திங்கள், 22 ஜூன், 2020

சுதந்திராவின் (பார்வையில்) சங்கீதா

First half  இதன் முதல் பாகத்தை இந்த லிங்கில் படித்துவிட்டு இந்த கட்டுரையை தொடருங்கள் First half

                                                Photo by Kane Reinholdtsen on Unsplash

சுதந்திரா மேடையேறினாள். ஐந்து நிமிடம் அமைதியாக நின்றுவிட்டு பெரிதாக மூச்சை உள்ளிழுத்து, பேச ஆரம்பித்தாள். அர்ச்சனாவின் அம்மா மருத்துவர், வெகுநாளாக தான் ஆசைப்பட்ட படிப்பை படித்து முடித்துவிட்டு தன் சந்தோஷத்திற்காகவும், தனது மகளின் சந்தோஷத்திற்காகவும் வேலை பார்க்கிறார். அவர் தன் துறையில் எவ்வளவு திறமையானவர், மக்களுக்கு எவ்வளவு உதவி செய்கிறார் என்பதை, அர்ச்சனா கூற கேட்டோம்.   சுஷ்மிதாவின் அம்மா பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறார், அவர் சுஷ்மிதா என்னவெல்லாம் செய்கிறார் என்பதை சுஷ்மிதா சொல்லக் கேட்டோம். ரேஷ்மாவின் அம்மா ஒரு சமூக ஆர்வலர் சொல்லவே வேண்டாம், நாட்டிற்கும், வீட்டிற்கும் ரேஷ்மாவின் அம்மா எவ்வளவு நல்லது செய்கிறார்கள் என்று. ரேஷ்மாவின் அம்மாவின் புகைப்படங்களை நான் பத்திரிக்கைகளில் பார்த்திருக்கிறேன். அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை நமது பள்ளியில் அச்சிவர் போர்டில்”               தொங்கவிடப்பட்டிருந்தது அதை நான் வாசித்திருக்கிறேன்.   பின்னாளில் ரேஷ்மாவின் அம்மாவைப் போல், இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனது மனதில் தோன்றும். சாதனை படைத்த, படைத்துக் கொண்டிருக்கிற அம்மாக்கள் பட்டியலில் என் அம்மா வரமாட்டார். என் அம்மாவை புகைப்படத்தைத் தவிர இதுவரை நான் பார்த்ததே இல்லை. என்   அம்மா என்ன வேலை செய்கிறார் என்று, ஒரு வருடத்திற்கு முன் என்னைக் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது. ஆனால் ஒரு வருடத்திற்கு முன் ஒரு விலைமாதர் நேர்காணலில், என் அம்மாவின் நேர்காணலை ஒரு முறை பார்த்தேன். அதன் பின் தான் என் அம்மா ஒரு பாலியல் தொழில் செய்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். என் அம்மா செய்யும் தொழிலின் பெயர் பாலியல் தொழில், என்பதையே கூகுள் செய்து தான் தெரிந்து கொண்டேன். அந்த நேர்காணலை நான் பார்த்து முடித்தபின் என் பாட்டியிடம் அம்மா பாரின்ல இருக்காங்கன்னு தானே சொன்னீங்க? ஏன் இப்படி என்னை ஏமாத்திட்டீங்க என்று கேட்டேன். ஒரு நாசமா போனவன் அவளை நரகத்தில் தள்ளி விட்டுட்டான், வெளியே வரணும்னு  நினைக்கும்போது,   நீ பிறந்திட்ட சோறு மட்டும் சாப்பிடணும்னு   நினைச்சிருந்தா, என்னைக்கோ வந்திருப்பா. உன்னைப் படிக்க   வைக்கணும்னு நினைச்சதனால   அங்க அவ இன்னும் இருக்கா. நிறைய விஷயம் உனக்குப் புரியாது,   உன்னோட வேலை படிக்கிறது. அதை மட்டும் பாரு. நீ ஏதாவது செய்யணும்னு நினைச்சா, நல்லா படி, சம்பாதி, அவள் அங்கிருந்து கூட்டிட்டு வா எனக் கூறினார்,

                                                Photo by Aliyah Jamous on Unsplash

 நான் எனது அம்மாவின் நேர்காணலை 11 வயது இருக்கும் பொழுது பார்த்தேன். இந்த பொம்பளையை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என யோசிக்கும்போது, பாட்டி புத்தகத்தில் வைத்திருந்த அம்மாவின் புகைப்படம் ஞாபகம் வந்தது. ஒரு நிமிடம் கூட என்னால் இது என் அம்மா என்று ஜீரணிக்க முடியவில்லை, அந்தச் சூழ்நிலையைக் கிரகிக்கக் கூட நேரமில்லை. அந்த நேர்காணலில், எனது அம்மா தான் இரண்டு வருடங்களுக்கு முன்னமே விடுதலை பெற்று விட்டதாகவும், எனது பெண் குழந்தை ஒரு நல்ல பள்ளியில் படித்து வருகிறாள். எனக்கு இங்கு இருந்து வெளியே வர ஆசை, ஆனால் நான் வெளியே வந்தால் எனக்கு யார் வேலை தருவார். அப்படியே வீட்டு வேலை செய்து வாழ்ந்தாலும், என் பிள்ளையை அந்த ஸ்கூலில் ஃபீஸ் கட்டி படிக்க வைக்க என்னால் முடியாது. நான் சேற்றிலே விழுந்து விட்டேன் இன்னும் சிறிது நாட்கள் இந்த சேற்றிலே இருந்து எனது பிள்ளைகளை படிக்க வைத்து விட்டு, அவள் என்று சம்பாதிக்க ஆரம்பிக்கிறாளோ அன்று நான் இந்த சாக்கடையிலிருந்து வெளியே வந்து விடுவேன். அதன்பின் நான் கூலி வேலை செய்துதான் சாப்பிடுவேன். மறுபடியும் அந்த சாக்கடையை நான் எட்டிக்கூடப் பார்க்க மாட்டேன். எனக்கு இருக்கிற அனுபவத்திற்கு நான்கு பெண்களை வைத்து நானே தொழில் செய்யலாம். ஆனால், இன்றும் புதிதாக வரும் பெண்களிடம், இந்த சாக்கடைக்குப் பழகி விடாதீர்கள். என்று முடியுமோ அன்று வெளியே செல்லுங்கள் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்னை விட்டது போலவே அந்தக் கயவன் இரண்டு, மூன்று பெண்களை வந்து விடுவதை என் கண்ணிலே பார்த்திருக்கிறேன். இப்பொழுது அவனைப் பார்க்க முடியவில்லை. எங்கு இருக்கிறான் என்றும் தெரியவில்லை. கண்டிப்பாக அவன் நிம்மதியாக மட்டும் இருக்க மாட்டான். என் வாழ்விற்குப் பிடிப்பு என் மகள். என்றோ இறந்திருப்பேன். அவளுக்காக மட்டுமே இன்றும் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சாக்கடையை விட்டு என்று வெளியே வருகிறேனோ அன்று தான் என் மகளைப் பார்ப்பேன். அவள் என்று என்னை அம்மா என்று அழைக்கிறாளோ, அதுதான் என் சாபவிமோசனம். என நேர்காணலில் பேசியிருந்தாள்.

இன்று நான் சொல்கிறேன். என் தாயார் ஒரு பாலியல் தொழில் செய்கிறார்கள். அவள் என் தாய் என்று கூற நான் வெட்கப்படவில்லை. பாலியல் தொழில் செய்வது அவள் தவறு என்றால்? அவளை அந்த சாக்கடைக்குள் தள்ளியது இந்த சமுதாயத்தின் தவறு. ஒரு முறை பஸ்ஸில் வரும்போது,   ஒரு அங்கிள் என் கால்களைத் தொட்டார் எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது, உடனே பக்கத்திலிருந்த பாட்டியிடம் கூறினேன். எனது பாட்டி அவரை செருப்பால் அடித்தார். யாரோ ஒருவர் கால்களைத்   தொட்டாலே இவ்வளவு அருவருப்பாக இருக்கும் என்றால், அந்த தொழில் செய்யும் என் அம்மாவிற்கு எவ்வளவு அருவருப்பாக இருக்கும், என்று என்னால் உணர முடிகிறது. அந்தத் தொழில் செய்து அவள் அனுப்பும் காசில் நான் வாழ்கிறேன் என்று நினைக்கும்போது அது அருவருப்பாக இல்லை வேதனையாக இருக்கிறது..அவள் செய்யும் எல்லா தியாகங்களுக்குப்   பரிகாரமாக,  நான் நல்ல மதிப்பெண் எடுத்து என் புகைப்படத்துடன் பெயர் பத்திரிகையில் இடம் பெறச் செய்வேன். அதில் நான் ஒரு விலைமாதரின் பெண். என் அம்மா தன்னை உருக்கி என் விளக்கை எரிய வைத்தாள் என அவளின் தியாகத்தை வெளிப்படுத்துவேன். வெட்கப்பட வேண்டியது நானும் எனது தாயாரும் இல்லை என்பதைச் சிறிது நாட்களாகவே புரிந்து கொண்டு விட்டேன். நான் என் அம்மாவை மீட்டெடுப்பேன். உங்கள் எல்லோரிடமும் ஒன்றே ஒன்று மட்டும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். என் பின்னால் என்னையும், என் தாயையும் பற்றி எப்படி வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. தயவு செய்து என் முன் அசிங்கமாகப் பேசாதீர்கள். நல்லவர்களை இழிவுபடுத்த நினைத்தால் இந்த சமூகம் என்ன பேசும் என்பது எனக்குத் தெரியும். அப்படி இருக்க அந்த தொழில் செய்யும் என் தாயைப் பற்றி, நீங்கள் எப்படி எல்லாம் பேசுவீர்கள் என்று எனக்குத் தெரியும். எந்தத் தொழில் செய்தாலும், அவள் என் தாய், எனக்காக வாழ்பவள் அவளைப் பற்றி கூறினால் எனக்கு வலிக்கும். தற்காப்பு வாதத்திற்கும், எதிர் வாதத்திற்கும் என்னிடம் ஆயுதம் இருக்காது. நான் நிராயுதபாணியாகத் தான் நிற்பேன். நிராயுதபாணியைத்   தண்டிப்பது நமது தமிழ் தர்மம் இல்லை. இதைப் பேசுவதற்கு எனக்கு மிகவும் தைரியம் தேவைப்பட்டது. நான் இந்தப் பேச்சுப் போட்டிக்குக் கருத்துக்கள் தேடவில்லை. பின்விளைவுகளை எப்படிச் சந்திப்பது என்றுதான் வலைத்தளத்தில் தேடினேன். தயாராக இருக்கிறேன். வாய்ப்பளித்தமைக்கு நன்றி எனக் கூறி மேடையை விட்டு இறங்கினாள். பத்து நொடிகளுக்கு அந்த அரங்கத்தில் மயான அமைதி. பள்ளியின் மேலாளர் எழுந்து நின்று கைதட்டத் தொடங்கினார். மொத்தப் பள்ளியும் எழுந்து நின்று கைதட்டியது . அதில் முக்கால்வாசி பேர் கண்களில் கண்ணீர். பேசி முடித்ததும் சுதந்திரா அரங்கத்தின் வெளியே சென்று விட்டாள். இரு நிமிடத்தில் அவளது வகுப்பாசிரியர் வழியே வந்து அவளை அழைத்து மேலாளர் உன்னை வீட்டிற்குப் போக சொல்லிவிட்டார் எனச்   சொல்லி மேலாளரின் வாகனத்தில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். சுதந்திராவிற்கு மனம் முழுவதும் பயம் அய்யய்யோ   முடிஞ்சுதா. நம்மல ஸ்கூல்ல இருந்து அனுப்பி விடுவார்களா? நம்ம    பேசியிருக்கக் கூடாது. நம்ம அம்மா இப்படி” “அப்படின்னு ஏதாவது கதை சொல்லி இருக்கலாமோ என யோசித்துக்கொண்டே வீட்டிற்கு சென்றாள். பாட்டியின் முகத்திலும் படபடப்பு என்னவாயிற்று என்று தெரியவில்லையே என்று. பேச்சுப் போட்டியில் பேசி ஏதாவது     ஏழரையை   இழுத்துட்டு   வந்துட்டாளா? என யோசித்தார். என்னடி ஆச்சு   எனப் பேத்தியைப் பார்த்துக் கேட்டார். பேசிட்டு வந்துட்டேன் எனச் சொல்லிவிட்டு அவள் அறைக்குள் சென்று விட்டாள். பாட்டி பேத்தி இருவருமே எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. இரவு சாப்பிட்டுவிட்டு சீக்கிரமாகவே படுத்து விட்டார்கள். அடுத்தாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்தபடியால், சிறிது   தாமதமாக சுதந்திரா எழுந்து, முந்தின நாள் நடந்ததை அசை போட ஆரம்பித்தாள். மனம் முழுவதும், என்னவாகுமோ நான் எப்படி என் நண்பர்களைச் சந்திப்பேன்? பேசும்போது இருந்த தைரியம் இப்பொழுது எங்குப் போனது? பேசாம பாட்டி கிட்ட சொல்லிட்டு   வேற ஊர் போயிடலாமா என இடைவிடாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.

பாட்டியின் புலம்பல் தாங்க முடியவில்லை. “என்ன செஞ்சிட்டு வந்தாளோ தெரியல. அவ அம்மா கேட்டா நான் என்ன பதில் சொல்வேன்? என, நாள் முழுவதும் புலம்பிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் ஒரு யுகமாகக் கடந்தது. சுதந்தர பயந்து கொண்டிருந்த அந்த திங்கட்கிழமையும் வந்தது. பள்ளிக்கூடம் கிளம்பும் சமயத்தில் வாசலில் ஒரு கார் சத்தம் கேட்டது. கதவைத் திறந்த பொழுது பள்ளியின் அறக்கட்டளை மேலாளர் இறங்கி வந்தார் என்னம்மா பேச்சுப்போட்டி என்கிற பெயரில் எங்கள எல்லாம் ஒரு புரட்டு புரட்டிட்ட என்றார். அவர் கையில் பேச்சுப் போட்டிக்கு முதல் பரிசுப் பொருளான கேடயம் இருந்தது. நீ ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்குவதை உங்கம்மா பேப்பரில் பார்க்கவேண்டாம், நேரிலேயே பார்க்கலாம் எனக்கூறிவிட்டு, சங்கீதா மேடம் என்ன காரிலேயே இருக்கீங்க? இறங்கி வாங்க என்றார். பாட்டி,   சுதந்திரா இருவருமே வாயடைத்து நின்றார்கள். இந்தத் தருணத்தை   சுதந்திரா எதிர்பார்க்கவே இல்லை. அம்மா வாகனத்தில் இருந்து இறங்கி வீட்டிற்குள் நடந்து வந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். அறக்கட்டளை மேலாளர் தொடர்ந்தார். உன்னோட பள்ளிப்படிப்பு செலவு, காலேஜ் செலவு எல்லாத்தையுமே எங்க அறக்கட்டளை ஏற்றுக் கொண்டுவிட்டது. உனது அம்மாவிற்கு அறக்கட்டளை சார்பில் ஒரு இடத்தில் வேலையும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. பள்ளிக்கூடத்தில் யாராவது உன்னைக் கிண்டல் அடித்தால், அவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று நோட்டீஸ் போர்டில் அறிக்கை ஒட்டப்பட்டுள்ளது. நீ எதற்கும் பயப்படாமல் பள்ளிக்கு செல்லலாம். நாங்கள் பணக்காரர்களிடம் இருந்து கொஞ்சம் பணம் பிடுங்கினாலும், பல ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறோம்.உனக்கும் உனக்குத் தாயாருக்கும் நாங்கள் உதவுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களுக்கு எதிர்காலத்தில் என்ன உதவி தேவைப்பட்டாலும் எங்களிடம் கேளுங்கள். நீ வேலையில் சேருகிறது வரை எங்கள் அறக்கட்டளை உன் கூடவே வரும். அதற்குப்பின் உனக்கு என்ன தோன்றுகிறதோ, உன்னைப்போல உள்ள குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு, எங்களுக்கு நீ உதவி வேண்டுமானால் உதவலாம் எனக்கூறிவிட்டு எல்லோரிடமும் தைரியமாக இருங்கள் என்று அவர் விடைபெற்றார்.

                                                      credit: third party image reference

அவர் சென்ற பிறகு நான் பெத்த மகளே என்று சங்கீதாவின் தாயார் சங்கீதாவை கட்டிப்பிடித்து அழுதார். சுதந்திரா சிறிது தூரம் தள்ளி நின்று தாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தாயைக் கட்டிப்பிடித்தபடி அழுதபடி தன் மகளை எட்டிப் பார்த்தாள் சங்கீதா. இருவருமே ஒருவரிடம், ஒருவர் சிலகணங்கள் பேசாமலே நின்றார்கள். இந்தத் தருணம் நடக்கும் என்று தெரிந்திருந்தாலும், அதை எப்படி அணுகுவது என்று இருவரும் யோசித்து வைக்காமலிருந்தபடியால் இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா தைரியத்தையும் திரட்டிக்கொண்டு சங்கீதா வா என அழைத்தாள் .அந்த கணம் சுதந்திரா வின் இருதயம் மார்பு கூட்டுக்கு வெளியே தெறித்து விடும்படி துடித்தது. அம்மா என்று அழைக்க வாயைத் திறந்தால் உள்ளிருந்து வார்த்தை வரவில்லை வெறும் அழுகை மட்டும் தான் வந்தது. பாட்டி உடனே அம்மான்னு சொல்லுடி எனக் கூறியதும் ஓடி வந்து தன் தாயைக் கட்டி அணைத்து கதற ஆரம்பித்தாள்.

நான்கு வகையான மனிதர்களைப் பார்க்கிறோம். முதல் வகை,

 சமுதாய சீர்கேட்டுக்குக் காரணமாய் இருப்பவர்கள்.

  • ·         சங்கீதாவின் தந்தை தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையைச் செய்யத் தவறியவன்.
  • ·         சங்கீதாவை காதலித்தவன் தன்னை நம்பி வந்தவளைக் கழுத்தறுத்து, துரோகம் செய்வதையே தொழிலாக கொண்டிருப்பவன். தீமை செய்வதைக் கடமையாக வைத்திருப்பவன்.
  • ·         சங்கீதாவின் தாயார் நல்லது செய்ய வேண்டும் என மனதில் நினைத்து இருந்தாலும், கோபத்தின் காரணமாகச் செய்ய வேண்டிய கடமையைச் சரியாகச் செய்யாமல் விட்டது.

சமுதாய சீர்கேட்டுக்குப் பலியானவர்கள்

  • ·         சங்கீதா, எல்லா திசைகளிலும் இருந்து வந்த அடிகளை, தாங்க முடியாமல், ஒரு கட்டத்தில் போராட விரும்பாமல் சீர்கேட்டிற்கு பழியானது
  • ·         சுதந்திரா, எந்த தவறுமே செய்யாமல், தேவையில்லாத நேரத்தில் தேவை இல்லாதவனுக்குப் பிறந்ததால் மட்டுமே வாழ்க்கையில் கிடைக்கவேண்டிய பல இன்பங்களை இழந்து, அவள் அனுபவித்த கொடுமைகள்.

சமுதாயத்தைச் சீர்படுத்துபவர்கள்

  • ·         அறக்கட்டளை மேலாளர் எந்த உதவியும் யாரும் கேட்காமலே சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை,   மீட்டெடுத்தது, மீட்டு எடுத்தது மட்டும் இல்லாமல், மறுவாழ்வு அளித்து, பின் விளைவுகளையும் யோசித்து, அதற்கான வழிமுறையும் கண்டுபிடித்து, நாங்கள் நல்லவர்கள். நல்லவர்களும் இந்த சமுதாயத்தில் இருக்கிறார்கள், என வாழ்வதற்கு அவர்களுக்குத் தைரியம் கொடுத்து வாழ வழி வகுத்தவர்கள்.

 

  • ·  சாக்கடையில் விழுந்தாலும், எப்பொழுது சந்தர்ப்பம் வரும் வெளியே வரலாம் என்று விடுதலையின் தீயை உள்ளேயே எரிய வைத்துக் கொண்டிருந்த சங்கீதா
  • ·                                                                                                              தாயை பழிக்காமல், தாயின் வலியை உணர்ந்து அவளுக்காகத் துணை நிற்க மனதைத் தயார்ப் படுத்திய சுதந்திரா

நான்காவது வகையினர் பெயர் இல்லாதவர்கள் சுதந்திராவை காப்பாற்றி, பாட்டியிடம் ஒப்படைத்த அந்தப் பெயர் இல்லாத பாட்டி. இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என வகுக்க முடியாது.

இதில் எந்த வகையில் யார் இருந்தாலும், முதல் வகையில் இருப்பவர்கள் திருந்த வேண்டும், இரண்டாம் வகையில் இருப்பவர்கள் தனக்கான குரலைத் தான் எழுப்பிக்கொண்டே இருக்கவேண்டும், சுதந்திராவின்      குரல்தான் அவர்கள் குடும்பத்திற்கு சுதந்திரம் கொண்டு வந்தது. மூன்றாம் வகையில் இருப்பவர்கள் சோர்ந்து போகாது முடிந்தவர்களுக்கு எல்லாம் உதவ வேண்டும், ஒருவேளை அவர்கள் செய்யும் உதவி தவறான நபருக்குச் சென்று அடைந்தாலும், பின் வாங்காது மீண்டும், மீண்டும் உதவி செய்வதைப் பழகிக்கொள்ளவேண்டும்.

இதைக் கூறுவதற்கு எனக்குத் தகுதி இருப்பதாக நான் எண்ணவில்லை.   ஆனால் இது வெகு நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டே இருந்த ஒரு விஷயம். நாம் தப்பானவர்கள் எனப் பார்க்கும் ஒரு நபரின் பின்புலம் எவ்வளவு கொடுமையானது என வார்த்தைகளில் வடிக்க எண்ணினேன் முடிந்த அளவு முயற்சித்திருக்கிறேன். தவறுகள் இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.   ஏதாவது கூற விரும்பினால் கருத்துரையில் பதிவிடுங்கள்.


10 கருத்துகள்:

  1. Chanceless ending.... congratulations for ur successful career... and we want more from ur writings....👍🏼

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள்! அருமையான பதிவு. சமுதாய அக்கறை நிறைந்த கதை. வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் இல்லாமல் சமுதாயத்தை பழுது பார்க்கும் விதமாகவும் இக்கதை அமைந்துள்ளது.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. Heart touching story .....this is not only a story, it's fact in our society ......congrats and thanks too for bringing out such thoughts ...all the best

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் சகா...
    தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திக்கலாம்

      நீக்கு
  5. Amazing ma, nice knot and good narration. Your comment to your story, is more sound and strong.

    பதிலளிநீக்கு