செவ்வாய், 14 ஜூலை, 2020

மரணம் - ஒரு மாயத்தோற்றம். Death - A magical illusion.

              

                                                 credit: third party image reference

நாம் சுவாசிக்கிறோம் என்று சொல்லலாம், ஆனால் நாம் வாழ்கிறோம் என்று கூற முடியுமா?

சாவு அழகானதாக இருக்கும், மக்கள் உயிரொடு இருந்தால் – ஓஷோ

(வெற்றுப் படகு)   பக்கம் 17

இப்பொழுது சொல்லுங்கள் யார், யார் வெறுமனே சுவாசிக்கிறார்கள், யார், யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று. தயங்காமல் சொல்கிறேன் நான் சுவாசித்து  கொண்டு  மட்டுமே இருக்கிறேன். நாம் எப்போது வாழத் தொடங்குகிறோம்.

யார் வாழத் தொடங்குகிறார்கள்? யார், யார் சுவாசிக்க மட்டுமே தொடங்குகிறார்கள்? சாதனை செய்தால் மட்டுமே சரித்திரத்தில் இடம் பிடிப்போம் என்று இல்லை. சாதாரண நிலையிலும், “சாதகமாக இருந்தால் மட்டுமே நியாயமாக நடப்பேன்” என்று இல்லாமல், அசாதாரண சூழ்நிலையிலும் “நான் நானாகத்தான் இருப்பேன்” என்பதும் சாதனைதான். யாரும் பிறந்ததிலிருந்தே சுயநலகாரர்களும் கிடையாது, சாதனையாளர்களும் கிடையாது. சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் ஒருவனை சாதனையாளனாக மாற்றுகிறது, வேறொருவனை சந்தர்ப்பவாதி ஆக மாற்றுகிறது. கர்மா, விதி என பல தரப்பாக வாழ்க்கையை பிரித்தாலும், நன்றாக யோசித்து பார்த்தால் நாம் எடுக்கும் முடிவுகள்தான் நம்மை ஒவ்வொரு நாளும் பின்தொடர்ந்து வரும்.

நான் சிறுவயதில் ஒரு கட்டுரையில் எழுதினேன்

காய்கறி வெட்டும் பொழுது, தெரியாமல் கத்தி கையில் பட்டு

உதிரம் கொட்டும் பொழுதுதான்!

நான் உயிரோடு இருப்பதாக உணர்கிறேன். என்று.  

ஒரு கிராமத்திற்குள் 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருக்கிறாள். அப்போது ஒரு பெண்மணி மற்றொரு பெண்மணியை பார்த்து “யார் இந்த பெண்?  என கேட்கிறார். அதற்கு அந்தப் பெண்மணி “இந்தப் பிள்ளையை தெரியாதா? நம்ம -------,அக்கா பொண்ணு என்கிறாள். யார்? என்று கேள்வி கேட்ட அந்த பெண்மணி “முப்பது வருடத்திற்கு முன் ஒரு ---- சம்பவத்தால் இறந்துபோன அந்தப் பெண்மணியின் மகளா? என கேட்கிறாள். ஆமா அவளேதான். அவங்க அம்மா சிரிச்சா! அப்படி இருக்கும். ஒருநாள் ரோட்டில் போகும்போது காலில் இரும்பு குத்திடுச்சு, வீட்டுக்கு கூட்டிட்டு போய் மருந்து வச்சது மட்டும் இல்லாம, அவங்க அண்ணன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து ஏதோ டிடியா? கீ டியா? அந்த ஊசி போட சொன்னாங்க. அந்த மனுஷனும் காசு வாங்காம ஊசி போட்டார்” என்றாள். “அந்த அக்காவை பத்தி தான் நல்லா தெரியுமே. சரி. . .  இந்த பிள்ளை என்ன பண்ணுது?” எனக் கேட்டாள். “அது தெரியல இந்தப் பக்கமா போகும், வரும் அவ்வளவுதான்” என்றாள். இப்பொழுது கூறுங்கள் தாய்-மகள் இரண்டு பேரில் யார் வாழ்ந்து கொண்டிருப்பது? யார் நடைபிணமாக திரிந்து கொண்டிருப்பது? என்று. எப்பொழுது மனிதன் வாழத் தொடங்குகிறான். இரண்டு சம்பவங்கள் மூலமாக பார்ப்போம்.

சம்பவம் 1

                                            credit: third party image reference

ஒரு பேருந்தில் இரு மனிதர்கள் சண்டை போட்டுக்கொண்டே சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவனின் தங்கையை இன்னொருவன் திருமணம் செய்துள்ளான். பெண் எடுத்தவன் மிகவும் கோபமாக கத்துகிறான்.” வண்டியை விட்டு வெளியே இறங்கி, முதல் வேலையாக, உன்னை கொல்லாமல் விடமாட்டேன்” என கத்துகிறான். பெண் கொடுத்தவன் “நீ ஏதோ தெரியாமல் பேசுகிறாய். நீ நினைக்கிற மாதிரி நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் உன்னை ஏமாற்றவில்லை” என திரும்பத் திரும்ப தன் நிலையை விளக்கிக் கொண்டே இருக்கிறான். “உன் தங்கையை, உன் வீடு அனுப்பி விடுகிறேன். நீயே அவளை பார்த்துக்கொள். துரோகிகளை என்னால் கூட வைத்துக் கொண்டு வாழ முடியாது” என சப்தமிட்டு கூறுகிறான். அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, பேருந்து ஒரு பாலத்தில் இருந்து உருண்டு கீழே விழுகிறது. செங்குத்தான பாலம் ஆதலால் மருத்துவ அவசர ஊர்தி ஏறி இறங்குவதற்கு சிரமப்படுகிறது. காப்பாற்றுபவர்கள், கீழிருந்து துாக்கு படுக்கை(stretcher) வைத்து ஒவ்வொருவராக தூக்கிச் சென்றார்கள். தன்னைவிட தன் மச்சானுக்கு, அதாவது பெண் எடுத்தவனுக்கு அதிகம் ரத்தம் போவதை பார்க்கிறான் பெண் கொடுத்தவன். தன்னை காப்பாற்ற வந்தவர்களைப் பார்த்து கூறுகிறான் “எனக்கு ஒன்னும் இல்ல. என் மச்சான காப்பாத்துங்க” என கத்துகிறான். மச்சானை தூக்கி படுக்கையில் படுக்க வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தனது மச்சானை பார்த்து “நீ குடிச்சிட்டு காச செலவழிக்கிறன்னு, என் தங்கச்சி தான் லாபமா வந்த காசை பேங்க்ல போட சொல்லுச்சு. உன் பொண்டாட்டி பேருல தான் அந்த காசு இருக்குது. நான் அஞ்சு பைசா எடுக்கல. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என் தங்கச்சி உன் தங்கச்சி(பெண் கொடுத்தவனின் மனைவி) ரெண்டு பேரையும் பாத்துக்க என கத்தினான். காப்பாற்றுபவர்கள், பெண் எடுத்தவனை அவசர ஊர்தியில் அனுப்பி விட்டு, திரும்பி வந்து பார்த்த பொழுது பெண் கொடுத்தவன் உயிரோடு இல்லை.

இந்த சம்பவத்தில் உண்மையிலேயே உயிர் இழந்தவன் யார்?  உயிர் வாழ்பவன் யார்?

சம்பவம் 2

நாலாவது நிலை புற்றுநோயால் போராடிக்கொண்டிருக்கும் ஒரு மனைவி. அடுத்தகட்ட சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல இருக்கும் கணவனிடம் உறவினர்கள் “இங்க பாருடா பத்து சதவிகித குணமாகும் தன்மை தான் உனது மனைவியின் நோய்க்கு இருக்கிறது. ஆனால் நீ செலவழிக்கப் போகிறது உன் வாழ்க்கையின் மொத்த சம்பாத்தியத்தையும், மற்றும் சொத்துக்களையும். எல்லாவற்றையும் இவளுக்கு செலவழித்து முடித்துவிட்டால்? அவள் உயிரோடு வந்து விட்டால் பரவாயில்லை. ஒருவேளை சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால்? உன் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்? என அறிவுரை கூறிக் கொண்டிருந்தனர். கொஞ்சம் கூட யோசிக்காமல் கணவன் கூறினார்

                                           credit: third party image reference

“இன்பத்திலும் - துன்பத்திலும், உயர்விலும் – தாழ்விலும், சுகத்திலும்- துக்கத்திலும், மரணம் நம்மை பிரிக்கும் வரை” அப்படி என்று அவளை கை பிடிச்சுட்டு, இப்ப என்னால முடியாது. நீ பாதியிலே போ  அப்படின்னு சொன்னா என்ன அர்த்தம்” என்றான். உறவினர்களை பேசி அனுப்பிவிட்டு, மனைவியின் அறைக்குள் வந்தான். மனைவி குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருந்தாள் “அம்மாவுக்கு வலிக்குது தூங்குறேன்” எனக் கூறிக் கொண்டிருந்தாள். குழந்தைகள் அம்மாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அறையை விட்டு வெளியே சென்றார்கள். கணவன் வலி மாத்திரையை எடுக்க விழைந்த போது “வேண்டாம், தானாகவே தூக்கம் வருகிறது. வலியும் சற்று குறைந்த மாதிரி இருக்கிறது. தூங்குறேன். இடையில  எந்திரிச்சேன்னா மாத்திரை சாப்பிடுகிறேன்” எனக்கூறிவிட்டு தூங்கச் சென்றாள். அவள் ஏற்கனவே தாங்க முடியாத வலியையும் வேதனையையும் அனுபவித்து இருந்ததால், நீண்ட இளைப்பாறுதல்அடைந்தாள்.

கணவனுக்கு பாரமாக இல்லாத வகையில், மனைவி அவன் மனதில் வாழ ஆரம்பித்தாள். மனைவியை எந்த வகையிலும், எந்த நிலையிலும் கைவிடமாட்டேன் என்று அவன் கடவுளின் சன்னிதானத்திற்கு முன் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றி அவன் மனித தெய்வமாக வாழ ஆரம்பித்தான்.

நம் எல்லோருக்குமே வாழ்வதற்கும், வாழ ஆரம்பிப்பதற்கும் ஒரு தருணம் கொடுக்கப்படுகிறது. அதில் நாம் எடுக்கும் முடிவுகள் தான், நாம் வாழ்கிறோமா அல்லது நடைபிணமாக திரிகிறோமா என்கின்ற வாழ்வின் நோக்கத்தை நோக்கி நகரச் செய்கிறது. .

நான் மிகவும் விரும்பி வாசிக்கும் விவிலியத்தில் இவ்வாறாக

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் 

(2 தீமோத்தேயு 4:7)

பவுல் என்கின்ற அப்போஸ்தலரால் கூறப்பட்டுள்ளது.

மரணம் என்பது ஒரு மாயத்தோற்றம் ஏனென்றால் பலர் மரித்த பின்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சிலர் வாழ்ந்து கொண்டிருந்தாலும் வாழ்கின்ற அடையாளம் அல்லது வாழ்கின்ற சுவடே இல்லாமல் உலாவிகொண்டிருகின்றனர். இதைத்தான் பாரதியார்

தேடிச் சோறுநிதந் தின்றுபல
சின்னஞ் சிறுகதைகள் பேசிமனம்
வாடித் துன்பமிக உழன்றுபிறர்
வாடப் பலசெயல்கள் செய்துநரை
கூடிக் கிழப்பருவ மெய்திகொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும்பல
வேடிக்கை மனிதரைப் போலேநான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

எனக் கூறுகிறார். நாம் வாழ்கிறோம் என்ற அடையாளத்தை உருவாக்குவோம்.


புதன், 8 ஜூலை, 2020

தன்மானம் - ஒரு குறைத்து மதிப்பீடு செய்யப்பட்ட விலை உயர்ந்த பொக்கிஷம்.Self respect- an underestimated invaluable treasure

                                              Image credit by Sunoj Kumar

தாமரை இலையின் மேல் உள்ள நீர் துளி போல் எந்த சூழ்நிலையிலும் சேரு தன்னை மூழ்கடிக்காதவாறு சுற்றுப்புறத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஒரு தன்மை தன்மானத்திற்கு உண்டு. தன்மானம் அதிகம் உள்ளவர்களை நாம் பார்த்தோமானால் 99% அவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள், அதிகம் கோபம் கொள்கிறவர்கள் ஆகவும் இருப்பார்கள். ஏன் சிலரால் தன்மானத்தை பாதுகாக்க முடியவில்லை? அல்லது ஏன் சிலரால் தனக்குத்தானே பரிந்து பேச முடியவில்லை? என்பதை முந்தைய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.Self respect - unaffordable .

தன்மானம் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும்

ஒரு கஃபே காபி ஷாப்பில் மிருதுளாவும் பிரியதர்ஷனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஒரு காலகட்டத்திற்கு மேல் காதலர்கள் என்ற நிலையிலிருந்து தம்பதியினர் என்ற நிலையை அடைய மிருதுளா விரும்பினாள். இரண்டு, மூன்று மாதங்களாகவே திருமணம் செய்து கொள்வதைப் பற்றி பிரியதர்ஷனிடம் விவாதித்து வருகிறாள். பிரியதர்ஷன், அந்த விவாதத்திற்கு மட்டும் சரியான பதில் கொடுப்பதே இல்லை. அதற்காக இவளை கைவிடவும் இல்லை. இவளை ஏமாற்றும் எண்ணமும் அவனுக்கு இருந்த மாதிரி இல்லை. ஏதோ ஒரு விஷயத்தினால் அவன் தடுமாறுகிறான் என்பது மிருதுளாவுக்கு புரிந்தது. வழக்கம்போல இன்றும் மீண்டும் அந்த கேள்வியை எழுப்பினாள். இன்று எப்படியாவது பதில் வாங்கி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தாள். என்ன தாண்டா சொல்றே நீ? நானும் ரெண்டு மாசமா திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கேன். நம்ம கல்யாணத்த பத்தி என்னதான் யோசிச்சு வச்சிருக்கே? என கேட்டாள். அவன் மீண்டும் மௌனத்தையே பதில் அளித்தான்.  “என்ன.... கழட்டி விட ஏதாவது பிளான் பண்றியா?” என கேட்டாள்.

                                            credit: third party image reference

 “சீ போடி லூசு சும்மா ஏதாவது பேசாத" என்றான். “அப்ப சொல்லு என்னதான் உன் பிரச்சனை? சொன்னாதானே எனக்கு தெரியும்” என்றாள் மிருதுளா. “இல்லடி.. அரசல்புரசலாக நம்ம விஷயம் வீட்டுக்கு தெரியும். அம்மா எப்ப பார்த்தாலும் ஏண்டா உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? இவதான்  கிடைச்சாளான்னு கேட்டுகிட்டே இருக்காங்க. என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை” என்றான். இது என்னடா அநியாயமா இருக்கு. என்கிட்ட என்னடா தப்பு கண்டுபிடிச்சாங்க? என கேட்டாள். “தெரியாத மாதிரியே கேட்பே. உங்க அக்கா விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்து அவங்க அப்படித்தான் ரியாக்ட் பண்றாங்க” என்றான். டேய் எங்கக்கா ஓடிப்போய் கல்யாணம் பண்துக்கு நான் என்னடா பண்றது? என்று கொஞ்சம் அதிகப்படியான கோபத்திலே கேட்டாள் மிருதுளா. “பிரச்சனை அவங்க ஓடிப் போனது இல்ல நீ போய் பஸ்ஸில் ஏத்தி வச்சது தான். நாளைக்கு நம்ம வீட்டிலேயும் பொம்பள புள்ளைங்க இருக்காங்க. இந்த மாதிரி செய்யமாட்டான்னு  என்ன நிச்சயம். அப்படின்னு கேக்குறாங்க” என தயக்கத்துடன் பதில் அளித்தான். "டேய் அவ எட்டு வருஷமா ஒருத்தர காதலிச்சா, வீட்ல ஒத்துக்கவே இல்ல. நல்ல பையன் வேற. எட்டு வருஷமா ஒருத்தனை காதலிச்சுட்டு அவனை விட்டுட்டு இன்னொரு வேறு ஒருத்தனை கல்யாணம் பண்ணாதான் தப்பு. காதலித்தவனை கல்யாணம் பண்ணினால் என்ன தப்பு? இப்ப நீயும் நானும் ரெண்டு வருஷமா லவ் பண்றோம். நான் உன்னை விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணா நீ ஒத்துப்பியா? இல்ல நீ தான் என்ன விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணா நான் ஒத்துப் பேனா?. எங்க அக்காவ எல்லாரும் ஏத்துக்கிட்டு நாலு வருஷம் ஆகுது. இன்னைக்கு எங்க அப்பா “நாங்களா தேடி இருந்தால் கூட இப்படி ஒரு மருமகன் கிடைத்திருக்க மாட்டார்” அப்படின்னு பெருமையா சொல்றாங்க. ஆனா நீங்க இன்னமும் வேண்டாத பழைய பாட்டு பாடிக்கிட்டு இருக்கீங்க என சிறிது காரசாரமாக கேள்விகள் கேட்டாள்.  அதுக்கில்லடி வீட்ல பேசுறப்ப ஏதாவது தப்பா பேசினாங்கன்னா, நீ கொஞ்சம் அமைதியா இருந்தா எல்லா பிராப்ளம் சால்வ் ஆயிடும். நீ வேற அதை பண்ண மாட்டே, அதனாலதான் இந்த டாபிக்கை எடுக்குறதுக்கு எனக்கு பயமா இருக்கு என்றான். "நான் ஏண்டா அமைதியா இருக்கணும். நீ இந்த இடத்தில எனக்கு ஆதரவா இருக்கணும். நீ என்னை அமைதியா இருக்க சொன்னா என்ன அர்த்தம். நீ என்னை விட்டுக்கொடுக்க சொல்றது என்னோட செல்ஃப் டிக்னிடிய (தன்மானத்தை). இன்னிக்கி அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சப்பை விஷயத்துக்கு நான் அமைதியா இருந்தேன்னா? வாழ்க்கை முழுவதும் ஏதாவது அவங்க என்னை குறை சொல்லிட்டே இருப்பாங்க நான் எல்லாத்துக்கும் அமைதியா தான் இருக்கணும். நீ என்னோட மரியாதைக்கு பாதுகாவலனா இருக்கணுமே தவிர காலம் முழுவதும் அதை கொஞ்சம் கொஞ்சமா கூறு போட்டு விக்கிறதுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. நீ தைரியமா உங்க வீட்ல பேசி, என்னை கல்யாணம் பண்றதுக்கு நாள் குறிச்சிட்டு சொல்லு, நம்ம ரெண்டு பேரும் சந்திக்கலாம் அப்படி இல்லனான்னா இதோட முடிச்சுக்கலாம். காலம் முழுவதும் சூழ்நிலைக் கைதியா இருக்குறதுக்கு எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமே கிடையாது" என்றாள்.

இந்த இடத்தில் அவள் காத்துக் கொண்டது தன்மானத்தை மட்டும் அல்ல, பிரியதர்ஷன் திரும்ப வந்தால்? காலம் முழுவதும் அவள் கௌரவத்தை காப்பாற்றும் ஒரு நல்ல வாழ்க்கை துணையையும் அவள் காத்துக் கொண்டாள்.

தன்மானம் வாழ்விற்கு நிறைவு தரும் 

வீட்டின் அழைப்பு மணி அடித்தது. குலோத்துங்கன் போய் கதவை திறந்தார். கதவை திறந்த குலோத்துங்கன் தான் கண்ட காட்சியை நம்ப முடியவில்லை. 28 வருடங்களுக்கு முன் யாரால் எல்லாவற்றையும் இழந்து கிட்டத்தட்ட நடுத்தெருவிற்கு வந்தாரோ? அவர் நின்று கொண்டிருந்தார். குலோத்துங்கன் வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது என்று நினைக்கும் நபர் ரங்கநாதன். இருந்தாலும் மனதில் ரங்கநாதன் என் வீட்டு வாசலில் என்ன செய்கிறார் யோசித்துக்கொண்டே வாங்க என்றார். உள்ளே சென்று இருவரும் அமர்ந்தனர் வீட்டு உதவியாளரை அழைத்து தேனீர் தயாரிக்க கூறினார். தேநீருக்கு இருவரும் காத்திருந்த வேளையில், குலோத்துங்கன் பழைய நினைவுகளை அசை போட தொடங்கினார். குலோத்துங்கன் ஒரு அரசு பணியாளராக இருந்தார். கையூட்டு வாங்காத ஒரு நல்ல அரசு பணியாளர். ஒரு முறை தன் கடமையை செய்ய எத்தனித்தபோது வணிகர் ஒருவரால் கடுமையாக நடத்தப்பட்டார். இதை குறித்து மேலிடத்தில் கவலை தெரிவித்த போது அப்பொழுது மேலதிகாரியாக இருந்த ரங்கநாதன் “உங்களைத் தவிர எல்லோரும் கையூட்டு வாங்கிவிட்டார்கள். ஆதலால் அவன் அப்படித்தான் பேசுவான். உங்களுக்கு இஷ்டம் இருந்தால் இந்த இடத்தில் வேலை செய்யுங்கள் இல்லாவிட்டால் பணியிடமாற்றம் வாங்கிக்கொண்டு சென்று விடுங்கள். நானும் வாழ மாட்டேன் மற்றவரையும் வாழ விடமாட்டேன் அப்படின்னு நீங்க நினைக்கிற வரைக்கு உங்களால முன்னேற முடியாது” என்றார். கடிந்து கொள்ள வேண்டியவனை கடிந்து கொள்ளாமல் காப்பாற்ற வேண்டியவனை காப்பாற்றாமல், ரங்கநாதன் தனது பொறுப்பை சரியாக செய்யாததால் நொந்துபோன குலோத்துங்கன் பணியிட மாற்றத்திற்கு எழுதிக்கொடுத்த போது, “உங்களுக்கு தன்மானம் ரொம்ப ஜாஸ்தி குலோத்துங்கன் நீங்க எந்த இடத்துக்கு போனாலும் இப்படி ஒருத்தன் இருப்பான் எத்தனை ஊர் மாறுவீங்க? கொஞ்சம் உங்களை விட்டுக் கொடுத்தா நிறைய சம்பாதிக்கலாம் ஒரே இடத்திலேயே ரொம்ப நாள் இருக்கலாம்” என அறிவுரை கூறினார். ஏற்கனவே வேலைக்கு சேர்ந்த பின் இது ஏழாவது பணியிட மாற்றமாக இருந்ததால் வெறுத்துப்போன குலோத்துங்கன் தனது சொந்த கிராமத்திற்கு சென்று 5 ஏக்கர் வயக்காட்டில் விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அதன்பின் ரங்கநாதனை இன்றுதான் அவர் பார்க்கிறார். மௌனத்தைக் கலைத்து ரங்கநாதன் பேச ஆரம்பித்தார் பிள்ளைகளை நல்லா வளத்திருக்கீங்க குலோத்துங்கன் என ஆரம்பித்தார்.

                                    credit: third party image reference

உங்க மகளுக்கு அனைத்து வணிகர் சங்கம் சார்பாக விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கும் விழாவிற்கு தலைமை தாங்கியது நான்தான். விருதை வாங்கிட்டு உங்க மகள் பேசின பிறகு தான், அது உங்களோட மகள் என தெரிந்தது. எங்க அப்பா ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இதே சங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு, நேர்மைதான் முக்கியம்னு, தன்னோட தன்மானத்தை யாருக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று வேலையை விட்டார். முப்பது வருஷம் கழிச்சு, இன்னைக்கு அதே சங்கதால எனக்கு விருது வாங்குற மாதிரி என்னை வளர்த்திருக்கிறார். வாழ்க்கையில ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி மனுஷங்களுக்கு உண்மையா இருக்கணும், சுயமரியாதையும், தன்மானத்தையும் எவ்ளோ கஷ்டப்பட்டு காப்பாத்தனும், அப்படின்னு எங்கப்பா ஒரு நாளும் எங்களுக்கு சொல்லித் தந்ததில்லை. ஆனால் அவர் அதை வாழ்ந்து காமிச்சார். இன்னிக்கு நான் இப்படி நிக்குறேன்னா அதுக்கு முதல் காரணம் எனது அப்பாதான்” என அவள் பேசத் தொடங்கினாள். விருது வழங்கும் விழா முடித்தபிறகு, ரங்கநாதன் குலோத்துங்கனின் மகளிடம் அவளது அப்பாவை பற்றி விசாரித்திருக்கிறார். அவள் மூலமாக, குலோத்துங்கன்தான் அவரது தந்தை என தெரிந்துகொண்டு இன்று வீடு வரைக்கும் வந்து அமர்ந்திருக்கிறார். ஒரு காலத்துல பொண்டாட்டி, பிள்ளைங்க அப்படின்னு எல்லாரோட வாழ்க்கையின் தேவையை திருப்தி ஆக்குவதற்கு நம்ம நிறைய காரியங்களை செய்கிறோம். அதுல ஒன்னுதான் எல்லாரையும் அனுசரித்துப் போவது. சாதாரணமா உயரதிகாரியை அனுசரித்து போக ஆரம்பிச்சது. படிப்படியா அது கூடி, நமக்கு கீழ வேலை பாக்குறவன், மத்தவன் அப்படின்னு எல்லார்கிட்டயும் அனுசரிச்சு போக ஆரம்பிச்சுட்டோம். சும்மா எதுக்கு கஷ்டப்படணும், அவன் தர காச வாங்கிட்டு வேலை பார்க்கலாமே அப்படின்னு ஒரு எண்ணம் வந்துச்சு. அது கடைசியில் நம்ம தன்மானத்தையே இல்லாம பன்னிடும்முனு அப்ப புரியல. இப்ப புரியுது. நம்ம பிள்ளைங்க நம்ம வாழ்க்கையே நம்ம கண்ணு முன்னாடி எடுத்துக் காட்டுகிறார்கள். என்ன விட அதிகமா என் பையன் தப்பு பண்றான். ஏண்டா! நீங்க எல்லாம் நல்லா இருக்கணும், நீங்களாவது நல்லா இருக்கணும் அப்படினுதாணடா  நாங்க அந்த காலத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தோம். எவ்வளவு மரியாதை குறைவு வந்தாலும் பரவாயில்லை, என் பிள்ளைகள்  நல்லா இருப்பாங்க அப்படித்தான் எல்லாத்தையும் செஞ்சேன். நீ ஏண்டா இப்படி எல்லாத்தையும் கஷ்டப்படுத்துற? அப்படின்னு கேட்டா? அவன் சொல்றான் “ பார்ரா யோகியர் பேசுறாரு, அந்த காலத்துல போடாத ஆட்டம் எல்லாம் போட்டுட்டு. இன்னிக்கு உபதேசம் சொல்றாரு” அப்படின்னு சிரிக்கிறான். நீ உன் பிள்ளைக்கு சேர்த்து வச்ச. நான் என் பிள்ளைக்கு சேர்த்து வைக்கிறேன்” அப்படின்கறான். வீட்டிற்கு வெளியேயாவது மனசுக்குள்ள திட்டினாலும் வெளியில் சிரிச்ச வணக்கம் சொல்றாங்க. ஆனா வீட்டுக்குள்ள ஒரு மரியாதை கிடையாது .யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டோமோ அவங்களே நம்மள ஏறி மிதித்து எள்ளி நகையாடறாங்க என்றார். 

குலோத்துங்கன் மனதின் மாறாத ரணம், ஆறாத ரணம், இவர் பேசப் பேச ஒரு வடு கூட இல்லாமல் மறையத் தொடங்கியது. முப்பது வருடங்களுக்கு முன், நான் எடுத்த முடிவு சரியா? தவறா? என்று இன்றுவரை அவர் யோசித்துக் கொண்டே இருந்தார். அதற்கு இன்று விடை கிடைத்துவிட்டது. நாங்க எல்லாம் பொண்டாட்டி புள்ளைய காப்பாத்தணும்  என்று சொல்லிட்டு, நல்லா வாழ வைக்கணும் என்று சொல்லிட்டு, அவங்க வாழ்க்கைய, எங்க பரம்பரைய நாங்களே அழித்துவிட்டோம் என்று கூட சொல்லலாம்.  என்னைப்பார்த்து என் பிள்ளை வளர்ந்தான். என் பிள்ளையை பார்த்து அவன் பிள்ளை வளர்கிறான்.  ஆனால் நீ செஞ்ச ஒரு நல்ல விஷயம் உன்னோட மொத்த பரம்பரையும் காப்பாற்றி விட்டது. அன்னைக்கு உன்ன பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி இருந்துச்சு. இன்னிக்கி உங்கள பாக்குறதுக்கு அவ்வளவு பெருமையா இருக்குது. மனுஷனுக்கு புரிவதில்லை வாழ்க்கையில் எது முக்கியம் எது முக்கியம் இல்ல என்று.

ராத்திரி தூங்கப் போகும்போது கண்ண மூடுனா பயமா இருக்கு. நிம்மதி என்றால் என்ன? அப்படின்னு இப்பதான் புரியுது. இந்த வழியாக ஒரு கல்யாண வீட்டுக்கு வந்தேன். அதான் நேர்ல பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தேன். என்று சிறிது நேரம் பேசிவிட்டு, ரங்கநாதன் விடைபெற்று சென்றார். குலோத்துங்கன் அன்று தன்மானத்தை காப்பாற்றுவதற்காக கொடுத்த விலை பெரியது என்றாலும், அவர் வாழ்க்கையில் அடைந்தது ஒரு விலை மதிப்பில்லாத பொக்கிஷம்.

தன் மானத்திற்கும், வெட்டி வீராப்பிற்கும், கோழைத்தனதிற்கும் நூலளவு வித்தியாசமே உண்டு. வெட்டி வீராப்பினால் குடும்பத்தையும், உறவுகளையும், நண்பர்களையும் இழந்த பலர் உண்டு. உதாரணத்துக்கு சகோதரர், சகோதரிகளோடு சண்டை போட்டுக்கொண்டு அவர்களின் பிள்ளைகளின் திருமண விழாவிற்கு செல்லாமல் இருப்பது. தன்மானத்தோடு வாழ்பவர்களை பார்த்தால் நமக்கு மனதில் மரியாதை ஏற்படும். வெட்டிவீராப்போடு வாழ்பவர்களைப் பார்த்தால் நமக்கு எரிச்சல் ஏற்படும். தேவையில்லாத பிரச்சனை பண்ணுபவர்களை வாழ்விலிருந்து தூரமாகவே வைக்கத் தோன்றும்.

இதற்கு அடுத்த முனை “கோழைத்தனம்” நான் இதை செய்தால் எதிர்முனையில் இருந்து என்ன நடக்கும் என்பதை யூகித்துக் கொண்டு, பிரச்சினைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், நான் தன்மானம் மிக்கவன் என்றும் எனக்கு இது தேவையில்லை என்றும் தன்மானத்தின் போர்வையில் ஒளிந்து கொள்ளும் ஒரு தன்மை கோழைத்தனம். ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு அது கோழைத்தனம் என தெரிந்து விட்டால்? இருக்கிற மரியாதையும் போய் எல்லோராலும் மிகவும் தரை குறைவாக எண்ண படுவோம்.

நம் வாழ்நாள் இறுதிவரை தன்மானத்தோடு வாழ்வது மிகவும் கடினம். அப்படி வாழ்ந்து முடித்தவர்களை பார்த்து உலகம் வியக்கத்தான் செய்திருக்கிறது. நான் பார்த்த பல அனுபவங்களில் இருந்து எழுதுகிறேன் தன்மானம் ஒரு குறைத்து மதிப்பீடு செய்யப்பட்ட விலை உயர்ந்த பொக்கிஷம்.


வெள்ளி, 3 ஜூலை, 2020

நான் ஏன்? அவள் ஏன்? அவர்கள் ஏன்?

நான் ஏன் சாகணும் சிஸ்டர்? தீப்தி பாயல் இந்த கேள்வியை கேட்கும் போது அவளுக்கு வயசு 20, எனக்கு வயசு 24. போன் மேரோ ட்ரான்பிளான்ட் யூனிட், தமிழ்ல, எலும்பு மஞ்சை மாற்றுப் பிரிவு - பி எம் டி யு (BMTU) அப்படின்னு சுருக்கமா சொல்லுவாங்க. பி எம் டி யூல சிகிச்சை முடிந்த பிறகு சில நாட்கள் நோயாளிகளுக்கு சிகிச்சைகள் பலன் அளித்தனவா? இல்லையா? அப்படின்னு கண்காணிக்கிற பிரிவுல நான் வேலை பார்த்தேன். போஸ்ட் போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட் யூனிட்) 95 சதவீதமான நோயாளிகள் ரத்த புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோயாளிகள் தான் இருப்பாங்க. தீப்தி பாயல் இந்தக் கேள்வியை என்கிட்ட கேட்கும்போது ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி எல்லாம் பண்ணதனால தலையில முடி இல்லாம ஸ்கார்ஃப் கட்டியிருந்தாங்க

                                         Photo by Issara Willenskomer on Unsplash

ரேடியேஷன் தெரபில அவர்களுடைய தோல் சுருக்கம் அடைந்து அவர்களுடைய இயல்பான நிறம் மாறி கருமையான நிறத்துக்கு மாறி இருந்தாங்க. திடீர்னு அப்படி ஒரு நோயாளியை பார்க்கும்போது, மருத்துவத்துறையில் இல்லாதவங்களுக்கு சற்றே முகம் சுளிக்க வைக்கும். அல்லது பார்வையில் சிறிது மாற்றம் தெரியும். நாங்கள் மருத்துவத் துறையில் இருப்பதால், அவர்களிடம் தெரிகிற ஒவ்வொரு தழும்பும், அவர்களிடம் தெரிகிற ஒவ்வொரு மாற்றங்களலும், அவர்கள் வாழ்வதற்காக போராடிய போராட்டத்தின் அடையாளம் என்பது எங்களுக்கு தெரியும். நானும் தீப்தியும் ஒரு சிற்றுண்டி உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். (Nurse patient relationship) செவிலியர் மற்றும் நோயாளிகள் இடையேயான தொடர்பு அல்லது சம்பாஷனை எதுவாக இருந்தாலும் ஒரு அளவுக்கு மீறி போகக்கூடாது என்பது எல்லா மருத்துவமனைகளிலும் ஒரு சட்டமாக இருக்கும். ஆனால் புற்று நோய் பிரிவு, அதுவும் நான் வேலை பார்த்த பி எம் டி யு பிரிவில், இந்த செவிலியர் -  நோயாளிகள் உறவு சிறிது அதிகமாகவே காணப்படும். ஏனென்றால் அந்தப் பிரிவின் உள்ளே நோயாளிகளின் சொந்தக்காரர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அந்த நேரத்தில் அந்த சிகிச்சை அளிக்கப்படும் போது நோயாளிகள் மிகவும் வலியும் வேதனையும் அனுபவிப்பார்கள். செவிலியர் மருத்துவர் தவிர வேறு யாரும் அருகில் இருப்பதற்கு வாய்ப்பில்லை.( இதைப் பற்றி அதிகம் தெரிய வேண்டுமானால் கருத்துரையில் கேள்விகளைக் கேளுங்கள் நான் பதில் அளிக்கிறேன்). ஒரு மனிதனின் வாழ்வில் மிகவும் துன்பமான நாட்களில் அதுவும் ஒன்று. அந்த நேரத்தில் கூடவே இருக்கும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் பலர் கடவுளாக பார்ப்பர். 90 சதவீத நோயாளிகள் அந்த நேரத்தில் யார் அவர்கள் அருகில் சென்றாலும் எரிச்சல் அடைவார்கள், கோபப்படுவார்கள், அழுவார்கள். 90% தன்னம்பிக்கை அற்ற நிலையில் இருப்பார்கள். நோயாளிகளின் தன்மை எப்படி இருந்தாலும் முகம் கோணாது அவர்களை கவனித்துக் கொள்வதால், அந்த செவிலியர்களை அந்த நோயாளிகள் வாழ்க்கையில் ஒரு நாளும் மறப்பதில்லை. அப்படி அறிமுகமான நபர் தான் தீப்தி பாயல். தீப்தி பாயல் மேற்கு வங்காளத்தில் இருந்து சிகிச்சைக்காக மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்தவர். தீப்தி பாயலின்  தந்தை ஒரு கல்லூரி பேராசிரியர். தாயார் ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர். ஒரே மகளான தீப்தி பாயல் மீது அன்பு காட்டி, கண்ணும் கருத்துமாய் அந்தப் பெற்றோர்கள் வளர்த்தனர். தீப்தி பாயலுக்கு அவங்க அப்பான்னா உயிர். அப்பா என்ன சொன்னாலும் செய்யக்கூடிய தன்மை உடையவள். தீப்தி பாயலின்   தந்தை சேகர் பிஸ்வாஸ், ஒரு கண்ணியமான பெண் சமுதாயத்தில் எப்படி மதிக்கப்படுவாள் என்பதை ஒவ்வொரு நாளும் எடுத்துக்காட்டுகள் கூறி விளக்கியதால், தீப்தி எப்பொழுதுமே பிறரை சாராது சுதந்திரமாக, தன் கருத்துக்களை எங்கும் கூறக்கூடிய தைரியமான பெண்ணாக வளர்ந்தாள். அப்பா ஒரு நாள் ஏதோ ஒரு ஆசையில் ஐஐடி சென்னையில் நீ சேர்ந்து படித்தால் நான் சந்தோஷப்படுவேன் என்று கூறியிருக்கிறார். அதை வேதவாக்காக எடுத்த தீப்தி பாயல், தனது படிப்பிலும் தனது அப்பாவின் கனவிலும் முழு கவனம் செலுத்தி, வேறு எந்த விஷயத்திலும் மனதில் இடம் கொடுக்காமல் ஐஐடி சென்னையில் சேருவதற்காகவே படிக்க ஆரம்பித்தாள். இதில் நடுவில் வந்த பல நட்புகள், பல காதல் கடிதங்கள், பல சுற்றுலாக்கள், பல திருமண விழாக்கள், இப்படி பல விஷயங்களை தியாகம் செய்து ஒரே குறிக்கோளில் பயணித்ததால் அவர்களுடைய எல்லா முயற்சிகளும் பயன் அளித்தது எப்பொழுதுமே நல்ல மதிப்பெண்கள், பலராலும் ஏறெடுத்து பார்க்கப்பட்டாள். அவர்களுடைய வாழ்க்கை எல்லோராலும் பொறாமைப்பட வைக்கிற வாழ்க்கையாக இருந்தது. எல்லார் மனதிலும் எப்படி ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புவார்களோ? எப்படி ஒரு அம்மா அப்பா வேண்டும் என்று விரும்புவார்களோ? எப்படி வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடன் பயணிக்க வேண்டும் என்று விரும்புவார்களோ? அது எல்லாமுமாக தீப்தி பாயலின் வாழ்க்கை இருந்தது. 17 வயதில் சிபிஎஸ்சி போர்டு எக்ஸாம் எழுத தயாராகும்போது டிசம்பர் மாதத்தில் இருந்தே உடல் எடை குறைய ஆரம்பித்தது. தந்தையும், தாயும் மகள் அதிகமாக படிக்கிறாள் ஆதலால் உடை எடை உடல் எடை குறைகிறது என யோசித்தார்கள். அதன் பின் அடிக்கடி சோர்வடைய ஆரம்பித்தாள். முகம் வெளிரி காணப்பட்டது. எல்லாவற்றையுமே படிப்பின் காரணமாகவும், தூக்கமின்மையின் காரணமாகவும் மகள் இவ்வாறு இருக்கிறாள் என எண்ணிக் கொண்டார்கள். சரி பரீட்சைகள் முடியட்டும். பிள்ளையை வீட்டில் ஓய்வெடுக்க வைத்து உடம்பை தேத்தி விடலாம். கல்லூரிக்குச் செல்லும் பொழுது குழந்தை மிகவும் ஆரோக்கியமாக சென்று விடுவாள் என மனதை தேற்றிக் கொண்டார்கள். பல வருடங்களாக ஒரு விஷயத்திற்காக உழைத்ததால் இறுதிப் பரீட்சை மிகவும் நன்றாகவே எழுதினாள். ஐஐடி என்றன்ஸ் எக்ஸாம் நெருங்கும் வேளையில், ஒருநாள் திடீரென மயங்கி விழுந்தாள். அருகில் இருந்த மருத்துவர் ரத்த சோகைக்கான பரிசோதனைக்கு எழுதிக்கொடுத்த பொழுது சில முடிவுகள் வித்தியாசமாக தெரியவே! பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பல நண்பர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழ்நாட்டில் ஒரு நல்ல மருத்துவமனைக்கு வந்து சேர்த்தார்கள் ஸ்டேஜ் 3 புற்றுநோய் என்பது தெரியவந்தது. வழக்கம் போலான ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி எல்லாமே கொடுக்கப்பட்டது. மனதளவில் தைரியமான பெண்ணாக இருந்ததால், பலவற்றையும் தாங்கி கடைசியாக போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட் யூனிட்டிற்கு வந்தாள். அங்கு உருவானது தான் எங்களது நட்பு. அவள் சிகிச்சை முடித்த பின்னும் நாங்கள் சந்திக்கும் அளவிற்கு தொடர்ந்தது. ஒரு பதினேழு வயது பெண்ணிடம் நட்பு வைத்திருக்கும் உணர்வு இருக்காது. அவளது பேச்சில் அவ்வளவு முதிர்ச்சி இருக்கும். நிறைய நேரங்களில் அவள் எனக்கு ஆறுதல் கூறுவாள். தனக்கு தலையில் முடி இல்லாதது பற்றி கவலையே பட மாட்டாள் எப்பொழுதும் தலையில் ஸ்கார்ஃப் கட்டியிருப்பாள். ஒருமுறை அவளது புகைப்படத்தை காண்பித்து இருக்கிறாள். வெஸ்ட் பெங்கால் நபர்கள் எவ்வளவு வெளுத்த தோலுடன் இருப்பார்கள் என்பது அந்த புகைப்படத்தில் தெரிந்தது. இப்பொழுது அவள் தோள் இருக்கும் நிறத்திற்கு யாராவது அவளை வேறுவிதமாக பார்த்தால், இவளாகவே சிரிப்பாள் அவளுடைய தன்னம்பிக்கை எதிர்ப்புற நபரின் பரிதாப பார்வையை மாற்றிவிடும். இறைவனிடம் ஜெபிக்கும் பொழுது எனக்கு ஜெபிப்பதை விட அவளுக்காக அதிகம் ஜெபித்தேன். புற்றுநோய் சிகிச்சை எடுப்பவர்களுக்கு தெரியும் ஒரு இடத்தில் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தால் சில நேரங்களில் அந்த சிகிச்சை பல வருடங்கள் கூட தொடரும். ஆரம்பத்தில் சிகிச்சைக்கு ஒத்துழைத்த உடம்பு நாட்கள் செல்ல செல்ல சிகிச்சைக்கு பலன் இல்லை . பலன் இல்லை என்று தெரிய வந்த நாளிலிருந்து அடிக்கடி சந்தித்தாலும் இருவரும் அமைதியாகவே அமர்ந்திருப்போம்.  ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக தனது மொட்டை தலையை மறைக்காமல், முகத்திற்கு பவுடர் அல்லது சாயம் பூசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். என்னாச்சு? என கேட்டேன். let the world know I am dying, அதாவது இந்த உலகத்திற்கு தெரியட்டும் நான் மரித்துக் கொண்டிருக்கிறேன் என்று எனக் கூறினாள். 3 வருடமாக நீ மரித்துக் கொண்டு தான் இருக்கிறாய் ஆனால் மரணம் உன்னை நெருங்காது இருக்க காரணம் உன் மனதில் உள்ள தன்னம்பிக்கை. என்று உன் தன்னம்பிக்கை மறைகிறதோ அன்று உண்மையிலேயே நீ மரிக்க ஆரம்பித்து விடுவாய் என்று கூறினேன். என்ன வசனம் பேசுகிறாயா? என்றாள். ஒவ்வொருமுறை தோழிகள் வெளியே சுத்த செல்லும்போதும், நமக்கு ஒரு நாள் வரும் அன்று நான் மகிழ்ந்திருப்பேன் என எண்ணிக்கொள்வேன். ஒவ்வொருமுறை ஒருவன் காதல் கடிதம் நீட்டும்போது, எனது குறிக்கோளை அடைந்தபிறகு நானும் காதலித்து மகிழ்வேன் என எண்ணிக்கொள்வேன். சிகரத்தின் உச்சியை அடைவதற்கு ஒரு எட்டு இருக்கும் பொழுது பாதாளத்தில் விழுந்து விட்டேன். அப்பொழுது கூட எனக்கு வலிக்கவில்லை. முந்தின வாரம் இந்த நிலைமையிலும் ஒருவன், நான் உன்னை காதலிக்கிறேன் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என கேட்டான். உலகத்தின் ஒட்டுமொத்த வலியும் என் உச்சந்தலையில் இறங்கியது போல உணர்ந்தேன். இறைவன் அன்றும் என்னை வாழ விடவில்லை. இன்றும் என்னை வாழ விடவில்லை அவனுக்கு நான் என்ன பதில் கூறுவேன்? . 

                                   Image by Rudy and Peter Skitterians from Pixabay

இப்படி அவள் கூறும்போது அவளது கைகளில் இனிமேல் சிகிச்சை செய்வதற்கு எதுவுமில்லை வீட்டிற்கு அழைத்து சென்று அவளை சவுகரியமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது ஆங்கிலத்தில் பாலியேடிவ் மேசர்ஸ்  இன்னும் கவுரவமாக கூறினால் “make her comfortable”. அதன்பின் தான் என்னை பார்த்து கேட்டாள் நான் ஏன் சாகணும் சிஸ்டர்? எந்த நிலமையிலையும் என்ன விரும்புற ஒருத்தன் இருக்கான். இப்பவாவது கடவுள் கருணை காட்டக் கூடாதா என கேட்டாள். வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்துல வர்ற மாதிரி, சாகுற வரைக்கும் என்ஜாய் பண்ணு அப்படின்னு சொல்ல எனக்கு முடியல ஏன்னா இது வாழ்க்கை. அவள் அந்த முடிவை எடுக்க விரும்பி இருந்தால், அவளே எடுத்து இருப்பாள் இப்படி ஸ்கார்ஃப் கட்டாம மொட்டைத் தலையோட உக்காந்து இருக்க மாட்டாள். கிறிஸ்தவ முறைப்படி நிறைய பதில்கள் எனக்கு தெரியும். ஆனால் சிற்றாலயத்தில் இருந்து வந்த ஆயர்கள் அவளுக்கு ஆயிரம் பதில்களை ஏற்கனவே சொல்லி விட்டார்கள். அவள் என்னிடம் கேட்டது அந்த ஆயிரம் பதில் இல்லாமல் 1001 வது பதில். சத்தியமா அதைத் தாண்டி என்கிட்ட பதில் இல்லை. சிறிது நாட்களில் அவள் அங்கிருந்து கிளம்பினாள் அலைபேசி எண் கொடுத்து விட்டு சென்றாலும், எத்தனை முறை அழைத்தாலும் அவள் என்னிடம் பேசவே இல்லை. அதற்கப்புறம் அவள் நிலைமை என்ன ஆனது என எனக்கு தெரியவில்லை. இன்றுவரை என் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி “why should I die sister”. 

அவள் ஏன்?

                                                    credit: third party image reference

பிரீதம் மரணத்தருவாயில் செயற்கை சுவாச குழாயோடு இணைக்கப்பட்டிருக்கிற 6 வயது சிறுமி. இரண்டு மாதங்களாக செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கிறாள். வீடு வரை விற்று  அவளது தந்தை சிகிச்சை செலவு செய்து வருகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் செய்யமுடியாத நிலையில், மருத்துவர்கள் பெற்றோர்களை அழைத்து இனி உங்கள் பிள்ளையின் சிகிச்சையை நீட்டிப்பது, அவளுக்கு கொடுமை செய்யும் செயல் போன்றது. அந்த பிஞ்சு உடல் இனி தாங்காது அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் நிம்மதியாக குடும்பத்தோடு சேர்ந்து கடைசி நிமிடங்களை கழிக்கச் செய்யுங்கள் எனக் கூறினர். அடுத்த கணமே தாய் கதறினாள். என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க? குடிகாரன், பொம்பள பொறுக்கி, தப்பான தொழில் பண்ற பொண்ணு எல்லாரும் வாழறாங்க டாக்டர். ஏன் என் மக வாழக்கூடாது? அவள் ஏன் சாகணும் டாக்டர்?. எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை டாக்டர். எங்க தலையை அடமானம் வைத்தாவது காசு கொண்டு வரேன் டாக்டர். என் பிள்ளையே வீட்டுக்கு அனுப்பிடாதீங்க டாக்டர் என கதறினாள். கணவன், மனைவியை வெளியே அழைத்துச் சென்றான். சிறிதுநேரத்தில் மீண்டும் உள்ளே வந்து அங்கு நின்று கொண்டிருந்த மருத்துவரின் கால்களில் விழுந்தான். என் மகளோட நெஞ்சாங்கூட்டில் அசைவு இருக்கிற வரைக்கும்தான் என் பொண்டாட்டி மூச்சு இருக்கும் டாக்டர். என் மகள் சுவாசிக்கவில்லை, அந்த கருவிதான் சுவாசிக்க உதவுதுன்னு தெரியும். ஆனாலும் அந்த அசைவு இருக்கணும் டாக்டர். நாங்க ரெண்டு பேரும் வாழனும்னா அவளோட நெஞ்சாங்கூடு அசயனும் டாக்டர். என காலில் விழுந்து அழுதான். அந்த தலைமை மருத்துவர், செவிலியர் அறைக்கு வந்து நான்கு நிமிடங்கள் அழுது விட்டு வெளியே சென்றார். அந்த தாயார் கேட்ட கேள்வி, என் மக ஏன் சாகணும் டாக்டர்? அந்தக் கேள்விக்கு யார்கிட்டயும் பதில் கிடையாது. இன்று இரு குழந்தைகளின் தாயான எனக்கு அந்த நெஞ்சாங்கூட்டின் அசைவு எவ்வளவு முக்கியம் என்று தெரியும். அந்தத் தாயின் வலியை  இன்று என்னால் உணர முடியும்.

அவர்கள் ஏன்?

                                           credit: third party image reference

இப்படி இருபத்தோரு வயதிலிருந்து 26 வயதிற்குள் ஏராளமான வலிகள். ஏராளமான மரணங்கள். ஏராளமான அனுபவங்கள். எல்லாவற்றையுமே கண்முன்னால் பார்த்ததால் ஒரு 60 வருட ஞானியின் மனதை போல் வாழ்க்கை மாறி விட்டிருந்தது. சாதாரணமாக ஒருவரை பார்த்து, அவங்க ஏன் இப்படி பண்றாங்க? என எல்லோரும் கேட்கும் கேள்வி நான் அதிகம் கேட்பதில்லை. ஒவ்வொருவருடைய முடிவிற்குப் பின் எவ்வளவு பெரிய வலிகள் மறைந்து இருக்கும், என ஓரளவு யூகிக்க முடியும். நாம் இன்று அடுத்தவர் எடுக்கும் முடிவுகளில், கருத்து கூறும் இடத்தில், வாழ்க்கை நம்மை வைத்திருக்கலாம். பொறுப்பற்ற முறையில், தவறாக கருத்துக்களை பரிசீலனை செய்தால்? ஒருநாள் வாழ்க்கை நம்மை அந்த வலியும் வேதனையும் நிறைந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தும். அன்று என்ன முடிவு எடுக்க வேண்டுமென கண்டிப்பாக நமக்குத் தெரியாது. ஆகையால் அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்? அல்லது அவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? அல்லது அவர்கள் ஏன் இதை செய்யக்கூடாது? இந்த அவர்கள் ஏன்?” என்ற கேள்வியை கேட்கும் முன் நூறு தடவை யோசியுங்கள். என்னைக் கேட்டால் சில நேரங்களில், நமது கருத்துக்களை பதிவு செய்யாமல் இருப்பதே ஒரு நபருக்கு அவர் வாழ்வில் நாம் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.