புதன், 17 ஜூன், 2020

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

                                             Image by Nasir Akhtar from Pixabay
எங்கள் ஊரில் நான் வளர்ந்து வந்த காலத்தில், குணசேகரன் அண்ணன் மிகவும் பிரபலமானவர். பெயருக்கேற்றவாறு குணத்தில் கனவான்.   எல்லோராலும் பெரிதும் விரும்பப் படுபவர். எல்லோருக்கும் பிடிக்கும் என்றால், அவரது உடல் உருவத்தினால் அல்ல, மன அமைப்பினால்.     சிறு வயதிலேயே போலியோ நோய் தாக்கியதில்,  கால்களில் ஒன்று சூம்பிப்   போயிருக்கும். எப்பொழுதுமே கம்பு வைத்து ஊன்றி நடந்து வருவார்.   எப்பொழுதுமே முகத்தில் சிரிப்பு இருக்கும். அந்த சிரிப்பை மீறியும் முக களைப்பு தெரியும். ஒரு இடத்தில் ஐந்து நிமிடம் உட்கார மாட்டார்.    என் அம்மாவை அக்கா என்றே அழைப்பார். “ஏண்டா 40 வயசு ஆகுது ஒரு    பொண்ண பாத்து கட்டலாம்ல்ல என்று கேட்டால் அட போக்கா என்ன கட்ற தகுதி இந்த ஊரில் எவளுக்கு இருக்கு என்பார்? என் அம்மா பதிலேதும் பேசாமல் அமைதியாகச் சிரிப்பார். ஒருநாள் குணசேகரன் அண்ணன், அவரது கடைசி தம்பியின் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தார். அழைப்பிதழை வாங்கிய போது என் அம்மாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. “ஏண்டா உனக்குன்னு ஒரு வாழ்க்கை கடைசி வரை அமைச்சுக்கவே இல்லையே என்று கேட்டார். “எல்லாம் தெரிந்தும், நீ கூட இப்படி கேட்கிறியே கா அப்படின்னார். போகும்போது மறுபடியும் திரும்பி என் பொண்டாட்டி செத்துட்டா. அது உனக்கு நல்லாவே   தெரியும். இன்னொரு வாட்டி இப்படிக்   கேட்காதே   என்று கூறிவிட்டுச்   சென்றுவிட்டார். குணசேகரன் அண்ணன் முதன் முதல் முகம் மாறியது இந்த தருணத்தில்தான். நான் அண்ணனை இப்படிப் பார்த்ததே இல்லை.

அவர் சென்ற பிறகு அவர் போன பாதையைச் சிறிது நேரம் அம்மா பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் மெதுவாக என்னம்மா ஆச்சு அண்ணனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா? என்று கேட்டேன். அம்மா   அந்தக் கொடுப்பினை அவனுக்கு அமையவே இல்லை. இவன மாதிரி ஒரு நல்லவனை நான் பார்த்ததே கிடையாது என்றார். அப்புறம் ஏன் பொண்டாட்டி செத்து போயிட்டான்னு சொல்லிவிட்டுப் போனார் என்று கேட்டேன். அம்மா ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு குணசேகரன் அண்ணனின் கதையைக் கூறத் தொடங்கினார். குணசேகரன் அண்ணனின் அப்பாவுக்கு இரு மனைவிகள். மூத்த மனைவியின் மகன் குணசேகரன். அண்ணன் பிறந்த உடன் சில வருடங்களிலேயே அம்மா இறந்துவிட்டார். பின் இரண்டாவது மணமுடித்தார் குணசேகரனின் அண்ணனின் தந்தை. ஒரு மகள் இரண்டு மகன்களைப் பெற்றுவிட்டு இரண்டாவது மனைவியும் மறைந்துவிட்டார். இரு மனைவியும் போன சோகத்திலேயே அவரது தந்தை குடித்துவிட்டுப்   பொறுப்பற்று நடக்கத் தொடங்கிவிட்டார். தம்பி, தங்கைக்கு குணசேகரன் அண்ணன்தான் தாயாக விளங்கினார். கால் ஊனமாக இருந்தபோதிலும் சிறு வயதிலிருந்தே உழைக்கத் தொடங்கினார். எந்த வேலை கிடைத்தாலும் பார்த்தார். பள்ளிக்கூடம் சென்றதாக அவருக்கு ஞாபகம் கூட இல்லை. சிறிது நாட்களில் தந்தையும் இறந்து போனார். நாட்கள் செல்லச் செல்ல குணசேகரனின் அண்ணனின் நல்ல பண்புகளைப் பார்த்து எல்லோருக்கும் பிடித்துப் போனது. பூர்வீக சொத்து கொஞ்சம் இருந்ததால் அதை முதலீடாக வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினார். ஓரளவு வசதி வாய்ப்புகளும் வந்தது. இது எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இதற்குக்   கிளைக்கதையாக குணசேகரன் அண்ணனுக்கு ஒரு காதலும் இருந்து, அந்தக் காதல் எப்போது தோன்றியது என்று இருவருக்குமே தெரியாது. அந்த பெண்ணின் பெயர் மங்கையர்க்கரசி. இருவரும் காதலில் விழுந்த நாள் இருவருக்குமே தெரியாது. சாதாரணமாக பார்க்க ஆரம்பித்து. கடந்து செல்லும் போது மட்டுமே, மங்கையர்க்கரசி அக்கா குணசேகரன் அண்ணனை ஏற்றெடுத்துப் பார்ப்பார். பெரிதாக இருவரும் பேசிக் கொண்டது கிடையாது. கோயிலுக்கு வரும் பொழுது, தண்ணீர் எடுக்க வரும் பொழுது பார்ப்பதோடு சரி. ஆனால் இருவருக்குமே தெரியும், இருவரும், ஒருவர் இல்லாமல் ஒருவர், தனித்திருக்க முடியாது என்று. நான் கதை கூறும் காலகட்டம் 25 ஆண்டுகளுக்கு  முந்தையது. ஆதலால் இந்த காதல் இப்படித்தான் இருக்கும். குணசேகரன் அண்ணனுக்குக் கடமைகள் நிறைய இருந்ததால் மங்கையர்க்கரசி அக்கா எந்தவகையிலும்   அண்ணனைத் தொந்தரவு படுத்தவே இல்லை. இருவரின் காதலும் பெரியவர்களுக்கும் தெரிந்ததால், அண்ணனின் குணநலன்களைப் பற்றி அறிந்த மங்கையர்க்கரசி அக்காவின் குடும்பமும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் விதியின் விளையாட்டு வேறுவிதமாக இருந்தது. வார்த்தைகளால் பகிர்ந்து கொண்ட காதல் பலமானதாக இருந்தாலும். வார்த்தைகளால் பகிரப்படாமலே இருந்த காதல், கண்களை வைத்து மாத்திரமே, ஒருவர் மனதை ஒருவர் உணரப்பட்ட காதலின் பலத்திற்கு அளவே இல்லை.

கண்களால் உணரப்பட்ட காதல் காவிய காதல் ஆனது எப்படி? விதி எப்பொழுது வேண்டுமானாலும் வாழ்க்கையில் விளையாடலாம். ஒரு சாதாரண நன்பகல் வேலை, வெயில் தீயாக கொளுத்தியது. குணசேகரன் அண்ணன் வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். பத்து மணிக்கு வீட்டுக்குச் சென்று விடும் அண்ணன் அன்று புதன்கிழமை ஆனதால் 12 மணிக்கு மோட்டாரில் குளிக்க வரும் மங்கையர்க்கரசி   அக்காவிற்குக்   காத்திருந்தார். நான்கு தோழிகளுடன் அக்கா குளிக்க வருவார்,   அக்கா அண்ணனைக் கடந்து சென்றவுடன் அண்ணன்   வீட்டிற்குச் சென்று விடுவார். பெண்களின் கடைக்கண் பார்வைக்காக   ஏங்கித் தவித்த காலகட்டம் அது. அன்றும் அப்படிதான் அக்காவுக்காக வரப்பில் அமர்ந்து காத்துக்கொண்டிருந்தார். வெயில் சுட்டெரித்தது, ஆதலால் தலையில் ஒரு துண்டை போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். சிறிது தூரத்தில் அக்கா வரும் ஓசை கேட்டது. அதே நேரத்தில் அண்ணன் உட்கார்ந்து இருக்கும் இந்த புறத்திலிருந்து ஒரு முதியவர் வரப்பை கடந்து சென்றார். அவர் கடந்து செல்லும்போது என்ன குணசேகரா தலையில் துண்டு போட்டு உட்கார்ந்து இருக்கிற?, என்று கேட்டிருக்கிறார். தூரத்தில் அக்கா வருவதை பார்த்த அண்ணன் அக்காவைக் கேலி செய்வதற்காகவும் சீண்டுவதற்காகவும், என் பொண்டாட்டி செத்துட்டா அதான் தலையில் துண்டு போட்டு இருக்கேன்   என்று கூறியிருக்கிறார். தூரத்தில் அக்காவைப் பார்த்த அந்தப் பெரியவர் வாய கழுவு, என்ன பேச்சு பேசுற?   என்று கேட்டுவிட்டு   கடந்து சென்றிருக்கிறார். அன்று குணசேகரன் அண்ணனின் கண்களைப் பார்க்காமல் தலை குனிந்தபடியே மங்கையர்க்கரசி அக்கா   அண்ணனை கடந்து மோட்டார் ரூமிற்கு சென்று விட்டார். ஏதோ கோபத்தில் இருக்கிறாள் என்று நினைத்து விட்டு அண்ணனும் வீடு சென்றுவிட்டார்.


அடுத்த நாள் காலையில் தண்ணீர் எடுப்பதற்கு அக்கா வரவே இல்லை. என்ன ஆயிற்று என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கடைப் பையன் பதறி அடித்தபடி ஓடிவந்தான். “சேகர் அண்ணா மங்கையர்க்கரசி அக்கா வீட்ல கூப்பிடுறாங்க என அழைத்துச் சென்றாள். அங்கு போனால் மங்கையர்க்கரசி அக்காவின் தந்தை ஓங்கி அண்ணனின் கன்னத்தில் அறைந்தார். உள்ளே எல்லோரும் கதறி அழுதபடி இருந்தார்கள். அண்ணன் கையில் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில் உங்கள் வாழ்வில் ஒரு பெண்தான், அது நான்தான், இதுவரை உங்கள் பொண்டாட்டியாக தான் வாழ்ந்து வருகிறேன். புருஷன் பொண்டாட்டி பற்றி எது கூறினாலும் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். என் பொண்டாட்டி செத்துட்டா,   அப்படி நீங்க சொன்ன பிறகு நான் உயிரோடு இருந்தா, அது உங்களுக்கு மரியாதையா இருக்காது. நான் இப்படி செய்யறதுக்கு   என்ன     மன்னிச்சிடுங்க.        உங்க கூட எனக்கு ரொம்ப நாள்   வாழனும்னு ஆசை.   அடுத்த பிறப்பிலாவது ரொம்ப நாள் சேர்ந்து வாழ்வோம்”. என்று எழுதி இருந்தது. அண்ணனால்   மங்கையர்க்கரசி   அக்காவை மன்னிக்கவே முடியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை வேறு எந்தப் பெண்ணையும் அவர் நினைக்கக் கூட இல்லை. எப்படி முடியும்?.மங்கையர்க்கரசி அக்கா போகும் போது அண்ணனையும் சேர்த்துக் கொண்டு போய் விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். உடல் மட்டுமே நடமாடுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இது அந்தக் காலத்துக் கதை, லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது. அக்காவைப் பைத்தியம் என்று திட்டவும் கூடாது. இதுவரை என் வாழ்வில் பார்த்த, அல்லது கேட்ட கதைகளில் இந்த கதையை அடித்துக்கொள்ள வேறு எந்த கதையும் இதுவரை இல்லை. இன்று நாம் வார்த்தைகளை எப்படி எல்லாமோ உபயோகிக்கிறோம். ஆனால் சாதாரண ஒரு வார்த்தை ஒரு மனிதனின்   வாழ்க்கையைத் தாறுமாறு ஆக்கிவிட்டது.

 இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”.

20 வருடங்களுக்கு முன் வார்த்தைகள் எவ்வாறு மதிக்கப்பட்டன என்பதை இந்த கதையில் நாம் உணரலாம். நாம் இன்று சாதாரணமாக ஒருவரை செத்துப் போ எனக் கூறுகிறோம். தினசரி சண்டைகள் நீ இல்லாமல், இருந்தாலே நான் நிம்மதியாக இருப்பேன் எனவும் கூறுகிறோம். உண்மையிலேயே அந்த நபர் இல்லாத வாழ்வை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். ஒரு நொடிப் பொழுதில் நாம் யோசிக்காமல் வீசும் ஒரு வார்த்தை நம் வாழ்க்கையை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி விடும் என்பதற்கு, இந்த கதை ஒரு உதாரணம். போற போக்கில் ஒரு பார்வை வீசி செல்லுங்கள் அது வெட்கமாக இருந்தாலும் சரி, தன்மையாக இருந்தாலும் சரி, வன்மையான பார்வை ஆனாலும் சரி. தயவுசெய்து     போறபோக்கில் வார்த்தையை வீசி     விட்டுச் செல்லாதீர்கள்.   எல்லோரும் மழுங்கினவர்கள்அல்ல. தன்மானத்தை தனக்கே உரிய தாக்கி கொண்டவர்கள் இன்றும் பலர் வாழ்கின்றனர். காதல் காவிய காதலாக மாறி விட்டாலும், அண்ணன் வாழ்க்கை காலாவதியாகிவிட்டது காலத்தின் கொடுமை. அண்ணன் இதுவரை தனிமையில் வாழ்ந்து கொண்டு, தன் காதலை காவியமாக்கி வருகிறார். பெண்களே! நொடிப்பொழுதில் நீங்கள் எடுக்கும் வேண்டாத முடிவுகள், உங்களை மட்டுமல்ல, வாழ வேண்டிய பலரையும் பாதிக்கும். சிந்தித்து செயல்படுங்கள்.


4 கருத்துகள்: