சனி, 20 ஜூன், 2020

சுதந்திராவின் சங்கீதா

                                                    Photo by Michael Dziedzic on Unsplash

Second part, இரண்டாம் பாகம்அன்று சுதந்திரா பள்ளியில் இருந்து வரும் பொழுது, முகம் வாடி வந்தாள்.  வீட்டிற்குள்  நுழைந்ததும்பாட்டி.. இந்த ரேஷ்மி, இன்னைக்கு என்ன செய்தா தெரியுமா? சிரேஷ்டா மிஸ் கிட்ட  செமையா மாட்டினா இன்னிக்கிபாட்டி… இந்த கோகுல் இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தான்னா , நான் ஒருநாள் கண்டிப்பா மிஸ் கிட்ட சொல்லி கொடுத்துடுவேன். இப்படி ஏதாவது வாய் ஓய்வே இல்லாது  பேசிக் கொண்டே இருக்கும்.  எப்படா இவ வாயை மூடுவா என யோசித்து விட்டு, ஒரு கட்டத்தில் வாய மூடிட்டு சாப்பிடு  என பாட்டி திட்டும் வரை, பேசும் அந்த வாய்,  இன்று எதுவும்  பேசாமல் அமைதியாக தேனீர் அருந்திக் கொண்டு இருந்தது.  அவளது மவுனத்தை தாங்க முடியாத பாட்டி   “ என்ன கண்ணு அமைதியா இருக்க, கிளாஸ்ல யார்கிட்டயாவது சண்டை போட்டியா என்ன? என்று கேட்டார்.   ஸ்கூல்ல பேச்சு போட்டி வச்சிருக்காங்க   என்றாள்.  அதனால என்ன கண்ணு?, நீதான் இந்திராகாந்தி அம்மா மாதிரி பேசுறியே, எதுக்கு மூஞ்ச இப்படி தூக்கி வச்சுக்கிட்டு இருக்கஎன பாட்டி கேட்டாள்.  ஒரு இருபது நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு,   பாட்டியின் கண்களை நேராக பார்த்து . அன்னையர் தின போட்டி பாட்டி. எல்லோரும் அவங்க, அவங்க அம்மாவ பத்தி பேசணும்என்றாள். நான் பேர் கொடுக்கவே இல்லை பாட்டிஆனா மிஸ் எல்லாத்துக்கும் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாடி வந்து பெயர் கொடுத்த, இதுக்கு மட்டும் அமைதியாக உட்கார்ந்து இருக்க, உங்க அம்மா பாரின்ல தான இருக்காங்க, அம்மாவைப் பத்தி பேசினா என்ன கொறைஞ்சா போயிடுவ?ஒழுங்காப் பேசு.  இந்த போட்டியில பரிசு வாங்கினா  ஸ்காலர்ஷிப் கிடைக்கும், ஏனோ தானோன்னு இருந்திராத, ஒழுங்கா தயார்  பண்ணி பேசு,அப்படின்னு சொல்லிட்டு மிஸ் பெயர் எழுதிட்டாங்க, பாட்டி என்றாள். பாட்டிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பாட்டி, பேத்தி இருவருமே  அமைதியாகவே மீதமுள்ள நேரத்தை கழித்தார்கள்.

 

சுதந்திரா ரொம்ப நேரமாக ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள்.  பின் வீட்டுப்பாடம் எழுதி விட்டு தூங்கி விட்டாள். சுதந்திராவின் அன்னை இரவு போனில் தனது தாயிடம் குழந்தை தூங்கி விட்டாளா என்று  கேட்டாள். ஆமா சீக்கிரமா தூங்கிட்டா என  கூறினாள். பள்ளிக்கூடத்தில் நடக்கவிருக்கும்  பேச்சு போட்டி பற்றி, பாட்டி சுதந்திராவின் அம்மாவிடம் கூறினாள்.   “இது வேறவா, ஏற்கனவே நான், என் மகள் முகத்தில் எப்படி முழிப்பேன்? என்று வருடக்கணக்காக யோசித்துக் கொண்டிருக்கிறேன், அது போதாது என்று, இவள் இப்படி எல்லாம் என்னால் அனுபவித்தால், அவள் என்னை அம்மா என்று அழைப்பதே  சந்தேகத்திற்கிடமாங்கிடும் என்றாள். சரி தேவை இல்லாத கதைகள் இப்ப எதற்கு? அவ முழிச்சிட்டானா யார்கிட்ட பேசுறேன்னு கேட்பா, நீ போன வை. நான் பிறகு பேசுறேன்என்ன சுதந்திரா வின் பாட்டி அழைப்பை துண்டித்தார். சுதந்திரா தன் தாயை பற்றி ஏதாவது கேட்பாள் என பாட்டி எதிர்பார்த்தாள். ஆனால் மறுநாள் காலையில் வழக்கம் போல எழுந்து சுதந்திரா பள்ளிக்கு சென்று விட்டாள். வழக்கமான உற்சாகமான பேச்சு இல்லை என்றாலும், சுதந்திரா முகத்தில் குழப்பங்கள் இல்லை. குழந்தை, ஏதோ முடிவெடுத்து விட்டது என பாட்டி நினைத்தாள். அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் சுதந்திரா அதிகம் பேசவில்லை. போனில் ஏதோ நோண்டி கொண்டிருப்பாள், பின் போனைப் பார்த்து பேப்பரில் எழுதுவாள். சினேகிதிகளிடம் அதிகமாக உரையாட வில்லை. பாட்டிக்கு பயமாக இருந்தது, அம்மாவை பற்றி எழுதச் சொன்னால், அம்மாவை பற்றி என்னிடம் தானே கேட்கவேண்டும் இவள் என்ன, போனை நோண்டிக் கொண்டு இருக்கிறாள் போனா அவளுக்கு, அவள் அம்மாவைப் பற்றி கூறப் போகிறது? என யோசித்து யோசித்து களைத்துப் போனாள். ஆனால் சுதந்திராவிடம் அந்த கேள்வியை கேட்க பாட்டிக்கு பயம். சுதந்திராவின் பதில் கேள்விகளை ஜீரணித்து கொள்வதற்கு, பாட்டி இன்றைக்கு தயாராக இல்லை.

பேச்சு போட்டியின் முந்தின நாள், சுதந்திரா வெகுநேரமாக விழித்து இருந்து எழுதிக்கொண்டிருந்தாள். சுதந்திராவின் அன்னை தனது தாயிடம் பேச்சுப்போட்டியின் நேரத்தை கேட்டு வைத்துக் கொண்டாள். மறுநாள் பேச்சுப்போட்டி ஆரம்பித்தது. முதலில் அர்ச்சனா தனது அம்மாவை பற்றி பேசினாள். அடுத்தது சுஷ்மிதா இடையில் சிறிது மறந்து போனாலும் அதை சிரித்தே மறைத்து, ஒரு வழியாக பேசி முடித்தாள். ரோஷினி பேசி முடித்ததும் எல்லோரும் முடிவே செய்துவிட்டார்கள், பரிசு ரோஷினிக்கு தான் என்று. அடுத்தது சுதந்திரா மேடையேறினாள். ஐந்து நொடிகள் அமைதியாக நின்றுவிட்டு பெரிதாக மூச்சை உள்ளிழுத்து பேச ஆரம்பித்தாள். அர்ச்சனாவின் அம்மா மருத்துவர், வெகுநாளாக தான் ஆசைப்பட்ட படிப்பை படித்து முடித்துவிட்டு தன் சந்தோஷத்திற்காகவும், தனது மகளின் சந்தோஷத்திற்காகவும் வேலை பார்க்கிறார். அவர் தன் துறையில் எவ்வளவு திறமையானவர், மக்களுக்கு எவ்வளவு உதவி செய்கிறார் என்பதை, அர்ச்சனா கூற கேட்டோம். சுஷ்மிதாவின் அம்மா பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக இருக்கிறார், அவர் ஸ்மிதாவுக்கு என்னவெல்லாம் செய்கிறார் என்பதை சுஷ்மிதா சொல்லக் கேட்டோம். ரேஷ்மாவின் அம்மா ஒரு சமூக ஆர்வலர் சொல்லவே வேண்டாம், நாட்டிற்கும், வீட்டிற்கும் ரேஷ்மாவின் அம்மா எவ்வளவு நல்லது செய்கிறார்கள் என்று. ரேஷ்மாவின் அம்மாவின் புகைப்படங்களை நான் பத்திரிக்கைகளில் பார்த்திருக்கிறேன். அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை நமது ஸ்கூலில் அச்சீவர் போர்டில் தொங்கவிடப்பட்டிருந்தது அதை நான் வாசித்திருக்கிறேன். பின்னாளில் ரேஷ்மாவின் அம்மாவைப் போல், இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எனது மனதில் தோன்றும். சாதனை படைத்த, அல்லது படைத்துக் கொண்டிருக்கிற அம்மாக்கள் பட்டியலில் என் அம்மா வரமாட்டார். என் அம்மாவை புகைப்படத்தை தவிர இதுவரை நான் பார்த்ததே இல்லை. என்   அம்மா என்ன வேலை செய்கிறார் என்று, ஒரு வருடத்திற்கு முன் என்னைக் கேட்டால் எனக்கு சொல்லத் தெரியாது. ஆனால் ஒரு வருடத்திற்கு முன் ஒரு நேர்காணலில், என் அம்மாவை பார்த்தேன். அதன் பின் தான் என் அம்மாஎன இங்கே இப்படி சுதந்திரா பேசிக்கொண்டிருக்கும்போது, அவளது அம்மா சங்கீதா, வெகுதூரத்தில் வெட்டவெளியை வெறித்துப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தார். மனம் 14 வருடம் பின்னோக்கி சென்றது. அப்பொழுது, அந்த ஊரில் இருந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் சங்கீதா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். படிப்பில் ரொம்ப ஆர்வம் இல்லை, ஆனால் எப்படியாவது சங்கீதாவை படிக்க வைத்துவிட வேண்டும் என்ற வெறியில் சங்கீதாவின் தாயார் இருந்தார். அதற்குக் காரணம் இருந்தது. எப்பொழுதுமே குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் கணவர். குடித்து விட்டு வந்து அடித்ததனாலேயே, சங்கீதாவிற்கு அப்புறம் எந்த குழந்தையும் வயிற்றில் தங்கவில்லை. எல்லாவற்றிற்கும் காரணமாக அவன் இருந்துவிட்டு, ஆம்பள பிள்ளை பிறக்கவில்லை என்று அதற்கும் சேர்த்து அடிப்பான் அந்த குடிகாரன். சங்கீதா, வயதிற்கு வந்த உடனேயே அவனது குடிகார நண்பனின் மகனுக்கு  திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றான்.  அப்பொழுது சங்கீதாவின் தாயார்தான், பிள்ளை பத்து வரைக்குமாவது படிக்கட்டும், பத்து பாத்திரம் தேய்த்து வரும் வருமானத்தில், கணவன் பிடுங்கியது போக மிச்சத்தை வைத்து, கணவனுக்கும் சோறு போட்டு, பிள்ளைக்கும் சோறு போட்டு வளர்ப்பது, எவ்வளவு கஷ்டம் என உணர்ந்ததால், மகள் படித்து விட்டால் ஓரளவு குடும்பம் உயரும் என நினைத்தாள். சங்கீதா பள்ளிக்குப் போகும் போதும், வரும் போதும் டீக்கடையில் ஒருவன் நின்று பார்த்துக் கொண்டே இருப்பான். முதலில் சாதாரணமாக பார்க்க ஆரம்பித்தான். பின் சிரிக்க ஆரம்பித்தான். குனிந்த தலை நிமிராமல் போனாலும், மாதக்கணக்கில் ஒருவன் பார்த்தது, அவள் மனதிற்கு இதமாக இருந்தது. மெல்ல அவனை கடைக்கண்ணால் பார்க்க ஆரம்பித்தாள். அவளது ஆதரவு கிடைத்தவுடன் கடைப் பையனிடம் முதன்முதலில் சாக்லேட் கொடுத்துவிட்டான். முதலில் வாங்கவில்லை, இரு வாரங்கள் கழித்து வாங்கினாள். அதன்பின் ஸ்டிக்கர் பொட்டு, ரிப்பன் என ஒன்றொன்றாக பரிசளிக்க ஆரம்பித்தான். இது நடந்து கொண்டிருக்கும் போது வீட்டில் அப்பா அட்டகாசமும், அப்பாவின் மேல் உள்ள எரிச்சலை அம்மா இவள் மேல் காட்டுவது என்பதும் வாடிக்கையாக இருந்தது. ஒருவரும் அன்பு காட்டாத நிலையற்ற தன்மை வீட்டில், அன்பே உருவாய் இவள் வருகைக்காக மட்டுமே காத்திருக்கும் அவன் தெருவில்.

                                                Photo by Milada Vigerova on Unsplash

ஒருநாள் தோழிகளோடு பேசிவிட்டு வீட்டிற்கு சிறிது தாமதமாக சென்றதால் அப்போதுதான் குடித்துவிட்டு வந்த தந்தை எவன் கூட போயிட்டு வரே எனக்கேட்க,  அவள் பதில் கூறும் முன்னே தாயிடம் திரும்பி என்னடி பொட்ட புள்ள பெத்து வச்சிருக்க எனக்கேட்டார். ஏற்கனவே கணவன் குடித்து விட்டு வந்த கோபத்தில் இருந்த தாய் உன் பிள்ளை தானே உன்னை மாதிரி தானே ஊர் மேயும் எனத் திட்டினார். எந்தத் தப்பும் செய்யாமல், அன்னையும், தந்தையும் மாறி, மாறி திட்டியதால் மனமுடைந்து போனாள். தவறே செய்யாமல் திட்டு வாங்குவதற்கு, தவறு செய்துவிட்டு, திட்டு வாங்குவது உசிதம் என நினைத்தாள். அவனை பார்த்தால்தான் என்ன? அவனுடன் பேசினால் தான் என்ன? என்று நினைக்க ஆரம்பித்தாள். அதன் பின் வந்த நாட்களில் அவனுடன் அவளுடனான தொடர்பு அதிகமாகியது. ஒருநாள் அதிகம் குடித்துவிட்டு அப்பா, அம்மாவோடு சேர்த்து இவளையும் அடித்தார். அடித்ததில் முகம் வீங்கி போக அவன் பாசத்தோடு கேட்டான் என்னோடு வந்து விடுகிறாயா?” என்று. இந்த நரகத்தில் இருந்து எப்பொழுது மீளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அவளுக்கு, அவனது வார்த்தைகள் காதில் தேனாய் பாய்ந்தது, ஆனாலும் தனக்காய் வாழ்ந்து வரும் அம்மாவை பற்றி ஒரு கணம் யோசித்தாள் எங்க அம்மாவுக்கு எல்லாமே நான்தான், நான் போய் விட்டால் எங்க அம்மா ஏதாவது செய்து விடுவாள் என கூறி மறுத்தாள். ஒரு மாதம் கழித்து குடிக்க காசு இல்லாததால், அப்பா ஒருவரிடம் கையேந்த உன் பொண்ண கூட்டிட்டு வா. ஒரு மாதம் முழுக்க குடிக்க காசு தருகிறேன் என்று அவர் கூற, கை விரல் நடுக்கம் தாங்க முடியாமல் வேறு வழி இன்றி சங்கீதாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனார். அம்மா ஒரு பெரிய கட்டையை வைத்து அவரை அடித்து தள்ளி விட்டு மகளை காப்பாற்றினாள். இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்று உணர்ந்த சங்கீதா, மறுநாள் அதிகாலையில் யாருமறியாமல் அவனோடு சென்றுவிட்டாள்.

விதியின் விளையாட்டு வேறுவிதமாக இருந்தது. அவன் நெடுந்தூரம் அவளை அழைத்துச் சென்றான். அவள் மனதில். தான் வாழ்ந்த நரகத்தை விட்டு நெடுந்தூரம் செல்வது போல் உணர்ந்தாள். ஆனால் உண்மையிலேயே அந்தக் கயவன் அந்த நரகத்தை விட மிகவும் கொடியதாக வேறொரு நரகத்தை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தான். அவன் அவளிடம் காரியம் முடிந்ததும் சிவப்பு விளக்கு தரகரிடம் அவளை ஐந்து லட்சத்திற்கு விற்று விட்டு சென்று விட்டான். அவன் அவளை அங்கு விற்கும் போது அவள் ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தால், இதற்கு மேல் குழந்தையை அழிக்க முடியாததால் அந்த குழந்தையைப் பெற்றுக்கொள்ள தரகர் சம்மதித்தார். அது பெண் பிள்ளையாக இருந்தால் இங்கு வளர்க்கலாம் என்றும், ஆண் பிள்ளையாக இருந்தால், அவர் சொல்கிற இடத்தில் கொண்டு போய் விட வேண்டும் என்று கூறினார். துரதிஷ்டவசமாக பெண் குழந்தை பிறந்தது. அந்த சிறு வயதிலும் தான் பெற்ற குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அவளுக்குப் புரிந்தது. அந்த மாதிரி இடங்களில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக கூட அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லமாட்டார்கள். எங்கிருந்தோ ஒரு பாட்டி வந்து பிரசவம் பார்த்தாள். குழந்தை பிறந்து மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அந்த பாட்டி வந்தபொழுது, சங்கீதா அந்த பாட்டியிடம் என் வாழ்க்கைதான் நாசமாகிவிட்டது எனது குழந்தையின் எதிர்காலமும் நாசமாக கூடாது. எனக்கு தயவு செய்து ஒரு உதவி செய்யுங்கள் என்று கெஞ்சினாள். “தரகர் எனக்கு தரும் கமிஷனில் மாதாமாதம் பாதியை உன்னிடம் தந்து விடுகிறேன். நான் சொல்கிற இடத்தில் என் குழந்தையை விட்டு விடுங்கள் என்று கதறினான். அந்தப் பாட்டி என்ன நினைத்தாலோ தெரியவில்லை சரி நீ சொல்றதை செய்கிறேன், ஆனால் கமிஷன் முக்கியம் என்றார். “இங்கு இருந்தால் பிள்ளைக்கு சீர் தட்டிவிடும், சிறிது நாட்கள் கழித்து பிள்ளையை இங்கு கொண்டு வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு பிள்ளையை அழைத்து சென்றாள். சங்கீதா அவள் தாயிடம் தான் குழந்தையை ஒப்படைக்க கூறியிருந்தாள். அந்தப் பாட்டியும் குழந்தையை சங்கீதாவின் தாயிடம் ஒப்படைத்தார். குழந்தையோடு ஒரு கடிதத்தையும் வைத்திருந்தாள். நரகத்தில் இருந்து மீள்வதாக நினைத்து எறிதலில் விழுந்துவிட்டேன். திரும்பி வரும் நிலையில் நான் இல்லை. என் குழந்தையையாவது காப்பாற்று அம்மா என்று எழுதி இருந்தது. சிறிது வருடங்களில் சங்கீதாவின் தந்தை குடித்தே இறந்துவிடவே, சங்கீதா, பாட்டியையும், பேத்தியையும் அந்த ஊரை விட்டு யாருக்கும் அறியாத ஒரு ஊரில் வாழச் செய்தாள். குழந்தைக்கு அம்மா பாரினில் இருக்கிறாள் என்று சொல். நல்ல பள்ளியில் படிக்க வை எப்படியாவது இங்கிருந்து வெளியே வந்து விடுவேன்என தாயிடம் கூறினாள்.  தனக்கு தரப்படாத சுதந்திரங்கள் எல்லாவற்றையும் தன் மகளுக்கு கொடுக்க விரும்பியதால் தன் மகளுக்கு சுதந்திரா என பெயரிட்டாள் பெயரில் மாத்திரம் சுதந்திரத்தை வைக்கவில்லை, அவள் நினைத்த மாதிரி எல்லா சுதந்திரத்தையும், தன் தாயை வைத்து தன் மகளுக்கு கொடுக்க வைத்தாள்.

                                                              credit: third party image reference

அந்தத் தரகர் அவளிடம் தெளிவாக உன்னை 5 லட்சம் கொடுத்து வாங்கி இருக்கிறேன். உன்னை வைத்து 10 லட்சம் சம்பாதித்த பின் நீ இந்த இடத்தை விட்டு செல்லலாம் என்று கூறினார். 13 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது என்றாலும், இன்றும் அவள் கண்ணத்தில் நீர் வடிந்தது. அவளது எண்ணம் ஏக்கம் எல்லாம், என்னை என் குழந்தை ஏற்றுக் கொள்வாளா? என்பதுதான் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், தான் வாழ்வது தன் குழந்தைக்காக என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஒரு வேளை, அவள் என்னை பார்த்தால், எவ்வளவு அசிங்கமாக பார்ப்பாள்? இவரின் பெண்ணாய் பிறந்ததால் தானே நமக்கு இவ்வளவு அவமானம். என்றுதானே நினைப்பாள் இந்த வேலை செய்வதற்கு செத்திருக்கலாமே அம்மா என்று கேட்டால் அதற்கு நான் என்ன பதில் சொல்வேன். என்று பல பதில்கள் இல்லாத கேள்வியை, அவள் தினம்தினம் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.

இந்த அபலை தாயின் மன வேண்டுதல் இறைவனை எட்டி இருக்குமா? சுதந்திராவின் பார்வையில் சங்கீதா அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்……

Second part, இரண்டாம் பாகம்

3 கருத்துகள்: