வியாழன், 25 ஜூன், 2020

இவர்கள் இல்லை என்றால்?..... வெறுப்பின் மத்தியில்!


credit: third party image reference

கடந்த சில வருடங்களாக நாம் அங்கே.. இங்கே என கேட்டுக்கொண்டிருந்தது, இன்று நம் மத்தியில் விஸ்வரூபமாக எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் இல்ல இந்த அராஜகம்.  அமெரிக்காவின் ஜார்ஜ் ஃபிலாய்ட் இல் இருந்து, இந்தியாவின் கடைக்கோடிக்கு அருகில் இருக்கிற சாத்தான்குளத்தில் நமது அண்ணாச்சி ஜெயராஜ், பெனிக்ஸ் வரை, நம் கண் முன்னால் இழைக்கப்பட்டு  கொண்டிருக்கும் இந்த அராஜக, அநீதியை பற்றித்தான் பேச விரும்புகிறேன். கட்டுரை எழுத ஆரம்பிக்கும் முன்பே சொல்லிவிடுகிறேன். எனது குடும்பத்தில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் இருக்கின்றனர். ஒன்று எனது சொந்த சகோதரி. இன்னொன்று எனது சகோதரனின் மனைவி. இரு ஆய்வாளர்களை வீட்டில் வைத்திருந்தாலும், எப்பொழுதுமே காவலர்களை பார்த்தால் ஒரு பயம் கலந்த வெறுப்பு மனதில் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு காரணமும் இருந்தது. எனது அப்பா ஒரு காலத்தில் தன்னிடம் உதவி கேட்டு வரும் படிக்காதவர்களுக்கு மனு எழுதிக் கொடுப்பார். சிலசமயங்களில் அவர்கள் கூட சென்று காவல்துறையில் அதிகாரிகளிடத்தில் அதை ஒப்படைக்கவும் செய்வார். சில நேரங்களில் அவரது காரில் நானும் சென்றிருக்கிறேன். என் அப்பா என்னை வண்டியில் உட்கார வைத்து விட்டு தனியாகத்தான் செல்வார். அப்படி நான் அவர் கூட செல்லும்போது, நான் பார்த்த ஒரு விஷயம் என்னவென்றால்? அந்த இடத்தில் அப்பாவை பற்றி தெரிந்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்ததால் அப்பா உள்ளே நுழைந்ததும் வந்துட்டான்யா என்பதுபோன்ற எதிர்வினை எல்லார் கண்களிலும் இருக்கும். அந்த அதிகாரிகளின் காதுகளில் இது அந்த அம்மாவோட அப்பா என எனது அக்காவின் பெயரைச் சொன்னதும், சிறுது மரியாதை கொடுத்து, நாற்காலியில் அமர வைத்து, அந்த மனுவை வாங்குவார்கள். இதனாலேயே பலர் அடிக்கடி அப்பாவை தேடி வருவார்கள். ஒரு கட்டத்தில் அப்பாவிற்கு வயதாகவே, அண்ணனின் ஆலோசனைக்கேற்ப பொது காரியங்களில் தலையிடாதீர்கள் என கூறிவிட்டதால், உடம்பும் அதற்கு ஒத்துழைக்காமல் போகவே எனது அப்பா இப்பொழுது காவல் நிலையத்திற்குஅடிக்கடி செல்வதில்லை. ஆனால் ஒவ்வொரு முறை அப்பா சந்திக்கும் காரியங்களை கூறும் போது சாதாரண ஒரு மனு கொடுப்பதற்கே அன்னாரது தகப்பனார் என்ற அடையாளம் தேவைப்பட்டால்? ஒரு சாமானியனின் எந்த ஒரு பின்புலமும் இல்லாதவன் எவ்வாறு தனது காரியத்தை நிவர்த்தி செய்து கொள்வான்?’ என்கின்ற எண்ணம் எப்பொழுதுமே என் மனதில் உண்டு.

இன்றைய சினிமாக்களில் கூட கதாநாயகன் காவல் அதிகாரியாக இருந்தால் மட்டுமே அவனை நல்லவனாக காட்டுவதும், கதாநாயகன் அல்லாத வேறு எந்த பாத்திரத்தில் காவல் துறை அதிகாரி வந்தாலும் அவனை 80 சதவிகிதம் கெட்டவராக காட்டுவதும் நம் மத்தியில் வாடிக்கையாகிவிட்டது. பத்திரிகையில் கூட தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற காவல் துறை என சின்னதாக போடுவதும், காய்கறி கடையில் லஞ்சம் வாங்கிய போலீசார் என அவர்கள் செய்த தவறை கொட்டை எழுத்தில் போட்டு முழு பக்கம் அச்சடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.  இன்றும் நம் ஊர் வழியாக செல்லும் ராணுவ வீரர்கள் ஊர்தி எங்கேயாவது நின்றால், ராணுவ வீரர்களிடம் பேசி விட மாட்டோமா? அவர்கள் கூட சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டோமா? என நினைக்கும் இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் நாட்டின் எல்லையை காப்பவர்கள். அவர்கள் மேல் உள்ள அந்த மரியாதை, நம்முடைய, நம் வீட்டை, நம் தெருவை, நம் ஊரை காக்கும் காவலர்கள் மேல் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. பயம் இருக்கிறது. அதனால் ஒருவேளை நாம் மரியாதை கொடுக்கலாம். ஆனால் மனதில் இருந்து மரியாதை கொடுப்பது என்றால்? இப்பொழுது மக்கள் மத்தியில் அது சிறிது குறைந்தே காணப்படுகிறது.

ஒருமுறை எங்கள் ஊர் அருகே உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில், இரவு 9 மணிக்கு கடைசி பேருந்துக்காக காத்திருக்க நேரிட்டது. அப்பொழுது அங்கே ஒரே ஒரு டீக்கடையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அங்கே இரண்டு காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். காவலர்களை பார்த்தவுடன் மனதிற்கு நிம்மதி வர வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தாலும், பயமே தோன்றியது. பகலில் ஒரு நாளும் அந்த பயம் வந்தது கிடையாது. ஒருவேளை நம்மை அழைத்து இந்த நேரத்தில் ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் எனக்கு கேட்டு விடுவார்களோ? அதில் ஒரு காவல்காரர் திரும்பத் திரும்ப என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஒருவேளை நான் தனியாக நின்றதால் எனக்கு காவலாக கூட அவர்கள் நின்றிருக்கலாம். ஆனால் என் மனதில் ஒரு இனம் புரியாத பயம் யாராவது கூட வந்துவிட மாட்டார்களா என்று. யாரோ இரண்டு கயவர்கள் மத்தியில் நின்று கொண்டிருப்பது போன்ற ஒரு பயம். ஒரு வெறுப்பு. நல்லவேளையாக அந்த நேரத்தில் இன்னொரு குடும்பம் பேருந்து ஏற வந்ததால், அந்த பயமான சூழ்நிலை விலகி நெஞ்சில் மனதில் நிம்மதி பிறந்தது. ஒரு தவறும் செய்யாது இருக்கையில் ஏன் அவர்களிடம் பயம் வருகிறது? என்னிடம் அந்தக் கேள்விக்கு விடையே இல்லை.

credit: third party image reference

இருபத்தி மூன்றாம் தேதி ஜூன் மாதம் 2020 ஆம் வருடத்தில் திரு ஜெயராஜ், திரு பெனிக்ஸ் அவர்களின் மரணத்திற்குப் பின் நடந்த போராட்டத்தில் நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்து நிறைய பேர் வலை தளத்தில் பதிவேற்றி இருந்தார்கள். ஒரு வீடியோவில் ஒரு பெண்மணி போலீசாரிடம் வேண்டுகோள் வைத்துக்கொண்டிருந்தாள். அது என்ன வேண்டுகோள் என்றால்? நாங்கள் ஊர்மக்கள் எல்லோரும் எழுதித் தருகிறோம். எங்கள் ஊரிற்கு காவல்நிலையம் வேண்டாம் என்பதுதான் அது. அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காகவே காவல் நிலையமே தவிர, அவர்களை அடித்து கொலை செய்வதற்கு அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் கூறிய விஷயத்திலிருந்து ஒன்றை மட்டும் நான் கூற விரும்புகிறேன். காவல் நிலையங்கள் இல்லாமல் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வரத்தானே செய்தோம். அந்தக் காலத்தில் முறை, முறையாக சிலர் காவல் பணியில் ஈடுபட்டு வந்தனர். குற்றங்கள் எல்லா காலகட்டத்திலும், எல்லா சமுதாயத்திலும் இருக்கத்தான் செய்யும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் நம் அனைவருக்குமே தெரியும். அது உண்மையும் கூட என பலவாறு சிந்தனை ஓடியது. ஒரு சிறு கூட்டத்தை, ஒரு சிறு கூட்ட மக்கள் பாதுகாக்க முடியும் ஆனால் நகரங்கள், பேரூராட்சிகள், காஸ்மோபாலிட்டன், மெட்ரோபாலிட்டன், என்று வரும்பொழுது காவல்நிலையம் இல்லாமல் சமாளிக்க முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் மக்கள் மத்தியில், காவல்நிலையங்கள் எங்களுக்கு வேண்டாம் என்ற உணர்ச்சி மேலோங்க தொடங்கினால் என்னவாகும்? இப்படி பலவாறு யோசித்தபடியே இருந்ததில் தலை வலிக்க ஆரம்பித்து விட்டது. கண் முன்னால் நடக்கும் கொடூரங்களுக்கு நம்மால் என்ன செய்ய முடிகிறது? குறைந்தபட்சம் பேஸ்புக்கில் ஷேர் செய்கிறோம். அதிகபட்சம் லைவ் வீடியோவில் பேசி வைரலாக செய்கிறோம். முன்னதில் மனதிருப்தி.` வீடியோ ஷேர் செய்வதில் பணம் சம்பாதிக்கலாம் இதை இரண்டைத் தவிர, களத்தில் இறங்கி போராடுபவர்களுக்காக நாம் என்ன செய்கிறோம்? எந்த எண்ணமும் மேலோங்கி நின்றது. மொத்தத்தில் காவலர்கள் மீது ஒரு வெறுப்பு.

அந்த வெறுப்பின் உச்சியில் தூங்க முயன்று கொண்டிருந்தேன். நாளை இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும். முடிந்த அளவு காவலர் முகத்திரையை கிழிக்க வேண்டும். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்துகொள்ள வேண்டும், என எண்ணிக்கொண்டே, அதை எப்படி எழுதலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். நேற்று இரவு அதாவது 24 ஆம் தேதி ஜூன் மாத இரவு, எனது கணவர் வேலை நிமித்தமாக வருவதற்கு தாமதமாகும் என கூறியிருந்தார். நான் எனது குழந்தைகள் இருவரையும் படுக்க வைத்துக் கொண்டு இவ்வாறு யோசித்துக்கொண்டிருந்தேன். இரவு ஒன்றரை மணி அளவு இருக்கும். இரண்டு - மூன்று இருசக்கர வாகனங்கள் வீட்டின் பின்னே மெதுவாக வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சில அசாதாரண சத்தங்களும் கேட்டன. இரவு ஒன்றரை மணிக்கு யார் வருகிறார்கள் என யோசித்துக்கொண்டே இருக்கும்போது! மெதுவாக பயம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. ஏனென்றால் கணவர் வீட்டில் இல்லை குழந்தைகள் உறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இரவு மணி இரண்டு நெருங்கிக்கொண்டிருந்தது. சில பூச்சிகளின் ஓசைகளை தவிர வேறு எந்த ஓசையும் இல்லாத அந்த இரவு நேரத்தில், மனிதர்களின் காலடியோசை மனதை கலங்க செய்தது. மெதுவாக எழுந்து, இறைவனிடம்  ஜெபித்துக் கொண்டே தரையில் மண்டியிட்டு ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்தேன். நான் எட்டி பார்த்த அந்த கணமே பெரிதாக அலறல் குரல் கேட்டது. உண்மையில் சொல்லப் போனால் யாரோ, யாரையோ கொலை செய்வது போன்ற அலறல் கேட்டது.  ஒரு நிமிடம் இருதயம் துடிப்பது நிறுத்தியது போன்று இருந்தது. இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு ஓடி விடலாமா என தோன்றியது. இருந்தாலும் இருக்கிற தைரியத்தை எல்லாம் திரட்டிக்கொண்டு மீண்டும் ஜன்னலின் ஓரம் வழியாக எட்டிப்பார்த்தேன். அந்த சத்தத்திற்கான காரணம் தெரிந்தது. முதலில் வெறும் அலறல் சத்தம் வந்ததால் மனம் கலங்கியது. ஆனால் அதன் காரணத்தை கண்டவுடன் மனதிற்கு நிம்மதி வந்தது. இரண்டு போலீசார் அந்த மூன்று நபர்களை அடித்து இழுத்துச் சென்று கொண்டு இருந்தனர். அந்த நிமிடத்தில் அந்த இரண்டு போலீசார்களை கண்டபொழுது ஓடிச்சென்று அவர்களைப் பிடித்து கதறி அழ வேண்டும் போலிருந்தது. வண்டி சத்தம் கேட்ட அந்த நிமிடத்தில் இருந்து போலீசாரை காணும்வரை ஐந்து நிமிடங்களாக இருந்தாலும், வாழ்க்கையில் மறக்க முடியாத - ஐந்து நிமிடங்களாக அது அமைந்துவிட்டது. இந்த நபர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்? வீட்டின் உள்ளே நுழைந்தால் நாம் என்ன செய்வோம்? குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளை எழுப்பலாமா? வேண்டாமா? படுக்கையறை கதவை சாத்தி உள்ளே தாள் போடலாமா? வேண்டாமா? யாரோ மூன்று பேர் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள் என காவலர்களுக்கு தெரிவிக்கலாமா? தெரிவிக்க வேண்டாமா? என ஆயிரம் கேள்விகள் எழுந்தது. மனம் பயத்தில் உறைந்தே போனது என்று கூட சொல்லலாம். வேலையில் இருக்கும் கணவனுக்கு தெரிவிக்கலாமா? தெரிவிக்க வேண்டாமா? கண்டிப்பாக அங்கே இருந்து கொண்டு அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அவரையும் ஏன் பயமுறுத்த வேண்டும்? என அவருக்கு அழைக்க யோசித்துக் கொண்டிருந்த போது, இந்த காவலர்களை கண்டதும் நான் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை. அவர்கள் திருடர்களா இல்லை போலீசை கண்டு என் வீட்டின் அருகே ஒதுங்கினார்களா? என்ற கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் இல்லை. போலீசார் அவர்களை இழுத்து சென்ற போது நிறைய வீடுகளில் விளக்கு எரிந்தது. ஒருவழியாக அந்த சம்பவம் நடந்து முடிந்தது. எல்லாம் முடிந்தபின், என் கணவனை தொலைபேசியில் அழைத்து நடந்தவைகளை ஒரு சம்பவமாக கூறினேன். செய்தி கேட்டதும் உடனே கிளம்பி வந்தார். அதை பற்றி சில நேரம் பேசிவிட்டு தூங்க சென்றோம். அதன்பின் நடந்த காரியங்களை மனம் அசை போடத் தொடங்கியது. ஒருவேளை அந்த மனிதர்கள் திருடர்களாக இருந்திருந்தால்? எங்கள் வீட்டை திருடுவதற்காக வந்திருந்தால்? காவலர்கள் இல்லாது இருந்திருந்தால்? எங்களது நிலை என்னவாயிருக்கும் மறுநாள் காலையில் பத்திரிக்கையில் என்ன செய்தி வந்திருக்கும். என் கணவர் எங்களை உயிரோடு பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம். இன்று இந்த கட்டுரையை நான் எழுதுவது இறைவனின் சுத்த கிருபையினால் மட்டுமே. ஒருவேளை காவலர்கள் மேல் உள்ள எனது வெறுப்பை மாற்றுவதற்காக கூட இந்த சம்பவம் நடந்திருக்கலாம். இதிலிருந்து பல்வேறு பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். அதில் ஒன்றை மட்டும் இப்பொழுது எழுத விரும்புகிறேன். அரைத்த மாவையே அரைப்பது போல இருந்தாலும், இதை நான் கூறியாக வேண்டும் எனது சகோதரி காவல்துறையில் வேலை செய்வதினால் நான் இதை கூறவில்லை, என்பதை கண்டிப்பாக புரிந்து கொள்ளுங்கள். காவலர்கள் நமக்குத் தேவை. காவல்நிலையங்கள் நமக்கு தேவை. ஆனால் காவல்துறையில் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும். காவலர்களின் வேலைப்பளுவினால் அவர்களுக்கு உண்டாகும் மன அழுத்தம் குறைக்க, அவர்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை அறிந்து வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும். மருத்துவத்துறையில் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரேடியேஷன் தெரபி துறையில் வேலை பார்க்கும் மருத்துவ ஊழியர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை ரேடியேஷன் எக்ஸ்போஷர் என்ற டெஸ்ட் எடுக்கப்படும். அதேபோல் சமுதாயத்தில் பரவிக்கிடக்கும் குற்றம் என்கிற புற்றுநோயை அகற்றும் பிரிவில் வேலை பார்க்கும் காவலர்கள், தங்களது வேலை நேரத்தில் பெரும்பான்மையான பகுதிகளை குற்றவாளிகள் உடனே செலவழிப்பதால், அவர்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அவர்களது மனப்பான்மை ( Attitude) மற்றும் உளவியல் ரீதியான சோதனைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டால், சில சைக்கோ தனமான காவலர்கள் உருவாக மாட்டார்கள். பொதுவாக குடும்பத்தோடு வெகு நேரம் செலவழிக்கும் போது மன ரீதியான போராட்டம் குறைக்கப்படும். பொதுமக்களையும், பிற மனிதர்களையும் மனிதர்களாக பார்க்கும் தன்மை கூட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் காவலர்களின் பதவிக்கு கொடுக்கும் மரியாதையை தனக்குத்தான் கொடுக்கிறார்கள் என்று எண்ணும் சில காவலர்களால் தான் இதுபோன்ற அநியாய செயல் நடைபெறுகிறது.

( "With great power comes great responsibility", the Peter Parker principle

"பெரும் சக்தியுடன் பெரிய பொறுப்பு வருகிறது",

பீட்டர் பார்க்கர் கொள்கை, ஸ்பைடர் மேனால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு பழமொழி .

என்ற கூற்றிற்கு ஏற்ப பதவியில் உள்ளவர்கள், அரசாங்க பொறுப்பில் இருப்பவர்கள், தங்கள் சக்தியை மிகக்கவனத்துடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


புதன், 24 ஜூன், 2020

Self respect - unaffordable (தன்மானம் - சிலருக்கு கட்டுப்படி ஆவதிவில்லை)

        Image by ArtTower from Pixabay 


ரத்தின பாண்டி மருகி, மருகி நின்றான் . “என்ன பாண்டி வியாழக்கிழமை தான ஆகுது. அதுக்குள்ள என்ன தலையை சொறிஞ்சி கிட்டு நிற்கிற? எனக் கேட்டார் முதலாளி துரைசாமி. “ஒன்னும் இல்லீங்க ஐயா, திருவிழாக்கு போனும், அதான் சம்பள பணம் முன்னமே வேணும்என்றான் ரத்தின பாண்டி. திருவிழா நாளைக்கு தானே ஆரம்பிக்குது. இப்பவே சம்பளம் கொடுத்தால் நாளைக்கு நீ வேலைக்கு வரமாட்டே, நாளைக்கு சாயந்தரம் வேலைய முடிச்சுட்டு போகும்போது சம்பளம் வாங்கிக்கஎனக் கூறினார் துரைச்சாமி. வேலை முடிந்ததும் வீட்டிற்கு சென்றான். வீட்டு வாசலிலேயே மனைவி, மகன் மற்றும் மகள் உட்கார்ந்து இருந்தார்கள். மகள் ஆர்வமுடன் கேட்டாள்அப்பா புது துணி வாங்க போலாமா?” என்று. இல்ல கண்ணு முதலாளி வீட்ல இல்ல, நாளைக்கு அப்பா வேலை முடிச்சுட்டு வந்து, திருவிழாக்கு போய் புது துணி வாங்கிக் கொள்ளலாம் என கூறினான். அதற்கப்புறம் வெகுநேரமாக குழந்தைகள் அழுது கொண்டே இருந்தார்கள். மனைவியின் நொய், நொய் என்ற கரைச்சல் வேறு. மனைவி உச்ச ஸ்தானத்தில் கத்தினாள், தனது இயலாமையை எண்ணி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அமைதியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அந்த இரைச்சலுக்கு நடுவிலே, போனால் போகுது என்று மனைவி சாப்பாடு போட்டாள். சாப்பிட்டு முடித்த பின், மீண்டும் அவள், அவனது இயலாமையை சுட்டிக்காட்ட தொடங்கினாள், காலையிலிருந்து மம்பட்டி பிடித்து வேலை செய்த களைப்பு வேறு. அவளது அர்ச்சனை - இவனது கலைப்பு, இரண்டும் போட்டி போட்டதில் இவனது களைப்பே வென்றது. எப்பொழுது தூங்கினான் என்று தெரியாமல் தூங்கிவிட்டான். மறுநாள் காலையில் எழுந்து வேலைக்கு சென்றான் போகும்போதே முதலாளியிடம் ஐயா திருவிழாவுக்கு போகணும் சம்பளம் வேண்டும். மறந்துடாதீங்க எனக் கூறிவிட்டு சென்றான். “ தரேன் தரேன் என்றார் துரைசாமி. சாயந்திரம் 4 மணிக்கு வயலை விட்டு வெளியே வந்தான். முதலாளியின் வண்டி வீட்டில் இல்லை. ஒருகணம் தூக்கிவாரிப் போட்டது. வெளியில் நின்று முதலாளியம்மாவை கூப்பிட்டான். அம்மா, ஐயா சம்பளம் தரேன்னு சொன்னார், உங்ககிட்ட குடுத்துட்டு போனார்களா? என்று கேட்டான். “இல்லை. ஐயா வெளியில போயிருக்காங்க 7 மணிக்கு வருவாங்க. அப்புறமா வந்து வாங்கிக்கோ என்றாள். ஒரு கணம் மனம் இடிந்து போனான். நேற்றைய தினம் மகளின் கண்ணீரும், மகனின் கண்ணீரும், மனைவியின் ஆதங்கமும், ஒரு கணம் மனதில் வந்து போனது. அங்கேயே ஓரமாக ஒரு திண்டில் உட்கார்ந்துவிட்டான். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்த முதலாளியின் மனைவி வாரம், வாரம் தான காசு வாங்கறிங்க ஒருநாள் பின்னாடி வாங்கினால் என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க. உங்க காசை வச்சி அவரு என்ன கோட்டையா கட்ட போறாரு?. இன்னிக்கி இல்லைன்னா நாளைக்கு வாங்குறது. எதுக்கு இப்படி வெளியே உட்கார்ந்து, உயிர வாங்குற பாக்குறவங்க எல்லாரும் எங்களை என்ன நினைப்பாங்க என்றார். அமைதியாக எழுந்து நின்று தலைகுனிந்து நின்றான். அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள். நான் உழைத்து, நான் என் வியர்வை சிந்தி, என் உழைப்புக்கு தகுதியான காசை நான் வாங்குவதற்கு இவர்களிடம் என்ன பேச்சு கேட்க வேண்டியது இருக்கிறது என அங்கலாய்த்தார். அவனுக்கு கேட்க ஒரு நிமிடம் ஆகாது நான் வட்டிக்கா காசு கேட்கிறேன், இல்ல சும்மா கைமாத்துக்கு கேட்கிறேனா. வாராவாரம் இப்படியா கேட்கிறேன்இந்தவாரம் ஏதோ அவசரம், பொண்டாட்டி, பிள்ளையோடு திருவிழா போக வேண்டி இருக்கு. நான் உழைச்ச காசு அதை கேட்டால், இந்த பேச்சு பேசுறீங்களே? என கேட்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் அப்படி கேட்டு விட்டால், முதலாளியம்மா முதலாளியிடம் கூறுவாள். முதலாளி, “வேலை செய்ற பயலுக்கு இவ்வளவு திமிரா? சம்பளத்தை பிறகு வந்து வாங்கிக்கோ. நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம். ஒழுங்கா யாரு காசு தராங்களோ, அங்க போய் வேலை பாத்துக்க என கூறிவிட்டால் நாளை திருவிழாவும் போச்சு, அடுத்த வாரம் சோறும் போச்சு. இந்த சண்டை போட்டது எல்லாருக்கும் தெரிஞ்சா? அப்புறம் ஒரு பைய ஊருக்குள்ள வேலை தர மாட்டான். அவன் தன் தன்மானத்திற்கு தீனி போட்டால் அவனும் அவன் குடும்பமும் சில வாரங்களுக்கு சாப்பிட முடியாது. ரத்ன பாண்டி போன்றவர்களுக்கு, தன்மானம் கட்டுப்படி ஆகவே ஆகாது.

ரத்ன பாண்டி போன்ற படிக்காத ஏழைகளுக்கு தான் தன்மானம் கட்டுப்படி ஆகாது என்றால் படித்த சிலருக்கும் தன்மானம் கட்டுப்படியாகாது.


லிவிங்ஸ்டன் ஒரு கன்ஸ்டிரக்ஷன் மேனேஜர், கடின உழைப்பாளி, டிப்ளமோ படித்துவிட்டு பிடெக் (B.Tec) படிக்காமலேயே கன்ஸ்ட்ரக்சன் மேனேஜராக உயர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு சுத்தம். முதலாளிகள் மேல் அவ்வளவு மரியாதை. புது கட்டிட பிராஜெக்ட் ஒன்று போய்க்கொண்டிருந்தது, திடீரென மேலாளர் அழைத்தார். அவரது அலுவலகத்திற்கு உள் நுழைந்த போது மேலாளர் மற்றும் கிளையன்ட் (வாடிக்கையாளர்கள்), பின் இவனது ஜூனியர்கள் என ஏழு, எட்டு பேர் அமர்ந்திருந்தனர். உள்ளே சென்றவுடன் மேலாளர் உச்சஸ்தானத்தில் கத்த ஆரம்பித்தார் என்ன லிவிங்ஸ்டன் இது சொன்ன வேலையை விட்டுட்டு, என்ன வேலை பண்ணி வச்சிருக்கீங்க? இன்னைக்கு கிளையன்ட் என்னை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேக்குறான். நீயா பதில் சொல்ற? வேலை செய்ய தெரிஞ்சா வேலையில இருங்க. இல்லனா வேலை வேண்டாம்னு எழுதி கொடுத்துட்டு போய்க்கிட்டே இருங்க. இந்த மாதிரி ஓவர் ஸ்மார்ட் வேலை எல்லாம் பண்ணாதீங்க. இந்த சின்ன பயலுகளுக்கு இருக்கிற அறிவு கூட உங்களுக்கு இல்லை. வயசு ஆக, ஆக அறிவு வளரும் இப்படி தேய்ந்துகொண்டே போக கூடாது. உங்கள எல்லாம் கன்ஸ்டிரக்ஷன் மேனேஜர் ஆக்கி வச்சிருக்காங்க பாருங்க இந்த கம்பெனி அத்தாரிட்டிஸ், அவங்கள சொல்லணும். என்று அவர் திட்டிக்கொண்டே இவன் என்ன தவறு செய்தான் என்று குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட விஷயம் லிவிங்ஸ்டனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தப் பிராஜெக்ட் மேனேஜர்தான் போனமாதம் கூப்பிட்டு, ஒரிஜினல் திட்டத்திலிருந்து மாறாக இப்படி செய்தால் நன்றாக இருக்கும். செய்து பாருங்கள் என கூறியது ஞாபகத்திற்கு வந்தது. அங்கே அத்தனை பேர் முன்னிலையில் நீங்க சொன்ன பிளான் தான் சார், நான் சுயமாக எதுவுமே செய்யவில்லை என அவனால் கூறி இருக்கக்கூடும். ஆனால், அங்கே அவன் தலைகுனிந்து, அவர் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். தன்மானம். அவனை எவ்வளவோ பேசுவதற்கு தூண்டியது. ஆனால் அவன் தன்மானத்தின் பேச்சைக் கேட்கவில்லை. அவன் அன்று தன்மானத்தின் பேச்சைக் கேட்டால், டிப்ளமோ குவாலிபிகேஷன் இருக்கிறவங்க மேனேஜர் ஆக முடியாது என முதலில் அவனது பதவி பறிக்கப்படும். பின்னர் இந்த மேனேஜரால் கண் வைக்கப்பட்டு பணி மாற்றம் செய்யப்படும். ஒருவேளை கோபத்தில் இந்த கம்பெனியிலிருந்து வெளியே போனால்? இதைவிட மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர நேரிடும். லிவிங்ஸ்டன் போன்றோருக்கும் தன்மானம் வாழ்வில் கட்டுபடியாகாது.

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் இது பொருந்தும். அகல்யா, தயங்கி தயங்கி அண்ணனின் வீட்டு கதவை தட்டினாள். அண்ணன்தான் கதவை திறந்தார் வாம்மா உள்ள என்றார். தயக்கத்துடன் நாற்காலியின் நுனியில் அமர்ந்தாள். இரும்மா வரேன் என்று கூறிவிட்டு உள்ளே போனார்.  அகல்யாவின் கணவனுக்கு சிறிது நாளைக்கு முன்பு மூளையில் ஒரு சிறிய கட்டி தோன்றியது.கையில் வைத்திருந்த சேமிப்பு எல்லாம் வைத்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அதை எடுத்தாகிவிட்டது. அவன் திரும்பவும் பழைய நிலைக்கு வந்து வேலைக்கு செல்ல இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். அதுவரை அவனது மருத்துவச் செலவுகளை  இன்ஷூரன்ஸ் பார்த்துக்கொள்கிறது. குழந்தைகளின் படிப்பு செலவுகளையும்,சாப்பாட்டு செலவுகளையும் அவள் ஆங்காங்கே சிறிது வேலைகள் செய்து பார்த்துக் கொள்கிறாள். அதையும் மீறி சில செலவுகள் வரும்போது அண்ணன் வீட்டிற்கு வருவாள். அண்ணன் எதுவுமே பேசமாட்டார். ஆனால் அண்ணியின் பார்வை சற்று கடுமையாகவே இருக்கும். தங்கையின் முகத்தை கண்டு பணத்தேவை உள்ளது, என அண்ணன் உள்ளே போய் பணம் எடுக்கச் சென்ற வேளையில், அண்ணி வெளியே வந்தாள். என்ன அகல்யா காபி குடிச்சிட்டியா? என்றாள் குடிக்கின்றாயா? என்று கூட கேட்கவில்லை. எப்படி இருக்காரு? உன் வீட்டுக்காரர் எனக் கேட்டாள். இப்படியே போனா, வேலைக்கு திரும்ப சேருவாரா? சேர மாட்டாரா? ஏன்னா, அண்ணனும் இப்ப கொஞ்சம் பணக் கஷ்டத்துல இருக்காங்க. நீ வேற, வந்து இப்படி காசு வாங்கிட்டு போனா நாங்க என்ன செய்வது. எத்தனை நாள்தான் அந்த மனுஷன் உங்க குடும்பத்துக்கே உழைச்சி கொட்டுவார். என பேச ஆரம்பித்தாள். ஊரைத் தாண்டி ரோட்டோரம் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை தங்கைக்கு பங்கு கொடுக்காமலேயே அண்ணன் வைத்துள்ளார். அவளுக்கு திருமணம் செய்யும் பொழுது வெறும் 20 பவுன் போட்டு திருமணம் செய்து முடித்து வைத்தார். “வாழ்க்கை ஏறக்குறைய இருந்தா, என்னைக்கு என்னிடம் வாஎன வாக்கு கொடுத்தார். கல்யாணம் ஆன நாளிலிருந்து, அவளது கணவரின் உடல் நலம் குறையும் நாள் வரை, அண்ணன் வீட்டு வாசற்படிக்கு உதவி என்று வந்ததில்லை. அவரது மருத்துவச் செலவுகளையும் இன்சூரன்ஸ் பார்த்துக் கொண்டதால், அவர் உடல் நலம் குறைவு பட்ட நிலையிலும் அண்ணனிடம் கையேந்த வில்லை. அவளும் படித்து உள்ளதால் பகுதி நேர வேலைகள் பார்த்து சம்பாதிப்பதால் சாப்பாட்டுக்காகவும் அண்ணனிடம் கையேந்த வில்லை. இப்பொழுது லாக்டவுன் ஆரம்பித்துவிட்டதால், இரண்டு மாதங்களாக வேலை இல்லை. வேறு வழியின்றி அண்ணனிடம் இரண்டு மாதங்களாக வருகிறாள். அண்ணனின் வேலைக்கு எந்த பாதிப்பும் இல்லாததால், அண்ணனுக்கு மாதமாதம் சம்பளமும் வருவதால், அண்ணன் எந்த மனக் கசப்பும் இல்லாமல், தங்கைக்கு உதவி வருகிறார். “செண்டு 50,000 ரூபாய்க்கு விக்குது. நீங்க ரெண்டு ஏக்கர் நிலத்தை வச்சிருக்கீங்க. எனக்கு நகை போட்டது போக மிச்ச நிலத்தை எனக்குத் தந்தா நான் இப்படி கையேந்த வேண்டியது இருக்காது என அண்ணியிடம் கேட்க ஆசை. ஆனால் அவள் கோபத்தில் உங்கள் தங்கைக்கு இனி பணம் கொடுக்கக் கூடாது என சொல்லிவிட்டால்? நிலம் வேண்டுமா? கோர்ட்ல கேஸ் போட்டு எடுத்துக்க என சொல்லிவிட்டால்? நாளை அவள் வீட்டு அடுப்பு எரியாது. பணக்காரர்களுக்கும், பதவியில் உள்ளவர்களுக்கும் இரவு 12 மணிக்கு கூட கோர்ட் விழித்திருக்கும். அகல்யா போன்றோருக்கு, 12 வருடம் ஆனாலும் தீர்ப்பு வராது. எல்லாவற்றையும் அறிந்ததால் அமைதியாக அண்ணியிடம் கூறினாள் சீக்கிரத்தில் குணமாகும். அவர் சீக்கிரத்தில் வேலைக்கு போக ஆரம்பித்து விடுவார். நாங்க ரொம்ப நாள் உங்களுக்கு சுமையாய் இருக்க மாட்டோம் என்றாள். எப்பத்தான் இந்த மனுஷன் தனக்கென வாழ போறாரோ? என கூறிக் கொண்டே உள்ளே சென்றாள். உள்ளறையில் இருந்து வந்த அண்ணன்,  அவளிடம் காசு கொடுத்துவிட்டு அண்ணியின் பேச்சை மனசில் வெச்சுகாதே. உனக்கு என்ன வேணுமோ என்கிட்ட வந்து கேளு என்றான். இந்த இடத்தில் பணத்தேவைக்காக மட்டுமல்ல, அண்ணனின் பாசத்திற்காகவும் அகல்யாவிற்கு தன்மானம் கட்டுப்படி ஆகவில்லை.

 

பணத்தேவை மட்டும்தான் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள தடையாய் இருக்கிறதா? என்றால்,  அதுவும் சரியல்ல. நாளையத் தலைவன், தன்மானத்தின் சிகரம் என அழைக்கப்பட்ட அந்த அரசியல்வாதி கோபத்துடன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். எங்கடா அந்த காக்கா? எனக்கேட்டார். காக்கா என்கின்ற  குமார் ஓடிவந்தான். என்ன தலைவரே என்றான், “ ஏண்டா பொதுக்கூட்டத்திற்கு போற வழியில, மூணு ஊர்ல ஒரு பேனர், ஒரு போஸ்டர் கூட இல்லை. என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க? எதிர்க்கட்சி காரன் எல்லாம் பார்த்து சிரிக்கிறான். என அசிங்கமாக திட்ட ஆரம்பித்தார். அவனது ஜாதியை இழுத்தார். அவளது குடும்பத்தை இழுத்தார். என்னமோ அவர் தான் அவனுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி திட்டிக்கொண்டே போனார். அவர் திட்டிக் கொண்டிருக்கும் போது குமாரின் மனதில், போஸ்டர் அடிக்க காசு கொடுக்கவில்லை, பேனர் வைக்க காசு கொடுக்கவில்லை, எத்தனை நாள்தான் சொந்த காசியிலேயே எல்லாம் செலவழிப்பது. எனக்கும் பிள்ளை குட்டிகள் இருக்குல்ல. புனைப்பெயர் மட்டும் தன்மான சிங்கம் என வைத்துக்கொண்டு அடுத்தவன் காசை ஆட்டையை போடுவதை குறியாக வைத்திருப்பவர்கள் ஏன் கட்சி நடத்த வேண்டும்?” என மனதிற்குள் திட்டிக் கொண்டான். தனக்கு மட்டும்தான் தன்மானம் இருக்குமா? தன்னோடு இருப்பவர்களுக்கும் தன்மானம் இருக்கும். என்ற எண்ணம் கூட இல்லாத இவனெல்லாம் என்ன தன்மானத் தலைவன் எனவும் மனதிற்குள் எண்ணிக் கொண்டான். எல்லாத்திட்டையும்  வாங்கி முடித்தபின் சரிங்கய்யா அடுத்தவாட்டி ஒழுங்கா பண்ணிடுறேன் எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். இந்த இடத்தில் அவன் தன் தலைவனிடம் காசு எதிர்பார்க்கவில்லை, அவன் கட்சியை நம்பி சோறு சாப்பிடவில்லை, அவனுக்கு ஏன் தன்மானம் கட்டுப்படி ஆகவில்லை? ஒருவேளை அடுத்த தேர்தலில் கவுன்சிலர் சீட் கேட்க அவன் நினைப்பதனால் இருக்குமோ??

                                            Photo by Matese Fields on Unsplash

பெரியவர்களுக்குத்தான் இந்த நிலை என்றால் இன்றைய இளைஞர்களுக்கும் இதே நிலைதான். அது ஒரு கல்லூரி,  தேர்வுகள் நெருங்கும் நேரம் இன்டர்னல் மார்க் போடும் சமயம் அது. பேராசிரியர் திட்டிக் கொண்டிருந்தார் ஏன்டா, என்னடா பேப்பர்ல எழுதறீங்க? மார்க் போடுற மாதிரியா டா எழுதறீங்க? படிப்பு வரலைன்னா எருமை மாடு மேய்க்க போ. இல்லன்னா மளிகை கடை வைக்க வேண்டியதுதானே. எதுக்குடா காலேஜ்ல சேர்ந்து எங்க உயிரை வாங்குறீங்க? ஊர்ல உள்ள முட்டாப் பய எல்லாம் எனக்குதான் ஸ்டுடென்ட்டா இருக்கான். என இஷ்டப்படி திட்டிக் கொண்டிருந்தார். திட்டு வாங்கிக் கொண்டிருந்த மாணவனின் மனதில், இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்த காலேஜ்ல படிச்சு முடிச்சிட்டு, வேற வேலை கிடைக்காமல், அதுக்கு மார்க் பத்தாம இந்த காலேஜிலேயே லக்சரர் வேலையில சேர்ந்து இருக்கிறவன் நீ, புக்குல உள்ளதை அப்படியே கட், காப்பி, பேஸ்ட் பண்ணி ஓ ஹெச் பி ல்ல ஓட விட்டு பாடம் எடுக்கிறவன் நீ.  இதுவரை ஒரு தியரி கூட எக்ஸ்ப்ளைன் (விரிவாக்கம்) பண்ணினது கிடையாது. நீ எல்லாம் பேசி, நான் திட்டுவாங்க வேண்டிருக்கு. என அவனுக்கு கேட்க ஆசை. ஆனால் இன்டர்னல் மார்க்கில் அவன் கை வைத்து விட்டால்? என்ற பயம். எக்ஸாம்ல அரியர் வந்துச்சுன்னா கூட அட்டம்ட் வச்சு பாஸ் பண்ணிடலாம். ஆனால் இன்டர்னல் மார்க்கில் கை வச்சுட்டா இவன் பின்னாடி அலைகிறதை கனவுல கூட நினைச்சு பார்க்க முடியல. அந்த இடத்தில், அந்த மாணவனுக்கும் தன்மானம் கட்டுப்படி ஆகவில்லை.

                                        Image by Pexels from Pixabay 

சிறுவர்களின் நிலை இன்னும் கொடுமையானது. தன்மானம் என்றால் என்ன? என தெரியும் முன்னே பல சிறுவர்கள் அதை இழந்து விடுகின்றனர். டீக்கடையில் எச்சில் டம்ளர் கழுவும் சிறுவன், டாஸ்மார்க்கில் சைடிஷ் பரிமாறும் சிறுவன், பத்து பாத்திரம் தேய்க்கும் அம்மாவோடு கூட செல்லும் 8 வயது சிறுமி, டிராபிக் சிக்னலில் கையேந்தி பிச்சை கேட்கும் சிறுவர்-சிறுமிகள் இவர்கள் எல்லோரும் எந்த வகையில் எல்லாம் அசிங்கப்படுத்த படுகிறார்கள் என்று நான் தனியாக கூறத்தேவையில்லை. இவர்கள் எல்லோரும் தன்மானம் என்றால் என்ன? என புரிந்துகொள்ளும் முன்பே அதை இழந்து விடுகிறார்கள் வெகுசிலரே வெகுண்டெழுந்து தன்மானத்தை மீட்டு எடுக்கிறார்கள். பலர் அது என்னவென்று தெரியாமலே தங்கள் வாழ்க்கையை முடித்துவிடுகிறார்கள்.

மனைவிக்காக, குழந்தைக்காக, தாய்க்காக, தகப்பனுக்கு, கணவனுக்காக, அண்ணனுக்காக, நண்பர்களுக்காக, என அடுத்தவருக்காக தனது தன்மானத்தை இழந்து, அல்லது தன்மானத்தை காக்க முடியாமல் தவிக்கும் யாரையாவது நம் வாழ்வில் பார்த்தால்! நம்மால் அவர்கள் தன்மானத்திற்கு இழுக்கு வராமல் நடந்துகொள்வோம்.

எனக்குத் தன்மானம் தான் முக்கியம். அதைக் காத்துக் கொள்வதற்காக, நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என கூறுபவர்கள் என்ன அடைந்தார்கள் எதை இழந்தார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.