வெள்ளி, 3 ஜூலை, 2020

நான் ஏன்? அவள் ஏன்? அவர்கள் ஏன்?

நான் ஏன் சாகணும் சிஸ்டர்? தீப்தி பாயல் இந்த கேள்வியை கேட்கும் போது அவளுக்கு வயசு 20, எனக்கு வயசு 24. போன் மேரோ ட்ரான்பிளான்ட் யூனிட், தமிழ்ல, எலும்பு மஞ்சை மாற்றுப் பிரிவு - பி எம் டி யு (BMTU) அப்படின்னு சுருக்கமா சொல்லுவாங்க. பி எம் டி யூல சிகிச்சை முடிந்த பிறகு சில நாட்கள் நோயாளிகளுக்கு சிகிச்சைகள் பலன் அளித்தனவா? இல்லையா? அப்படின்னு கண்காணிக்கிற பிரிவுல நான் வேலை பார்த்தேன். போஸ்ட் போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட் யூனிட்) 95 சதவீதமான நோயாளிகள் ரத்த புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோயாளிகள் தான் இருப்பாங்க. தீப்தி பாயல் இந்தக் கேள்வியை என்கிட்ட கேட்கும்போது ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி எல்லாம் பண்ணதனால தலையில முடி இல்லாம ஸ்கார்ஃப் கட்டியிருந்தாங்க

                                         Photo by Issara Willenskomer on Unsplash

ரேடியேஷன் தெரபில அவர்களுடைய தோல் சுருக்கம் அடைந்து அவர்களுடைய இயல்பான நிறம் மாறி கருமையான நிறத்துக்கு மாறி இருந்தாங்க. திடீர்னு அப்படி ஒரு நோயாளியை பார்க்கும்போது, மருத்துவத்துறையில் இல்லாதவங்களுக்கு சற்றே முகம் சுளிக்க வைக்கும். அல்லது பார்வையில் சிறிது மாற்றம் தெரியும். நாங்கள் மருத்துவத் துறையில் இருப்பதால், அவர்களிடம் தெரிகிற ஒவ்வொரு தழும்பும், அவர்களிடம் தெரிகிற ஒவ்வொரு மாற்றங்களலும், அவர்கள் வாழ்வதற்காக போராடிய போராட்டத்தின் அடையாளம் என்பது எங்களுக்கு தெரியும். நானும் தீப்தியும் ஒரு சிற்றுண்டி உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். (Nurse patient relationship) செவிலியர் மற்றும் நோயாளிகள் இடையேயான தொடர்பு அல்லது சம்பாஷனை எதுவாக இருந்தாலும் ஒரு அளவுக்கு மீறி போகக்கூடாது என்பது எல்லா மருத்துவமனைகளிலும் ஒரு சட்டமாக இருக்கும். ஆனால் புற்று நோய் பிரிவு, அதுவும் நான் வேலை பார்த்த பி எம் டி யு பிரிவில், இந்த செவிலியர் -  நோயாளிகள் உறவு சிறிது அதிகமாகவே காணப்படும். ஏனென்றால் அந்தப் பிரிவின் உள்ளே நோயாளிகளின் சொந்தக்காரர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அந்த நேரத்தில் அந்த சிகிச்சை அளிக்கப்படும் போது நோயாளிகள் மிகவும் வலியும் வேதனையும் அனுபவிப்பார்கள். செவிலியர் மருத்துவர் தவிர வேறு யாரும் அருகில் இருப்பதற்கு வாய்ப்பில்லை.( இதைப் பற்றி அதிகம் தெரிய வேண்டுமானால் கருத்துரையில் கேள்விகளைக் கேளுங்கள் நான் பதில் அளிக்கிறேன்). ஒரு மனிதனின் வாழ்வில் மிகவும் துன்பமான நாட்களில் அதுவும் ஒன்று. அந்த நேரத்தில் கூடவே இருக்கும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் பலர் கடவுளாக பார்ப்பர். 90 சதவீத நோயாளிகள் அந்த நேரத்தில் யார் அவர்கள் அருகில் சென்றாலும் எரிச்சல் அடைவார்கள், கோபப்படுவார்கள், அழுவார்கள். 90% தன்னம்பிக்கை அற்ற நிலையில் இருப்பார்கள். நோயாளிகளின் தன்மை எப்படி இருந்தாலும் முகம் கோணாது அவர்களை கவனித்துக் கொள்வதால், அந்த செவிலியர்களை அந்த நோயாளிகள் வாழ்க்கையில் ஒரு நாளும் மறப்பதில்லை. அப்படி அறிமுகமான நபர் தான் தீப்தி பாயல். தீப்தி பாயல் மேற்கு வங்காளத்தில் இருந்து சிகிச்சைக்காக மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்தவர். தீப்தி பாயலின்  தந்தை ஒரு கல்லூரி பேராசிரியர். தாயார் ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர். ஒரே மகளான தீப்தி பாயல் மீது அன்பு காட்டி, கண்ணும் கருத்துமாய் அந்தப் பெற்றோர்கள் வளர்த்தனர். தீப்தி பாயலுக்கு அவங்க அப்பான்னா உயிர். அப்பா என்ன சொன்னாலும் செய்யக்கூடிய தன்மை உடையவள். தீப்தி பாயலின்   தந்தை சேகர் பிஸ்வாஸ், ஒரு கண்ணியமான பெண் சமுதாயத்தில் எப்படி மதிக்கப்படுவாள் என்பதை ஒவ்வொரு நாளும் எடுத்துக்காட்டுகள் கூறி விளக்கியதால், தீப்தி எப்பொழுதுமே பிறரை சாராது சுதந்திரமாக, தன் கருத்துக்களை எங்கும் கூறக்கூடிய தைரியமான பெண்ணாக வளர்ந்தாள். அப்பா ஒரு நாள் ஏதோ ஒரு ஆசையில் ஐஐடி சென்னையில் நீ சேர்ந்து படித்தால் நான் சந்தோஷப்படுவேன் என்று கூறியிருக்கிறார். அதை வேதவாக்காக எடுத்த தீப்தி பாயல், தனது படிப்பிலும் தனது அப்பாவின் கனவிலும் முழு கவனம் செலுத்தி, வேறு எந்த விஷயத்திலும் மனதில் இடம் கொடுக்காமல் ஐஐடி சென்னையில் சேருவதற்காகவே படிக்க ஆரம்பித்தாள். இதில் நடுவில் வந்த பல நட்புகள், பல காதல் கடிதங்கள், பல சுற்றுலாக்கள், பல திருமண விழாக்கள், இப்படி பல விஷயங்களை தியாகம் செய்து ஒரே குறிக்கோளில் பயணித்ததால் அவர்களுடைய எல்லா முயற்சிகளும் பயன் அளித்தது எப்பொழுதுமே நல்ல மதிப்பெண்கள், பலராலும் ஏறெடுத்து பார்க்கப்பட்டாள். அவர்களுடைய வாழ்க்கை எல்லோராலும் பொறாமைப்பட வைக்கிற வாழ்க்கையாக இருந்தது. எல்லார் மனதிலும் எப்படி ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புவார்களோ? எப்படி ஒரு அம்மா அப்பா வேண்டும் என்று விரும்புவார்களோ? எப்படி வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடன் பயணிக்க வேண்டும் என்று விரும்புவார்களோ? அது எல்லாமுமாக தீப்தி பாயலின் வாழ்க்கை இருந்தது. 17 வயதில் சிபிஎஸ்சி போர்டு எக்ஸாம் எழுத தயாராகும்போது டிசம்பர் மாதத்தில் இருந்தே உடல் எடை குறைய ஆரம்பித்தது. தந்தையும், தாயும் மகள் அதிகமாக படிக்கிறாள் ஆதலால் உடை எடை உடல் எடை குறைகிறது என யோசித்தார்கள். அதன் பின் அடிக்கடி சோர்வடைய ஆரம்பித்தாள். முகம் வெளிரி காணப்பட்டது. எல்லாவற்றையுமே படிப்பின் காரணமாகவும், தூக்கமின்மையின் காரணமாகவும் மகள் இவ்வாறு இருக்கிறாள் என எண்ணிக் கொண்டார்கள். சரி பரீட்சைகள் முடியட்டும். பிள்ளையை வீட்டில் ஓய்வெடுக்க வைத்து உடம்பை தேத்தி விடலாம். கல்லூரிக்குச் செல்லும் பொழுது குழந்தை மிகவும் ஆரோக்கியமாக சென்று விடுவாள் என மனதை தேற்றிக் கொண்டார்கள். பல வருடங்களாக ஒரு விஷயத்திற்காக உழைத்ததால் இறுதிப் பரீட்சை மிகவும் நன்றாகவே எழுதினாள். ஐஐடி என்றன்ஸ் எக்ஸாம் நெருங்கும் வேளையில், ஒருநாள் திடீரென மயங்கி விழுந்தாள். அருகில் இருந்த மருத்துவர் ரத்த சோகைக்கான பரிசோதனைக்கு எழுதிக்கொடுத்த பொழுது சில முடிவுகள் வித்தியாசமாக தெரியவே! பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பல நண்பர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் ஒரு நல்ல மருத்துவமனைக்கு வந்து சேர்த்தார்கள் ஸ்டேஜ் 3 புற்றுநோய் என்பது தெரியவந்தது. வழக்கம் போலான ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி எல்லாமே கொடுக்கப்பட்டது. மனதளவில் தைரியமான பெண்ணாக இருந்ததால், பலவற்றையும் தாங்கி கடைசியாக போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட் யூனிட்டிற்கு வந்தாள். அங்கு உருவானது தான் எங்களது நட்பு. அவள் சிகிச்சை முடித்த பின்னும் நாங்கள் சந்திக்கும் அளவிற்கு தொடர்ந்தது. ஒரு பதினேழு வயது பெண்ணிடம் நட்பு வைத்திருக்கும் உணர்வு இருக்காது. அவளது பேச்சில் அவ்வளவு முதிர்ச்சி இருக்கும். நிறைய நேரங்களில் அவள் எனக்கு ஆறுதல் கூறுவாள். தனக்கு தலையில் முடி இல்லாதது பற்றி கவலையே பட மாட்டாள் எப்பொழுதும் தலையில் ஸ்கார்ஃப் கட்டியிருப்பாள். ஒருமுறை அவளது புகைப்படத்தை காண்பித்து இருக்கிறாள். வெஸ்ட் பெங்கால் நபர்கள் எவ்வளவு வெளுத்த தோலுடன் இருப்பார்கள் என்பது அந்த புகைப்படத்தில் தெரிந்தது. இப்பொழுது அவள் தோள் இருக்கும் நிறத்திற்கு யாராவது அவளை வேறுவிதமாக பார்த்தால், இவளாகவே சிரிப்பாள் அவளுடைய தன்னம்பிக்கை எதிர்ப்புற நபரின் பரிதாப பார்வையை மாற்றிவிடும். இறைவனிடம் ஜெபிக்கும் பொழுது எனக்கு ஜெபிப்பதை விட அவளுக்காக அதிகம் ஜெபித்தேன். புற்றுநோய் சிகிச்சை எடுப்பவர்களுக்கு தெரியும் ஒரு இடத்தில் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தால் சில நேரங்களில் அந்த சிகிச்சை பல வருடங்கள் கூட தொடரும். ஆரம்பத்தில் சிகிச்சைக்கு ஒத்துழைத்த உடம்பு நாட்கள் செல்ல செல்ல சிகிச்சைக்கு பலன் இல்லை . பலன் இல்லை என்று தெரிய வந்த நாளிலிருந்து அடிக்கடி சந்தித்தாலும் இருவரும் அமைதியாகவே அமர்ந்திருப்போம்.  ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக தனது மொட்டை தலையை மறைக்காமல், முகத்திற்கு பவுடர் அல்லது சாயம் பூசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். என்னாச்சு? என கேட்டேன். let the world know I am dying, அதாவது இந்த உலகத்திற்கு தெரியட்டும் நான் மரித்துக் கொண்டிருக்கிறேன் என்று எனக் கூறினாள். 3 வருடமாக நீ மரித்துக் கொண்டு தான் இருக்கிறாய் ஆனால் மரணம் உன்னை நெருங்காது இருக்க காரணம் உன் மனதில் உள்ள தன்னம்பிக்கை. என்று உன் தன்னம்பிக்கை மறைகிறதோ அன்று உண்மையிலேயே நீ மரிக்க ஆரம்பித்து விடுவாய் என்று கூறினேன். என்ன வசனம் பேசுகிறாயா? என்றாள். ஒவ்வொருமுறை தோழிகள் வெளியே சுத்த செல்லும்போதும், நமக்கு ஒரு நாள் வரும் அன்று நான் மகிழ்ந்திருப்பேன் என எண்ணிக்கொள்வேன். ஒவ்வொருமுறை ஒருவன் காதல் கடிதம் நீட்டும்போது, எனது குறிக்கோளை அடைந்தபிறகு நானும் காதலித்து மகிழ்வேன் என எண்ணிக்கொள்வேன். சிகரத்தின் உச்சியை அடைவதற்கு ஒரு எட்டு இருக்கும் பொழுது பாதாளத்தில் விழுந்து விட்டேன். அப்பொழுது கூட எனக்கு வலிக்கவில்லை. முந்தின வாரம் இந்த நிலைமையிலும் ஒருவன், நான் உன்னை காதலிக்கிறேன் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என கேட்டான். உலகத்தின் ஒட்டுமொத்த வலியும் என் உச்சந்தலையில் இறங்கியது போல உணர்ந்தேன். இறைவன் அன்றும் என்னை வாழ விடவில்லை. இன்றும் என்னை வாழ விடவில்லை அவனுக்கு நான் என்ன பதில் கூறுவேன்? . 

                                   Image by Rudy and Peter Skitterians from Pixabay

இப்படி அவள் கூறும்போது அவளது கைகளில் இனிமேல் சிகிச்சை செய்வதற்கு எதுவுமில்லை வீட்டிற்கு அழைத்து சென்று அவளை சவுகரியமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது ஆங்கிலத்தில் பாலியேடிவ் மேசர்ஸ்  இன்னும் கவுரவமாக கூறினால் “make her comfortable”. அதன்பின் தான் என்னை பார்த்து கேட்டாள் நான் ஏன் சாகணும் சிஸ்டர்? எந்த நிலமையிலையும் என்ன விரும்புற ஒருத்தன் இருக்கான். இப்பவாவது கடவுள் கருணை காட்டக் கூடாதா என கேட்டாள். வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்துல வர்ற மாதிரி, சாகுற வரைக்கும் என்ஜாய் பண்ணு அப்படின்னு சொல்ல எனக்கு முடியல ஏன்னா இது வாழ்க்கை. அவள் அந்த முடிவை எடுக்க விரும்பி இருந்தால், அவளே எடுத்து இருப்பாள் இப்படி ஸ்கார்ஃப் கட்டாம மொட்டைத் தலையோட உக்காந்து இருக்க மாட்டாள். கிறிஸ்தவ முறைப்படி நிறைய பதில்கள் எனக்கு தெரியும். ஆனால் சிற்றாலயத்தில் இருந்து வந்த ஆயர்கள் அவளுக்கு ஆயிரம் பதில்களை ஏற்கனவே சொல்லி விட்டார்கள். அவள் என்னிடம் கேட்டது அந்த ஆயிரம் பதில் இல்லாமல் 1001 வது பதில். சத்தியமா அதைத் தாண்டி என்கிட்ட பதில் இல்லை. சிறிது நாட்களில் அவள் அங்கிருந்து கிளம்பினாள் அலைபேசி எண் கொடுத்து விட்டு சென்றாலும், எத்தனை முறை அழைத்தாலும் அவள் என்னிடம் பேசவே இல்லை. அதற்கப்புறம் அவள் நிலைமை என்ன ஆனது என எனக்கு தெரியவில்லை. இன்றுவரை என் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி “why should I die sister”. 

அவள் ஏன்?

                                                    credit: third party image reference

பிரீதம் மரணத்தருவாயில் செயற்கை சுவாச குழாயோடு இணைக்கப்பட்டிருக்கிற 6 வயது சிறுமி. இரண்டு மாதங்களாக செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கிறாள். வீடு வரை விற்று  அவளது தந்தை சிகிச்சை செலவு செய்து வருகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் செய்யமுடியாத நிலையில், மருத்துவர்கள் பெற்றோர்களை அழைத்து இனி உங்கள் பிள்ளையின் சிகிச்சையை நீட்டிப்பது, அவளுக்கு கொடுமை செய்யும் செயல் போன்றது. அந்த பிஞ்சு உடல் இனி தாங்காது அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் நிம்மதியாக குடும்பத்தோடு சேர்ந்து கடைசி நிமிடங்களை கழிக்கச் செய்யுங்கள் எனக் கூறினர். அடுத்த கணமே தாய் கதறினாள். என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க? குடிகாரன், பொம்பள பொறுக்கி, தப்பான தொழில் பண்ற பொண்ணு எல்லாரும் வாழறாங்க டாக்டர். ஏன் என் மக வாழக்கூடாது? அவள் ஏன் சாகணும் டாக்டர்?. எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை டாக்டர். எங்க தலையை அடமானம் வைத்தாவது காசு கொண்டு வரேன் டாக்டர். என் பிள்ளையே வீட்டுக்கு அனுப்பிடாதீங்க டாக்டர் என கதறினாள். கணவன், மனைவியை வெளியே அழைத்துச் சென்றான். சிறிதுநேரத்தில் மீண்டும் உள்ளே வந்து அங்கு நின்று கொண்டிருந்த மருத்துவரின் கால்களில் விழுந்தான். என் மகளோட நெஞ்சாங்கூட்டில் அசைவு இருக்கிற வரைக்கும்தான் என் பொண்டாட்டி மூச்சு இருக்கும் டாக்டர். என் மகள் சுவாசிக்கவில்லை, அந்த கருவிதான் சுவாசிக்க உதவுதுன்னு தெரியும். ஆனாலும் அந்த அசைவு இருக்கணும் டாக்டர். நாங்க ரெண்டு பேரும் வாழனும்னா அவளோட நெஞ்சாங்கூடு அசயனும் டாக்டர். என காலில் விழுந்து அழுதான். அந்த தலைமை மருத்துவர், செவிலியர் அறைக்கு வந்து நான்கு நிமிடங்கள் அழுது விட்டு வெளியே சென்றார். அந்த தாயார் கேட்ட கேள்வி, என் மக ஏன் சாகணும் டாக்டர்? அந்தக் கேள்விக்கு யார்கிட்டயும் பதில் கிடையாது. இன்று இரு குழந்தைகளின் தாயான எனக்கு அந்த நெஞ்சாங்கூட்டின் அசைவு எவ்வளவு முக்கியம் என்று தெரியும். அந்தத் தாயின் வலியை  இன்று என்னால் உணர முடியும்.

அவர்கள் ஏன்?

                                           credit: third party image reference

இப்படி இருபத்தோரு வயதிலிருந்து 26 வயதிற்குள் ஏராளமான வலிகள். ஏராளமான மரணங்கள். ஏராளமான அனுபவங்கள். எல்லாவற்றையுமே கண்முன்னால் பார்த்ததால் ஒரு 60 வருட ஞானியின் மனதை போல் வாழ்க்கை மாறி விட்டிருந்தது. சாதாரணமாக ஒருவரை பார்த்து, அவங்க ஏன் இப்படி பண்றாங்க? என எல்லோரும் கேட்கும் கேள்வி நான் அதிகம் கேட்பதில்லை. ஒவ்வொருவருடைய முடிவிற்குப் பின் எவ்வளவு பெரிய வலிகள் மறைந்து இருக்கும், என ஓரளவு யூகிக்க முடியும். நாம் இன்று அடுத்தவர் எடுக்கும் முடிவுகளில், கருத்து கூறும் இடத்தில், வாழ்க்கை நம்மை வைத்திருக்கலாம். பொறுப்பற்ற முறையில், தவறாக கருத்துக்களை பரிசீலனை செய்தால்? ஒருநாள் வாழ்க்கை நம்மை அந்த வலியும் வேதனையும் நிறைந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தும். அன்று என்ன முடிவு எடுக்க வேண்டுமென கண்டிப்பாக நமக்குத் தெரியாது. ஆகையால் அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்? அல்லது அவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? அல்லது அவர்கள் ஏன் இதை செய்யக்கூடாது? இந்த அவர்கள் ஏன்?” என்ற கேள்வியை கேட்கும் முன் நூறு தடவை யோசியுங்கள். என்னைக் கேட்டால் சில நேரங்களில், நமது கருத்துக்களை பதிவு செய்யாமல் இருப்பதே ஒரு நபருக்கு அவர் வாழ்வில் நாம் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.


5 கருத்துகள்: