனுசரித்து போக ஆரம்பிச்சது. படிப்படியா அது கூடி, நமக்கு கீழ வேலை பாக்குறவன், மத்தவன் அப்படின்னு எல்லார்கிட்டயும் அனுசரிச்சு போக ஆரம்பிச்சுட்டோம். சும்மா எதுக்கு கஷ்டப்படணும், அவன் தர காச வாங்கிட்டு வேலை பார்க்கலாமே அப்படின்னு ஒரு எண்ணம் வந்துச்சு. அது கடைசியில் நம்ம தன்மானத்தையே இல்லாம பன்னிடும்முனு அப்ப புரியல. இப்ப புரியுது. நம்ம பிள்ளைங்க நம்ம வாழ்க்கையே நம்ம கண்ணு முன்னாடி எடுத்துக் காட்டுகிறார்கள். என்ன விட அதிகமா என் பையன் தப்பு பண்றான். ஏண்டா! நீங்க எல்லாம் நல்லா இருக்கணும், நீங்களாவது நல்லா இருக்கணும் அப்படினுதாணடா நாங்க அந்த காலத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தோம். எவ்வளவு மரியாதை குறைவு வந்தாலும் பரவாயில்லை, என் பிள்ளைகள் நல்லா இருப்பாங்க அப்படித்தான் எல்லாத்தையும் செஞ்சேன். நீ ஏண்டா இப்படி எல்லாத்தையும் கஷ்டப்படுத்துற? அப்படின்னு கேட்டா? அவன் சொல்றான் “ பார்ரா யோகியர் பேசுறாரு, அந்த காலத்துல போடாத ஆட்டம் எல்லாம் போட்டுட்டு. இன்னிக்கு உபதேசம் சொல்றாரு” அப்படின்னு சிரிக்கிறான். நீ உன் பிள்ளைக்கு சேர்த்து வச்ச. நான் என் பிள்ளைக்கு சேர்த்து வைக்கிறேன்” அப்படின்கறான். வீட்டிற்கு வெளியேயாவது மனசுக்குள்ள திட்டினாலும் வெளியில் சிரிச்ச வணக்கம் சொல்றாங்க. ஆனா வீட்டுக்குள்ள ஒரு மரியாதை கிடையாது .யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டோமோ அவங்களே நம்மள ஏறி மிதித்து எள்ளி நகையாடறாங்க என்றார்.
குலோத்துங்கன் மனதின் மாறாத ரணம், ஆறாத ரணம், இவர் பேசப் பேச ஒரு வடு கூட இல்லாமல் மறையத் தொடங்கியது. முப்பது வருடங்களுக்கு முன், நான் எடுத்த முடிவு சரியா? தவறா? என்று இன்றுவரை அவர் யோசித்துக் கொண்டே இருந்தார். அதற்கு இன்று விடை கிடைத்துவிட்டது. நாங்க எல்லாம் பொண்டாட்டி புள்ளைய காப்பாத்தணும் என்று சொல்லிட்டு, நல்லா வாழ வைக்கணும் என்று சொல்லிட்டு, அவங்க வாழ்க்கைய, எங்க பரம்பரைய நாங்களே அழித்துவிட்டோம் என்று கூட சொல்லலாம். என்னைப்பார்த்து என் பிள்ளை வளர்ந்தான். என் பிள்ளையை பார்த்து அவன் பிள்ளை வளர்கிறான். ஆனால் நீ செஞ்ச ஒரு நல்ல விஷயம் உன்னோட மொத்த பரம்பரையும் காப்பாற்றி விட்டது. அன்னைக்கு உன்ன பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி இருந்துச்சு. இன்னிக்கி உங்கள பாக்குறதுக்கு அவ்வளவு பெருமையா இருக்குது. மனுஷனுக்கு புரிவதில்லை வாழ்க்கையில் எது முக்கியம் எது முக்கியம் இல்ல என்று.
ராத்திரி
தூங்கப் போகும்போது கண்ண மூடுனா பயமா இருக்கு. நிம்மதி என்றால் என்ன? அப்படின்னு
இப்பதான் புரியுது.
இந்த வழியாக ஒரு
கல்யாண வீட்டுக்கு வந்தேன். அதான் நேர்ல பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தேன். என்று
சிறிது நேரம் பேசிவிட்டு, ரங்கநாதன் விடைபெற்று சென்றார். குலோத்துங்கன் அன்று
தன்மானத்தை காப்பாற்றுவதற்காக கொடுத்த விலை பெரியது என்றாலும், அவர் வாழ்க்கையில்
அடைந்தது ஒரு விலை மதிப்பில்லாத பொக்கிஷம்.
தன்
மானத்திற்கும், வெட்டி
வீராப்பிற்கும், கோழைத்தனதிற்கும் நூலளவு வித்தியாசமே உண்டு. வெட்டி வீராப்பினால் குடும்பத்தையும், உறவுகளையும், நண்பர்களையும் இழந்த பலர் உண்டு. உதாரணத்துக்கு சகோதரர், சகோதரிகளோடு சண்டை
போட்டுக்கொண்டு அவர்களின் பிள்ளைகளின் திருமண விழாவிற்கு செல்லாமல் இருப்பது. தன்மானத்தோடு வாழ்பவர்களை பார்த்தால் நமக்கு மனதில் மரியாதை
ஏற்படும். வெட்டிவீராப்போடு
வாழ்பவர்களைப் பார்த்தால்
நமக்கு எரிச்சல் ஏற்படும். தேவையில்லாத பிரச்சனை பண்ணுபவர்களை வாழ்விலிருந்து தூரமாகவே வைக்கத்
தோன்றும்.
இதற்கு
அடுத்த முனை “கோழைத்தனம்” நான் இதை செய்தால் எதிர்முனையில் இருந்து என்ன நடக்கும்
என்பதை யூகித்துக் கொண்டு, பிரச்சினைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், நான்
தன்மானம் மிக்கவன் என்றும் எனக்கு இது தேவையில்லை என்றும் தன்மானத்தின் போர்வையில் ஒளிந்து கொள்ளும்
ஒரு தன்மை கோழைத்தனம்.
ஆரம்பத்தில் நன்றாக
இருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு அது கோழைத்தனம் என
தெரிந்து விட்டால்? இருக்கிற மரியாதையும் போய் எல்லோராலும் மிகவும் தரை குறைவாக
எண்ண படுவோம்.
நம்
வாழ்நாள் இறுதிவரை தன்மானத்தோடு வாழ்வது மிகவும் கடினம். அப்படி வாழ்ந்து முடித்தவர்களை
பார்த்து உலகம் வியக்கத்தான் செய்திருக்கிறது. நான் பார்த்த பல அனுபவங்களில்
இருந்து எழுதுகிறேன் தன்மானம் ஒரு குறைத்து மதிப்பீடு செய்யப்பட்ட விலை உயர்ந்த
பொக்கிஷம்.
Super ya ,unmaieyly self respect is a treasure which should not be sold for small reasons, superb ya .Truth alone triumphs
பதிலளிநீக்கு