வியாழன், 18 ஜூன், 2020

மனம் மழுங்கிய பின்

ப்ளீஸ் என்கிற தயவுசெய்து  - தொகுப்பு 1

                                            Image by Susan Cipriano from Pixabay 


நீ என்னை யூஸ் பண்ணிட்ட, உனக்கு புரியுதா என போனில் கத்தினாள், இல்லை, கதறினாள் என்றே சொல்லவேண்டும். “சும்மா சீன் போடாத,, ஓவரா பேசினா, போன் நம்பர மாத்திகிட்டு போய்கிட்டே இருப்பேன் என்ற எதிர் முனை பதிலை அவள் எதிர்பார்க்கவே இல்லை. ஒன்றரை மாதத்திற்கு முன் எதிர் முனையில் இருந்து இப்படி குரல் வரவில்லை. அந்த கோபத்திலும், அவளது மனம் இரண்டு மாதத்திற்க்கு பின்னால் சென்றது.  “என்னம்மா, சொல்லுமாஎன்பதைத்தவிர வேறு எந்த மாதிரியான, உரத்த குரலும் எதிர்முனையில் இருந்து இதுவரை வந்தது இல்லை. சம்யுக்தா, ஹர்ஷ்வர்தன்  இருவரும் ஆறு மாதங்களுக்கு முன் நண்பர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, பின்  அந்த அறிமுகம், காதலாகி, கசிந்துருகி, பரிசுகள் பரிமாறி,பேஸ்புக்  ரிலேஷன்ஷிப்  ஸ்டேட்டஸ் மாற்றி, பின் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, அவர்கள் காதல் வளர்ந்தது. 

மேகத்தில் மிதப்பது என்றால் என்ன?   வானவில்லை இன்னுமும் வளைத்து ஊஞ்சல் கட்டி ஆடுவது என்றால் என்னமனிதர்கள் மழையை ஏன் ரசிக்கிறார்கள்?, ஏன் வெட்டவெளியில் நின்று கத்துகிறார்கள்? போன்ற எண்ணிலடங்கா கேள்விகளுக்கு அந்த ஆறு மாதத்தில் அவள் விடை கண்டுபிடித்தாள். அவன் ஒரு நொடி கூட அவள் மனம் நோகச் செய்யவில்லை. ஒன்றரை மாதங்கள் இருக்கும், நண்பன் ஒருவன் கொடுத்த பார்ட்டிக்கு இருவரும் சென்றார்கள். தனிமை  கிட்டிய போது, அவன் இதமாக கேட்டான், இவள் பதமாக விட்டுக் கொடுத்தாள் அவன்  மெனக்கெடவே இல்லை. ஒரு முறை  ப்ளீஸ்என்றான்.இருபத்தைந்து வருடங்கள்  கட்டி காப்பாற்றியதை, அவன் மனம் நோகக்கூடாது  என்பதற்காக ஒரு நொடியில், அந்த ஒரு ப்ளீஸ் காக, விட்டுக்கொடுத்தாள்.

இன்று ஆயிரம் முறை அவனிடம் ப்ளீஸ் என்று கதறினாள்.  தயவு செய்து என்னை காயப்படுத்தாதேநான் உன்னை மிகவும் நம்பினேன், என எத்தனை முறை ப்ளீஸ் சொன்னாள், என்று கணக்கே கிடையாது. அவள் அத்தனை முறை கதறினாலும், எந்தப் ப்ளீஸ்சும் அவன் மனதிற்குள் செல்லவே இல்லை.

ப்ளீஸ் என்கிற தயவுசெய்து  - தொகுப்பு 2

பொள்ளாச்சி சம்பவத்தில் ஒரு சிறுமி "ப்ளீஸ் அண்ணா விட்ருங்க என்று கதறியதை நம் யாராலும் மறக்க முடியாது.  ஏன் அந்த சிறுமியின் கதறல் அவன் காதில் விழவே இல்லை

ப்ளீஸ் என்கிற தயவுசெய்து  - தொகுப்பு 3

 

                                        Photo by Jeswin Thomas from Pexels


மனைவி ஆசைப்பட்டாள் என்பதற்காக, லோன் போட்டு வீடு வாங்கி, பின் அவள் பேருந்தில் செல்லும் போது முகம் கருத்தாள், என்பதற்காக மற்றொரு லோன் போட்டு கார் வாங்கி, அவள் மீண்டும் வற்புறுத்தினாள் என்பதற்காக, கைமாற்றாக கடன் வாங்கி, பிள்ளைகளை கான்வென்டில் சேர்த்து. மாதம், மாதம் இஎம்ஐ வீட்டுக்கும், காருக்கும் கட்டி, பின் கைமாத்து கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல், வட்டிக்கு கடன் வாங்கி சமாளித்துவிட்டு, அப்பாடா! இனியாவது என் மனைவி திருப்தியாக இருப்பாள், என நினைத்து கொண்டிருக்கும் போது, அவள் பிறந்தநாள் வந்து விட, அவள் வைரமோதிரம் கேட்க ப்ளீஸ் தீபாவளி போனஸ் வந்ததும் வாங்கித்தருகிறேன், என்று அவன் கூற,  பொண்டாட்டி, பிறந்தநாளுக்கு ஒரு பரிசு கூட கொடுக்க முடியவில்லை, உனக்கெல்லாம் எதற்கு கல்யாணம் என கேட்கும் போது, அவள் மனம் மழுங்கிவிட்டது, அந்த ப்ளீஸ் அவள் மனதிற்குள் செல்லாது என்பது, நான்  கூறியா உங்களுக்கு தெரிய வேண்டும் .

 

ப்ளீஸ் என்கிற தயவுசெய்து  - தொகுப்பு 5

 

எட்டு மாதங்கள் உயிருக்கு உயிராக காதலித்து விட்டு.  அவன் செய்த ரீசார்ஜில் தினமும் பேசிவிட்டுஅவன் ஹோட்டலுக்கு பில் கொடுக்க, அவள் நன்றாக சாப்பிட்டுவிட்டு, அவன்  அப்பாவிடம் சண்டை போட்டு வாங்கிய இருசக்கர வாகனத்தில், ஊர் சுற்றிவிட்டுபின் செலவழிக்க பணம் இல்லாததால், அந்த வாகனத்தை, அடகு வைத்த  காசை செலவழித்து முடித்துவிட்டுதோழி ஒருத்தி பிராக்டிகலா யோசி எனக் கூறிய காரணத்திற்காக அவனை விட்டுவிட்டு, வேறு ஒருவரோடு பழக ஆரம்பித்ததால், இவனிடம் பேசாததால்,  இவன் அவளை வழிமறிக்க, ஏன் என்னை காயப்படுத்துகிறாய்? என அவன் கேட்க, இவள் அவனை பதிலுக்கு திட்ட, கோபத்தில் அவன் கைகளை   ஓங்க,பொதுமக்கள் எல்லாம் சேர்ந்து அவனை அடிக்க வரும் பொழுது, அவன் அவளைப் பார்த்து ‘“ப்ளீஸ் எனக்குத் தெரிந்தவர் தான் என்று சொல் என்று கெஞ்சினான்.  அவள் ஏதும் சொல்லாமல் அமைதியாக நின்ற பொழுது, பாவம் செய்த அவள் பரிதாபத்துக்கு உரியவள் ஆகினாள்.  காரணம் கேட்ட அவன் பொறுக்கி  ஆனான் இதுவும் ஒரு மழுங்கிய மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டு.

 

ப்ளீஸ் என்கிற தயவுசெய்து  - தொகுப்பு 5

                                             Image by vishnu vijayan from Pixabay

இரு மனங்களுமே  மழுங்கி, யாருடைய  ப்ளீஸ் உம் யாரும் உணராது  வாழ்வது, இன்று கணவன், மனைவிக்கு இடையே அதிகரித்து  வருகிறது. மனைவி எத்தனை முறை சொன்னாலும் அவன் மனதிற்குள் நுழைவதில்லை.  கணவன் எத்தனை முறை கெஞ்சினாலும் மனைவி உணர்வது இல்லை.  ஆனால் ஒருவருடன் ஒருவர் பேசி தீர்வு காண்பதை விட்டுவிட்டு. இந்தப் பொண்டாட்டியே இப்படி தான்டா, என்னடா செய்வது? என அவன், அவன் நண்பனிடமும்.  எனக்கு வந்து வாச்சிருக்கு பாரேன், எதுவுமே மண்டையில ஏறாது, என மனைவி அவள் தோழியுடனும்  கலந்துரையாடினால், மனம் மேலும் மேலும் மழுங்குமே தவிர தீர்வு கிடைக்காது .  உண்மையிலேயே பெண்கள் கொடியவர்கள் அல்ல. பெண்கள் மிகவும் மெல்லிய மனம் படைத்தவர்கள்.  ஆண்களால் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். கணவன் கேட்ட பல ப்ளீஸ் களுக்கு மனம் இறங்கி, இறங்கி,மனைவி கேட்ட பல ப்ளீஸ்சுகளுக்கு, கணவன் மனதில் இடம் இல்லாததால் , அல்லது அவர்கள் கேட்ட ப்ளீஸ் கள் கணவன் மனதிற்குள் செல்லாததால், அவர்கள் மனம் நாளடைவில் கடினமாகிறது.  இன்னமும் அடிமனதில், இவன் என்னை புரிந்து கொள்ள மாட்டானா    என்னோடு  அமர்ந்து சிறிது நேரம் கதைக்க மாட்டானாநான் சொல்வதை தயவுசெய்து கேட்க மாட்டானாஎன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மாட்டானா? என ஏங்கித் தவித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.  பெண்களை சமாளிப்பது மிகவும் எளிது. அவர்கள் கொடுக்கும் சமிக்கைகளை கவனித்தாலே போதும். அதை ஆண்கள் கவனிக்க விரும்புவதும் இல்லை,  அவர்களுக்கு கவனிக்க நேரமும் இல்லை. பெண்களே! ஆண்களுக்கு சமிக்கைகள் புரியாது. எது வேண்டுமோ, தெளிவாக கேளுங்கள்.   எதை பகிர வேண்டுமோ, வெளிப்படையாக பேசுங்கள். மனதை மழுங்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். என்று நம் மனது ப்ளீஸ் என்கிற தயவுசெய்து என்ற வார்த்தையை உணர மறுக்கிறதோ, அன்றோடு நம்மோடு  மனிதம் என்கின்ற மனிதநேயமும் சாகிறது. "தயவுசெய்து" என்ற வார்த்தையை உணர்வுகளோடு உச்சரிப்போம், உணர்வுகளை உணர்ந்து உள்ளத்தில் ஏற்போம்.   மழுங்கிய இதயங்களிடம் இருந்து விலகி இருப்போம்.


6 கருத்துகள்: