வெகு நாட்கள் கழித்து, எனது கல்லூரி தோழி ஒருத்தியை, ஃபேஸ்புக்கில் கண்டுபிடித்து, பின் தொடர்பு எண்கள் பரிமாறி, தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். முதல் இரு நாட்கள் சம்பாஷணையில், பழைய ஞாபகங்களைப் பேசித் தீர்த்தோம். மூன்றாவது நாள் சம்பாஷணையில் அன்றாட நிகழ்வுகளைப் பேச ஆரம்பித்தோம். முதலில் சந்தோஷமாக ஆரம்பித்த உரையாடல் பின் துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் உரையாடலாக மாறியது. என்னோடு சில வாழ்க்கை பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டபின், அவள் "வாழ்க்கையை இப்படித்தான் வாழவேண்டும் என்று அட்டவணை போட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்று கூறினாள். இருவரும் சிரித்துக்கொண்டே உரையாடலை முடித்துக் கொண்டோம்.credit: third party image reference
நான் அவள் பேசியதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே எனது மூத்த மகன் அருகில் வந்தான். “அம்மா தம்பி எப்பொழுது தூக்கத்திலிருந்து எழும்புவான்” என்றான். "ஏண்டா அவன எழுப்பனும் கொஞ்ச நேரம் தூங்கட்டுமே" என்றேன். அதற்கு அவன் "நான் அவன் கிட்டச் சாரி கேக்கணும் அவனைச் சீக்கிரம் எழுப்பி விடுங்கள்" என்றான். "என்ன திடீர்னு? தூக்கத்தில் இருக்கிறவனை எழுப்பி எதுக்கு சாரி கேட்கனும்? எனக் கேட்டேன்."இல்ல எங்க மிஸ் சொல்லி இருக்காங்க யார்கிட்டயாவது சண்டை போட்டா நம்ம தூங்குகிறதுக்கு முன்னாடி அவங்க கிட்டச் சாரி கேட்கணும்னு சொல்லி இருக்காங்க" என்றான். "அப்படியா இது எப்ப சொல்லிக் கொடுத்தாங்க" எனக் கேட்டேன்.எங்களுடைய வாழ்க்கை பாடம் கிளாஸ் எடுக்கும் போது சொல்லிக் கொடுத்தாங்க என்றான். எனது! வாழ்க்கை பாடமா? என வியந்து கொண்டே அவனிடம் "சரி தம்பி தூங்கட்டும் முழிச்ச உடனே சாரி கேளு" எனக் கூறினேன்.credit: third party image reference
பெரியவன் தொலைக்காட்சி பார்க்கச் சென்றதும் அவனது புத்தகங்களை எல்லாம் துழாவினேன். அறிவுரை பாடங்கள் நிறைந்த ஒரு புத்தகம் கண்ணில் தென்பட்டது. அதில் ஒரு பாடமாக வாழ்க்கைப்பாடம் என்ற தலைப்பு இடப்பட்டிருந்தது. ஆச்சரியத்துடன் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அதை தலைப்புகள் சிலவற்றை உங்களுக்குக் கூறுகிறேன். அது ஆங்கிலத்திலிருந்ததால் உங்களுக்காக மொழிபெயர்த்துள்ளேன்.
எல்லா பொருள்களையும் பகிர்ந்து கொள்
நாம் தனக்கென எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளும் தன்மையினால் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாகிறோம். வாழ்க்கையில் அதிக சந்தோஷமாக இருக்கும் மனிதர்களைப் பார்த்தால், அவர்கள் கண்டிப்பாக விட்டு கொடுப்பவர்களாக இருப்பார்கள் அல்லது எல்லோரையும் தேடி உதவுபவர்கள் ஆக இருப்பார்கள், அல்லது யார் எந்த நேரத்தில், என்ன கேட்டாலும், முடிந்த அளவு உதவி செய்பவர்களாக இருப்பார்கள்.
credit: third party image referenceநேர்மையாக விளையாடு
நேர்மையைப் பற்றி விளக்கவே தேவையில்லை. நேர்மைக்கு பல தனித்தன்மைகள் உண்டு. தலைநிமிர்ந்து வாழ்வதற்கும், இரவில் படுத்தவுடன் தூங்குவதற்கும், நாம் பெற்றவர்கள், நம்மை அண்ணாந்து பார்ப்பதற்கும் நேர்மை மிக அவசியம்.
credit: third party image referenceபிறருக்குத் தீங்கு விளைவிக்காதே
மனிதனை விலங்குகளிடமிருந்து வேறு பிரித்துக் காண்பிப்பது இந்த பண்பு. பிறர் மனதைக் காயம் செய்வதும் தீங்குகளில் ஒன்று.
எந்த பொருளை, எங்கு எடுத்தாயோ அங்கேயே திரும்பவும் வை
இது சாதாரண வாக்கியமாகத் தெரியலாம் ஆனால் இதில் ஆயிரம் அர்த்தம் உள்ளது. எந்த, எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த, அந்த இடத்தில் தான் அந்தப் பொருள் இருக்க வேண்டும். பொருட்கள் மட்டுமல்ல மனிதர்களும் இருக்க வேண்டிய இடத்திலிருந்தால் வாழ்க்கையில் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டாம்
உங்களால் ஏற்பட்ட குழப்பங்களை நீங்களே சரி செய்யுங்கள்(Clean your own mess)
எவ்வளவு உண்மையான கூற்று. ஒருவரால் ஏற்படும் குழப்பத்தை, பலரை வைத்துச் சரி செய்யும் போது, சாதாரண குழப்பம், குடும்ப பிரச்சனையாகவும், பின் அது சமூகப் பிரச்சனையாகவும் மாறுகிறது. நமது சிறு குழப்பத்தை நாமே தீர்த்துவிட்டார், பின்னாளில் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்
உங்களுக்கு அல்லாத பொருள்களை எங்கிருந்தும் எடுக்காதீர்கள்
நான்கு வயது ஆனாலும் சரி,நாட்பது வயது ஆனாலும் சரி, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது, நம் வாழ்வில் 90 சதவீத பிரச்சனைகளைத் தீர்த்து விடும். பிறர் பொருட்களை இச்சியாதிருப்பது பல பாவங்களில் இருந்து நம்மைத் தப்புவிக்கும்.
பிறரை காயப்படுத்தினால் இரவு தூங்குவதற்கு முன் மன்னிப்பு கோருங்கள்
இது குழந்தைகளுக்கு மட்டுமா பொருந்தும்? கணவன் மனைவிக்கும், மாமியார் மருமகளுக்கும், பெற்றோர் குழந்தைகளுக்கும், நண்பர்கள் மத்தியிலும், உடன் வேலை செய்வோர் மத்தியிலும் எல்லா வகையிலும் பொருந்தி வரும் வாழ்க்கை பாடம்.
மூர்க்கத்தனம் தோன்றினால் தூங்கி விடுங்கள்(Take a nap when cranky)
கோபத்திலும் பாவம் செய்யாதிருங்கள் என்று ஒரு வேதாகம வாக்கியம் உண்டு. மூர்க்க குணம், மனதில் வந்து மற்றவர்களைக் காயப்படுத்தும் எண்ணம் தோன்றும் போது, மனதை அமைதிப் படுத்த வேண்டும் என்பதே, இதன் அர்த்தம்.இரவு தூங்கி எழுந்தபின் நம் வாழ்வின் பல பெரிய பிரச்சினைகள் மிகவும் சிறியதாகத் தோன்றுவது உண்மைதானே. தூங்குவதற்கு இரவு வரை ஏன் காத்திருக்க வேண்டும்? கோபம் வந்தால் தூங்கி விடுங்கள்அதன் பின் வரும் குறிப்புகள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பயனுள்ளது தான் அதுவும் கடைசியாக உள்ள பாடம் “ஒருவர்க்கொருவர் கை பிடித்து ஒன்றாய் நில்லுங்கள்” எவ்வளவு முக்கியமான வாழ்க்கை பாடத்தை ஒரே வரியில் எழுதி விட்டார்கள்.
credit: third party image referenceஒற்றுமை என்பதைவிட, ஒருவர் வாழ்வில், ஒருவர் கூட இருந்து, தேற்றி, அரவணைத்து, கைகளோடு கைகள் இணைத்து ஒன்றாய் பயணிப்பது என்று கூடஅர்த்தம் கூறலாம். இன்றைய எலி பந்தயத்தில் , நாம் இதில் பலவற்றை மறந்து விட்டோம். "தனக்கென பிழைத்து வாழ்தல்" என்ற கொள்கைக்கு நாம் மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன. நாம் எப்படி மாறி, எந்த நிலையில் வாழ்ந்தாலும், அன்பு அது இல்லை என்றால், வெற்றியின் உச்சியில் நின்றாலும் தனிமையாகத் தான் உணர்வோம்.
credit: third party image reference
வாழ்வில் சோகத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு ஆள் இல்லை என்றாலும் பரவாயில்லை. நண்பர்களே, நம் வெற்றியையும், சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்வதற்கு உண்மையான நண்பர்கள் தேவை. இவை எல்லாவற்றையும் இழந்து வாழ்க்கையில் எவ்வளவு ஜெயித்தாலும் வாழ்க்கை அர்த்தமற்றதாக காணப்படும்.என்னிடம் எல்லாம் இருக்கிறது, ஆனால் ஏதோ ஒரு குறை என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். காரணம் இதுதான், வெற்றிக்கனியைப் பறிக்கும் முயற்சியில் பல கிளைகளை முறித்துவிட்டு ஏறி இருப்பார்கள். உச்சியை அடைந்த பின், அவர்களை தாங்கிப் பிடிக்கக் கிளைகளும் கிடையாது. பின்னோக்கி செல்ல பாதையும் இருக்காது. அதன்பின் யோசிப்பார்கள் "வாழ்க்கை இப்படித்தான் வாழவேண்டும் என்று அட்டவணை இருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று.
நமக்கு வாழ்க்கைப்பாடம் நான்கு வயதிலேயே கற்பிக்கப்படுகிறது, நாம் கற்றுக் கொள்ளத்தான் நாற்பது ஐம்பது வருடங்கள் ஆகின்றன.சிலர் கற்றுக் கொள்ளாமலேயே சென்றுவிடுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக