புதன், 10 ஜூன், 2020

மனிதாபிமானத்தின் மறு பரிமாணம்

அவருக்கு நாய் வளர்ப்பது பிடிக்காது. எனக்குப் பூனைகள் வளர்ப்பது பிடிக்காது. குழந்தைகளுக்கு கோழிகள் என்றால் பயம். பிராணிகள் அல்லது பட்சிகள் வளர்க்கும், அல்லது வளர்க்க விரும்பும் குடும்பம், எனது குடும்பம் இல்லை. செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் தவறாக எண்ண வேண்டாம். கதைக்குச் செல்வோம்.

credit: third party image reference

Watch this story in youtube, இந்த கதையை யூட்யூபில் பாருங்கள்

முதலில் புறா கதை. மிகவும், மிகப் பெரிய முற்றம் வைத்து, சாளரங்கள் அதிகமுள்ள வீடாகக் தேடி, அந்த அழகிய வாடகை வீட்டில் குடியேறினோம்.  நான், அவர் இருவருமே தனிமையை விரும்புபவர்கள். வீட்டு வேலைகளுக்குக் கூட ஆள் வைக்கவில்லை. நாங்கள் அந்த வீட்டின் உள்ளே முதன்முதல் நுழையும்போது, தாழ்வாரத்தின் நிலை கம்பில் இரண்டு புறாக்கள் அமர்ந்திருந்தன. ஒரு சாம்பல் நிற புறா, மற்றொன்று கரு நீலமும் சாம்பலும் கலந்தது. மனிதர்கள் குடியேறினால் புறாக்கள் பறந்துவிடும் என்றார் வீட்டின் உரிமைக்காரர்.

credit: third party image reference

எங்களை பார்த்தால் மனிதர்களாகத் தெரியவில்லை போலும், ஒரு வாரத்தில் நான்கு புறாக்கள் வந்துவிட்டன. ஒரு மாதம் சென்றது, புறாக்களின் கழிவுகளால் வெளிப்புற முற்றம் நிறைந்தது. ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போதும்,  எவ்வாறு இந்த புறாக்களை விரட்டலாம் என்று யோசிப்பேன். பக்கத்து வீட்டிலிருந்து ஒருவர், “புறாவின் கூட்டைப் பிய்த்து விடுங்கள் திரும்பவும் புறா வராது” என்றார்.

credit: third party image reference

ஒரு மரப்பலகை போட்டு, அதன் மேல் ஏறி புறாக் கூட்டை பார்க்க விழைந்த போது, புறா பறந்தது. ஆனால் கூட்டின் உள்ளே புறாவின் முட்டைகள் இருந்தன. எங்கள் இருவருக்குமே கூட்டை பிரித்து எறிய விருப்பமில்லை. ஏனோ மனதில், புறாவின் கருவை அழிப்பது போல் தோன்றியது. பட்சிகளுக்குக் கர்ப்பப்பை வெளியே இருப்பது போன்ற பிரமை தோன்றியது. எங்கள் இருவருக்குமே புறா எப்படியாவது திரும்ப வந்து விட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முதன்முறையாக புறாவின் வருகைக்காகக் காத்திருந்தேன். வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒருவழியாகப் புறா திரும்பி வந்து முட்டைகளை அடைகாக்க ஆரம்பித்தது.

credit: third party image referenceபுறா குஞ்சு பொரித்த உடனே கூட்டை பிய்த்து எறிய வேண்டும் என முடிவு செய்து கொண்டோம். ஒருவழியாக புறாக்களின் குஞ்சுகள் முட்டையை விட்டு வெளியே வந்து உலகைக் கண்டது. முடிகளும், இறக்கைகளும் இல்லாமல் புறாக் குஞ்சுகள், பிறந்த குழந்தை போல் இருந்தது. குஞ்சுகள் வளரட்டும் பின் எறிந்து விடலாம், என்று எண்ணி மீண்டும் புறாக் கூட்டை பிய்க்காமல் விட்டு விட்டோம். புறாக் குஞ்சுகள் வளர்ந்தபோது அடுத்த ஜோடி புறாக்கள் உப்பரிகை ஜன்னல் மேலே கூடு கட்டி முட்டை இட்டு இருந்தது. இப்படியாக நாங்கள் அந்த வீட்டை காலி செய்யும் பொழுது, 18 ஜோடி புறாக்கள் எங்கள் வீட்டைச் சுற்றிலும் இருந்தது.

credit: third party image reference

ஒருவழியாக அந்த ஊரில் எங்களது வேலை முடிந்து அடுத்த ஊருக்கு வேலை மாற்றம் வந்தபோது, என் கணவரிடம் அடுத்த வீடு செல்லும்போது, புறாக்கள் இல்லாத வீடாகப் பாருங்கள் என்றேன். வண்டியில் கணவர் “புறாக்களின் கூட்டை எறிய வேண்டாம் எனக் கூறியது நீ, அதற்குத் தண்ணீர் வைத்தது நீ, புறாக்கள் இருந்த இடத்தை எல்லாம் சுத்தமாக வைத்துக் கொண்டது நீ, குழந்தைகளிடமிருந்து புறாக்குஞ்சு களைப் பாதுகாத்தது நீ இரண்டு முறை புறாக் குஞ்சுகள் கீழே விழுந்த போது அதைத் தெரு நாயிடம் இருந்து காப்பாற்றியது நீ, எல்லாம் செய்துவிட்டு இப்போது புறாக்களைப் பிடிக்காதது போல் நடந்து கொள்கிறாய். ஏன்? என்றார். நான் என்னவரிடம்  “எனக்குப் புறாக்கள் பிடிக்காது, ஆனால் மனித நேயம் மிகவும் பிடிக்கும்” என்றேன். உயிரை உயிராய் மதிப்பதற்கு, அந்த உயிர் மனிதனின் உயிராகவும், அந்த மனிதன் நமக்குப் பிடித்தவனாக மட்டும் தான் இருக்கவேண்டும் என்றில்லை. உயிரை உயிராய் மதிப்பதற்கு, நாம் மனிதனாகவும், நம்முள் மனிதநேயமும், இருந்தாலே போதுமானது. நான் வளர்த்த அடுத்த பிராணியின் கதையை இன்னொரு கட்டுரையில் காணலாம்.

1 கருத்து: